எட்டப்ப நாயக்கர்கள்
எட்டப்ப நாயக்கர்கள் மதுரை நாயக்கர்களின் ஆட்சி காலத்தில் எட்டயபுரம் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள்.
வரலாறு
"விஜயநகரப் பெரு மன்னரது ஆட்சி நிலைகுலைந்த பின்பு ஆந்திர நாட்டில் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டன. ஆந்திரத் தலைவர் பலர் தம் பரிவாரங்களோடு தமிழ் நாட்டிலே குடியேறி வாழத் தலைப்பட்டார்கள். இங்ஙனம் தென்னாட்டிற் போந்த வடுகத் தலைவர்களில் ஒருவர் எட்டப்ப நாயக்கர். அவர் பெயரால் அமைந்த ஊர் எட்டயபுரம் ஆகும்" என ரா.பி. சேதுப்பிள்ளை 1946-ல் வெளியான தனது 'தமிழகம் ஊரும் பேரும்' என்ற நூலில் 'குலமும் கோவும்' என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களான இவர்கள் தமிழகத்தின் தெற்கு பகுதியில் குடியேறினர். இதனை ஆண்ட மன்னர்கள் 'எட்டப்பன்' என அழைக்கப்பட்டனர். பொ.யு.1567-ல் ஜகவீர ராம குமார எட்டப்ப நாயக்கர் எட்டயபுரம் நகரத்தைத் தோற்றுவித்தார். அங்கு ஒரு சிவன் கோயிலைக் கட்டினார். எட்டப்ப மன்னர்களின் வழி வந்த பெண்களுக்கும், மகாராஜாவின் துணைவியர்களுக்கும் அவர்கள் பெயருடன் 'கண்ணப்பன்' என்ற பெயரை சேர்ந்து மக்கள் அழைத்தனர். மன்னர் எட்டப்பன் எல்லோரையும் தன் பிள்ளைகளாக பாவித்தது போல, மன்னர் வழி வந்த பெண்களும் மக்களை கண் போல் காத்ததால் 'கண்ணப்பன்' என்று பெயர் வந்தது.
தொன்மம்
ஆந்திரம் மாநிலம் சந்திரகிரியில் பெரியப்பா நாயக்கர் என்னும் சிற்றரசு ஆட்சியை நிறுவியது. இவர்கள் ராஜகம்பளம் இனத்தில் உள்ள சில்லவார் பிரிவைச் சேர்ந்தவர்கள். முகலாய மன்னர்களில் ஒருவர் கம்பளத்து இனத்தின் பெண்ணை கேட்டதாகவும் அதனால் தங்கள் இனப் பெண்களை காப்பாற்ற தெற்கு நோக்கி வந்ததாக நம்பப்படுகிறது. இக்கதை தொட்டிய நாயக்கர்களின் கதையினை போலவே உள்ளதாக அறிஞர்கள் கருதினர்.
எட்டு அப்பன்
எட்டப்ப மன்னர்களின் முன்னோர் 'சந்திரகிரி' என்ற ஊரில் ஆட்சி செய்தனர். அவர்களின் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் குமாரமுத்து நாயக்கர். இவருக்கு இரண்டு மகன்கள். நல்லமநாயக்கர், வடலிங்கமநாயக்கர். மூத்தவர் நல்லமநாயக்கர், அப்போது விஜய நகரத்தை ஆண்ட சாம்பு மகாராஜாவை அக்கால முறைப்படி தரிசிக்க சென்றார்.
