உறையூர்ப் பல்காயனார்
உறையூர் பல்காயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
உறையூர் பல்காயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். உறையூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
உறையூர் பல்காயனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 374-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவியின் காதல் உறவை அவளது வீட்டினருக்கு எடுத்துக்கூறியதால் நடக்கவிருக்கும் திருமணத்தை கண்ட ஊர்மக்களின் மனப்புரிதலை தோழியின் கூற்றச் சொல்லும் குறிஞ்சி திணைப் பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- தந்தையும் தாயும் அறியும்படி மலைநாட்டை சேர்ந்த தலைவனுடன் தலைவிக்கு ஏற்பட்ட காதல் வெளிப்படுத்தப்பட்டு திருமணம் நடக்கவிருப்பதை அறிந்த ஊரார் ஆச்சரியத்தில் புரிந்துகொள்ள முடியாமல் மயங்குகிறார்கள்.
- உவமை: பனைமரத்தில் தூக்கணங்குருவி எப்படி அழகாக கூடு கட்டுகிறது என்ற விந்தையை எண்ணி ஊர் மக்கள் வியப்பது போலவே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஏற்பட்ட காதல் உறவையும், அதன் விளைவான திருமணத்தையும் எண்ணி வியந்தனர்.
பாடல் நடை
குறுந்தொகை - 374
குறிஞ்சி திணை துறை: அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.
எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2024, 09:18:31 IST