under review

உறையூர் முதுகூத்தனார்

From Tamil Wiki

உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முதுக்கூற்றனார்) சங்க காலப் புலவர். இவர் பாடிய ஒன்பது பாடல்கள் சங்க இலக்கியத்தொகையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

உறையூர் முதுகூத்தனார், உறையூர் முதுக்கூற்றனார் என்றும் அழைக்கப்பட்டார். உறையூரைச் சேர்ந்தவர். ஒன்பது சங்கப் பாடல்களை இயற்றியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

உறையூர் முதுகூத்தனார் பாடிய ஒன்பது பாடல்கள் குறுந்தொகை (221,390), நற்றிணை (28,58)அகநானூறு (137,329), புறநானூறு (331), திருவள்ளுவமாலை (39) ஆகிய சங்க இலக்கியத் தொகைகளில் உள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • திருவள்ளுவரின் திருக்குறளை ஓதாதவரின் நாவிற்கு இன்சொற் சொலவில்லை; உடம்பிற்கு நல்வினையில்லை என்று கருதித் திருமகள் அவரிடஞ் சேரான். (திருவள்ளுவமாலை)
  • சோழர் காவிரியாற்றின் இரு மருங்கிலும் உள்ள உறையூர், திருவரங்கம் ஆகிய இரு ஊர்களிலும் பங்குனி முயக்கம் என்னும் விழா கொண்டாடி முடிந்த மறுநாள் கொண்டாடப்பட்ட இடம் வெறிச்சோடிக் கிடப்பது போல தலைவியின் நெற்றி வெறிச்சோடிக் கிடந்தது. (அகம் 137)
  • பாண்டியன் பொதியமலை மூங்கில் போல் இருந்த தோள் வாடிப்போயிற்று.
  • உப்பு கொண்டு செல்லும் உமணர்கள் (அகம் 329)
  • முல்லைப்பூ பூத்துக் கிடக்கிறது. பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கூழை வாங்கிக்கொண்டு பசு மேய்க்கச் செல்லும் இடையன் கூட முல்லை மொட்டுகளை அணிந்திருக்கிறான். அவர் இன்னும் வராமையால் என்னால் முல்லைப் பூவை அணிய முடியவில்லையே எனத் தலைவி வருந்துகிறாள். (குறுந்தொகை 221)
  • அவன் அருவி நீர் பாய்ச்சி ஐவன நெல் விளைவித்துக்கொண்டிருக்கிறான். அவனை அணைக்காமையால் என் கையில் வளையல் நிற்கவில்லை. உடல் பசலை ஆர்க்கின்றது. (குறுந்தொகை 371)
  • பொழுதும் போனபின் வழிப்பறி மக்களும் வேலேந்திக்கொண்டு தண்ணுமை முழக்கத்துடன் வருகின்றனர். (குறுந்தொகை 390)
  • சிறுவர் முழக்கும் பறையில் எழுதப்பட்டுள்ள குருவி அடி படுவது போல அந்தக் குதிரைகளை அடித்து விரைந்து வரச் சொல்லும் தலைவி.
  • வீரை வெளிமான் முரசத்தில் மாலையில் விளக்கேற்றி வைக்கப்பட்டது.
  • உவமை: இடையன் தீ மூட்டும் ஞெலிகோல் போன்று ஒளி தர வல்லவன்; இருப்பது சிறிதே ஆயினும் வந்தவர்க்கு ஊட்டும் மகளிர் போல வழங்கவும் வல்லவன்; அரசன் வழங்கும் பெருஞ்சோறு போலப் பகைவர்களை வெட்டித் தூவவும் வல்லவன்.

பாடல்

  • அகநானூறு 137[1]: பாலை: 'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
  • அகநானூறு 329[2]: பாலை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்
  • குறுந்தொகை 221[3]: முல்லை: தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை மலர்ந்தது; கார்காலம் வந்து விட்டது; அவர் வந்திலர்; யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?
  • குறுந்தொகை 390[4]: பாலை: பாலைநிலவழியே சேர்ந்துபோகும் தலைவனையும் தலைவியையும் கண்டோர், “பொழுது போயிற்று; ஆறலை கள்வரால் ஏதம் நிகழும்”என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.
  • நற்றிணை 28[5]:பாலை: பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.
  • நற்றிணை58[6]: நெய்தல்: பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது
  • புறநானூறு 331[7]: திணை: வாகை; துறை : மூதின் முல்லை

பாடல் நடை

  • திருவள்ளுவமாலை 39

தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் - நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு.

  • அகநானூறு 137

தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

  • குறுந்தொகை 221

அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே.

  • நற்றிணை 28

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன்மாதோ-
மணி என இழிதரும் அருவி, பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி,
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!

  • குறுந்தொகை 390

எல்லும் எல்லின்று பாடுங் கேளாய்
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென
வளையணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே.

  • புறநானூறு 331

கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப்,
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக், குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன்"

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Nov-2022, 09:26:21 IST