விஜய நகரத்தில் அரசரின் கோட்டையின் வடக்கு வாசலை சோமன் என்ற யாராலும் தோற்கடிக்க முடியாத மல்யுத்த வீரன், தன் தம்பிகளுடன் காவல் காத்து வந்தான். நீளமான தங்கச் சங்கிலியின் ஒரு முனையை இடது காலிலும், மற்றொரு முனையை வடக்கு வாசல் சுவற்றின் ஒரு பகுதியிலும் கட்டிக் கொண்டு காவல் காத்தான். மகாராஜாவை தரிசிக்க யார் வந்தாலும் ஒன்று அந்த தங்க சங்கிலியின் கீழ் தலை குனிந்து தரிசிக்க செல்ல வேண்டும் அல்லது மல்யுத்த வீரனுடன் போட்டியிட்டு அவனை வென்ற பின் தரிசிக்க வேண்டும் என்ற நடைமுறையை சோமன் வைத்திருந்தான். .
மகாராஜாவைக் காணவரும் மக்கள், அவரது ஆட்சியின் கீழ் உள்ள குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சோமனின் சங்கிலியின் கீழ் தலை குனிந்தே சென்று தரிசித்தனர். ஆனால் நல்லமநாயக்கர், சோமனுடன் மல்யுத்தம் செய்து அவனை வென்றார். சோமனின் தலையைத் துண்டித்தார். ஒரு வல்லயத்தில் குத்தி அவன் தலையை ஒரு கையில் வைத்துக்கொண்டும், சோமனின் ரத்தத்தில் நனைந்த அவன் உடையை மறுகையில் வைத்துக்கொண்டும் மகாராஜாவின் தர்பார் மண்டபத்தில் விழுப்புண்களுடன் சென்று நின்றார். சோமனின் தம்பிகள் கண்ணீருடன் நல்லநாயக்கர் பின்னால் சென்றனர்.
மகாராஜா அக்கால வழக்கப்படி, நல்லமநாயக்கரின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு பல கிராமங்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கினார். சோமனின் தம்பிகள் கதறி அழுததைக் கண்ட ராஜா நல்லமநாயக்கரிடம் அவர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு பணித்தார். இதன்படி சோமனின் எட்டு தம்பிகளுக்கும், தந்தையாக (அப்பனாக) நல்லமநாயக்கர் இருக்கச் சம்மதித்ததால் அவரது பரம்பரைக்கு 'எட்டப்பன்' (எட்டு அப்பன்) என்ற பெயர் வந்தது.
சோமன் தலை விருது
விஜயநகர அரசர் நல்லமநாயக்கனுக்கு தங்கத்தால் ஆன சோமன் தலை விருது அளித்து, ரத்தக்கறை படிந்த அவன் துணிகளை கொடியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதித்தார். இந்த சோமன் தலை விருதை நல்லமநாயக்கர் பட்டம் சூட்டும் போது, தன் இடது கணுக்காலில் அணிந்து பட்டம் சூட்டினார். இந்த நிகழ்வு இவ்விருதை எட்டப்ப மகாராஜாக்கள் பட்டத்திற்கு வரும்போது தமது இடது கணுக்காலில் அணிந்து கொள்ளும் மரபாக மாறியது. சோமன் தலை விருதை, காலில் அணிந்தவுடன் அதில் உள்ள நாக்கு இடது வலதாக அசைந்தால் அந்த நபரை எட்டப்ப மகாராஜாவாக சோமன் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் என்று கூறப்படுகிறது.
வழிபாடு
எட்டப்ப நாயக்கர்களின் குல தெய்வம் ஜக்கதேவி. இந்த தெய்வத்திற்கு உருவம் இல்லை. இலந்தை மரத்தை வழிபட்டனர்.
ஆட்சி
மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய பாளையங்களில் ஒன்றாக எட்டையபுரம் இருந்தது. எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி, போடிநாயக்கனூர், சேந்தமங்கலம், சாப்டூர் போன்ற பாளையங்களை எட்டப்பர் வம்சத்தினைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தனர். 4,15,428 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பாளையம். நானூற்றி இருபத்தியிரண்டு கிராமங்கள் இதன் ஆட்சியில் கீழ் இருந்தன. வண்டல் மண்ணில், பருத்தி, கம்பு, சோளம், மிளகாய் போன்றவை விளையும் பகுதியாக இருந்தது. எட்டப்ப நாயக்கர்கள் வலிமையான படைபலம் கொண்டு இருந்தனர். அழகு முத்துக்கோன் என்ற சேர்வை படைத்தளபதியாக இருந்தார். மன்னர் படத்தை மக்கள் வீடுகளிலும் வைத்திருந்தனர்.
