under review

எச்சரிக்கை (நூல்)

From Tamil Wiki

எச்சரிக்கை (பதிப்பு: 2019) திருப்போரூரில் உறையும் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இதன் ஆசிரியர்: ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்.

வெளியீடு

எச்சரிக்கை நூலை, நிறைமதி வழிபாட்டுச் சங்கம், 2019-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர்: சிதம்பர சுவாமிகள். உரையாசிரியர்: புலவர் மாசிலாமணி. திருப்போரூர் முருகன் சந்நிதி முறை தொகுப்பில் இந்நூல் இடம்பெற்றது.

ஆசிரியர்

சிதம்பர சுவாமிகள் (சிதம்பர அடிகள்) வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். திருப்போரூரில் கோயில் கொண்ட முருகன் மேல் பல துதி நூல்களை இயற்றியவர்.

எச்சரிக்கை - விளக்கம்

அரசன், அரச சபைக்கு வரும்போது அவனது வருகையை அறிவித்து, பின் அவன் புகழையும், பெருமையையும் கூறி, இத்தகைய பெருமை உடையவர்கள் யார் எனப் புகழ்ந்து, சபையில் உள்ளவர்களுக்குக் கூறுவது 'எச்சரிக்கை'. இது இறைவனின் திரு முன்பு பாடப்பட்டும் இலக்கியம். இறைவனின் புகழைக் கூறி அடியார்களை எச்சரிப்பது 'எச்சரிக்கை' எனப்படுகிறது.

நூல் அமைப்பு

எச்சரிக்கை நூலில் இரண்டு அடிகளைக் கொண்ட கண்ணிகளாக 13 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் 'எச்சரிக்கை' என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

உள்ளடக்கம்

எச்சரிக்கை நூலில் திருப்போரூர் தலத்தின் மூர்த்தி, தலச் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.

பாடல்

சீரார்குற மானாளணி செப்பார்தன மேவுந்
தாரார்புய சமராபுரிச் சண்முகா எச்சரிக்கை

பிறைசூடிய சடையானருள் பிள்ளைப்பெரு மாளே
மறையோர்நிறை போரூர்வரு மன்னா எச்சரிக்கை

பனிமாமலை மிசைபூத்தருள் பச்சைக்கொடி தந்த
கனியேதிருப் போரூர்வரு கந்தா எச்சரிக்கை

ஆனைஅமு தனையாயயில் வேலாவுயர் வானோர்
சேனாபதி சமராபுரித் தேவே எச்சரிக்கை

தெய்வகுஞ்சரி கணவா பச்சைத் திருமால்திரு மருகா
சைவநன்னெறி வளர்போரூர்ச் சண்முகா எச்சரிக்கை

வேலாகுண சீலர்கன லீலாவிடைப் பாகன்
பாலாதிருப் போரூர்வளம் பதியாய் எச்சரிக்கை

மதிப்பீடு

எச்சரிக்கை இனிய சந்தத்துடன், சொற்சுவையும், பொருட் சுவையும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. முருகன் மீதான பக்தி இலக்கியங்களில் ஒன்றாகவும், 17-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • எச்சரிக்கை (திருப்போரூர் சந்நிதி முறை), உரையாசிரியர்: பா. மாசிலாமணி, வெளியீடு: நிறைமதி வழிபாட்டுச் சங்கம், விற்பனை உரிமை: ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வழிபாட்டுச் சங்க கல்வி அறக்கட்டளை, புதுப்பெருங்களத்தூர், சென்னை; முதல் பதிப்பு: 2019.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2025, 13:02:29 IST