எட்டப்ப நாயக்க மன்னர்கள் வரிசை
ராஜாக்கள்
- ஜகவீர ராம குமார எட்டப்ப நாயக்கர் - 1567-ல் எட்டயபுரத்திலுள்ள, சிவன் கோயிலைக் கட்டினார்
- ஜகவீர ராம எட்டப்ப நாயக்கர் - 22-வது ராஜா - 1636
- ஸ்ரீ வீரப்ப ராம் கிட்சுசா - 23-வது ராஜா (எடவங்கைக் கெச்சுலப்ப நாயக்கர்) - 1636-1659
- ஜகவீர ராம ஏடவங்கை நாயக்கர் - 24-வது ராஜா - 1659-1680
- ஜகவீர ராம கிச்சுல I எட்டப்ப நாயக்கர் - 25-வது ராஜா - 1680
- ஜகவீர ராம சூர கிச்சுலா II எட்டப்ப நாயக்கர் - 26-வது ராஜா - 1710
- ஜகவீர ராம வெங்கடேஸ்வரா II எட்டப்ப நாயக்கர் - 27-வது ராஜா 1710-1725 (மந்திரம் மற்றும் மாந்திரீகத்தில் தேர்ச்சி பெற்றவர்)
- ஜகவீர ராம II எட்டப்ப நாயக்கர் - 28-வது ராஜா - 1725
- வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் - 29-வது ராஜா - 1783
- முத்து குருமாலி துரை - 30-வது ராஜா - 1783-1784
ஜமீன்தார்கள்
- முத்து ஜகவீர ராம குமார எட்டப்ப நாயக்கர் 31-வது ராஜா மற்றும் எட்டயபுரத்தின் முதலாவது ஜமீன்தார் (1784-1816)
- ஜெகவீர ராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் - 2-வது ஜமீன்தார் (1817-1839)
- ஜகவீர ராம குமார எட்டப்ப நாயக்கர் - 3-வது ஜமீன்தார் (1839-1852)
- ஜகவீர ராம வெங்கடேஸ்வரா எட்டப்ப நாயக்கர் - 4-வது ஜமீன்தார் (1852-1858)
- ஜெகவீர ராம முத்துசுவாமி குமார எட்டப்ப நாயக்கர் - 5-வது ஜமீன்தார் (1858-1868)
- ஜகவீர ராம குமார II எட்டப்ப நாயக்கர் - 6-வது ஜமீன்தார் (1868-1890)
- ராஜா ஜகவீர ராம வெங்கடேஸ்வரா எட்டப்ப நாயக்கர் - 7-வது ஜமீன்தார் (1890-1915)
- ராஜா ஜகவீர ராம வெங்கடேஸ்வரா II எட்டப்ப நாயக்கர் பகதூர் - 8-வது ஜமீன்தார் (1915-1928)
- ராஜா ஜெகவீரா ராம குமார III எட்டப்ப நாயக்கர் (தங்கசாமி பாண்டியன்) 9-வது ஜமீன்தார் (1928-1934)
- ராஜா முத்து குமார வெங்கடேஸ்வரா எட்டப்ப நாயக்கர் - 10-வது ஜமீன்தார் (1934-1941)
- ராஜா ஜகவீர ராம முத்து குமார வெங்கடேஸ்வரா எட்டப்ப நாயக்கர் - 11-வது ஜமீன்தார் (1942-1954)
சுதந்திரப் போராட்ட காலம்
எல்லை பிரச்சனை காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோர்களுக்கும் எட்டயபுர மன்னர்களுக்கும் மனகசப்பு இருந்தது. இந்த பிரிவினையை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஜெகவீரபாண்டிய எட்டப்ப நாயக்கர் என்பவர் ஆங்கிலேயருக்கு வரிதர மறுத்து ராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி முதலிய ஊர்களுக்கு சென்று மறைந்து வரிதராமல் இருந்துவந்தார். அவர் செல்லும்வழியில் அருப்புக்கோட்டை முதலிய ஊர்களுக்கு சென்று தங்கள் நாட்டிலும் இவ்வாறான கோட்டைகள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார்.
கலை, இலக்கியம் பங்களிப்பு
பொ.யு. 17-ஆம் நூற்றாண்டில் எட்டயபுரம் பாளையங்களின் தலைநகராக ஆன போது அதன் மதிப்பு கூடியது. பொ.யு. 18-ஆம் நூற்றாண்டின் கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக எட்டயபுரம் அரண்மனை இருந்தது. திராவிடக் கட்டடக் கலைக்குச் சான்றாக அய்யன் சுப்ரமணிய சாமி கோவில், கழுகுமலை கோவில், திருநெல்வேலி காந்திமதி அம்மன் அஷ்ட மண்டபம், சுந்திர விலாசம், சுப்ரமணிய விலாசம் ஆகிய கோயில்கள் உள்ளது. வீரராமகுமார எட்டப்ப நாயக்கர், அங்கு எட்டிஸ்வரமூர்த்தி என்ற சிவன் கோயிலை கட்டினார். ஏரிகள், குளங்கள் ஆகியவை அமைத்தார்.
இலக்கியம்
எட்டையபுரம் மன்னர்கள் தமிழ்பற்று கொண்டிருந்தனர். வெங்கடேஸ்வரா எட்டப்ப நாயக்கர் சுப்ரமணிய பாரதிக்கு 'பாரதி' என்ற பட்டத்தை அளித்தார். சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர், கடிகை முத்துப் புலவர், நமசிவாய புலவர் ஆகிய புலவர்களை எட்டயபுர மன்னர்கள் ஆதரித்தனர். 1934-ல் முத்து வெங்கடேஸ்வர எட்டப்பன் காலத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், ரா.பி. சேதுப்பிள்ளை, உமாமகேஸ்வரனார் போன்ற அறிஞர்கள் எட்டயபுரம் வந்தனர். நாவலர் சோமசுந்தர பாரதி தமிழ் இலக்கிய ஆய்வுகளை இங்கிருந்து மேற்கொண்டார்.
இசை
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், சுப்பராம தீட்சிதர், ராமச்சந்திர பாகவதர், புஷ்பவனம் ஐயர், காஞ்சிபுரம் நயன பிள்ளை, காஞ்சிராமன் பூண்டிய பிள்ளை, தட்சிணாமூர்த்திபிள்ளை, நாதஸ்வரம் மதுரை பொன்னுசாமி பிள்ளை, செம்பனார் கோயில் ராமசாமி பிள்ளை, திருவாவடுதுரை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், நடேச நயனக்காரர், பக்கிரி நயனக்காரர், காரைக்குடி வீணை சாம்பசிவ ஐயர் ஆகிய இசைக் கலைஞர்களை எட்டயபுரம் மன்னர்கள் ஆதரித்தனர்.
நாடகம்
நாடகக் கலைஞர்களான கல்யாண ராமைய்யர், எம்.ஆர். கோவிந்தசாமிப் பிள்ளை, எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ், சின்ன மகாதேவ ஐயர், சின்னசாமி ஐயர், வேலு நாயர், அனந்த நாராயண ஐயர், கிட்டப்பா சகோதரர்கள் ஆகியோர் எட்டயபுரம் ஜனீனிடமிருந்து பரிசில்கள் பெற்றுள்ளனர். கர்நாடகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞராக குப்பி வீரண்ணா ஜமீனிடமிருந்து பரிசுகள் பெற்றுள்ளனர்.
குமார எட்டப்ப மகாராஜா கலையுணர்ச்சி உள்ளவர். எட்டயபுரத்தில் ஊருக்குப் பொதுவாக நாடக அரங்குகள் அமைத்தார். இதைத் தவிர அரசருக்குத் தனியாகவும் அவரின் புதல்வர்களுக்குத் தனியாகவும் என நாடக அரங்குகள் அமைத்தார். கல்விநிலையங்கள் அமைத்து இலவச உணவுத்திட்டம் கொண்டு கல்வி பரப்பினர்.
முடிவு
ஜமீன்தாரி முறை செப்டம்பர் 26, 1954 அன்று ஒழிக்கப்பட்டது.
விவாதம்
எட்டயபுர அரசர்களும் விடுதலை விரும்பிகளாகவே இருந்து வந்தனர் என்பதால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தவர் எட்டப்பர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை எட்டயபுரம் மக்கள் மறுக்கின்றனர்.
கட்டபொம்மனுக்கும் எட்டயபுர பாளையத்திற்கும் ஏற்கனவே இருந்த கசப்பான உறவைப் பற்றி 1881-ல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலில் ஏழாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"செப்டம்பர் 1799-ல் மேஜர் பானர்மேன் தனது படையினருடன் சென்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டார். முதல் நாள் போரில் கட்டபொம்மன் வெற்றி பெற்றார். ஆங்கிலேய படையினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. பின்னர், மேஜர் பானர்மேன் பாளையங்கோட்டையில் இருந்து பீரங்கிப் படையை உதவிக்கு அழைத்தார். பீரங்கிப் படை வந்தால் தனது கோட்டைக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதி கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்" என வரலாற்று ஆய்வாளர் முனைவர் கே. கருணாகரப் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு வெளியேறிய கட்டபொம்மன் மற்றும் அவரது சகாக்கள் கோல்வார்பட்டியில் உள்ள அரண்மனையில் தஞ்சம் அடைந்தனர். பானர்மேன் தனது கடிதத்தில், "படைகளுடன் கோல்வார்பட்டி சென்ற எட்டப்ப மன்னருக்கும் கட்டபொம்மனுக்கும் ஒரு சிறிய போர் நடந்தது. இருதரப்புக்கும் இதில் சேதம் ஏற்பட்டது. முடிவில் கட்டபொம்மனின் மந்திரி தானாதிபதி பிள்ளை உட்பட கட்டபொம்மனின் படையை சேர்ந்த 34 பேர் பிடிபட்டனர். கோல்வார்பட்டி தாக்குதலுக்கு பிறகு கட்டபொம்மன் உட்பட சிலர் மட்டும் தப்பித்து புதுக்கோட்டை தொண்டைமான் ராஜாவிடம் உதவி கேட்டு சென்றதாகவும், அப்போது ராஜாவின் எல்லைக்குட்பட்ட திருக்களம்பூர் குமரப்பட்டி காட்டில் அவர்கள் பதுங்கி இருந்த போது, கட்டபொம்மன் உட்பட சிலர் தொண்டைமான் ராஜாவால் சிறைப்படுத்தப்பட்டு மேஜர் பானர்மேனிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்" என 1917-ல் வெளியிடப்பட்ட மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் கெசட்டில் (திருநெல்வேலி) பதிவு செய்யப்பட்டுள்ளது. ராபர்ட் கால்டுவேல் எழுதிய நூலிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. (திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு, பக்கம் 183)
உசாத்துணை
- Historical Importance of ettayapuram study - ijrcs
- A Tribute to a Munificent Benefactor - guruguha
- Maharaja of Ettayapuram - sreenivasaraos
- இது 'எட்டப்பன்' வரலாறு! - தினமலர்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 19:00:57 IST

