under review

ஈழத்துப் பூதந்தேவனார்

From Tamil Wiki

ஈழத்துப் பூதந்தேவனார் சங்ககாலத்தைச் சேர்ந்த ஈழத்து புலவர். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவது மரபாக உள்ளது. சங்கத்தொகைப்பாடல்களில் இவர் பாடிய ஏழு பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

ஈழத்துப் பூதந்தேவனார் இலங்கையில் ஈழத்துப் பூதனுக்கு மகனாகப் பிறந்தார். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராக இருந்தார். இவர் தனது தந்தை ஈழத்துப் பூதனோடு மதுரை சென்று, கற்றுப் புலவரானார் என்றும் நம்பப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1998-ல் நிகழ்ந்த நினைவுப் பேருரை ஒன்றில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை ஈழநாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் பொ.யு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என பல சான்றுகளை முன்வைத்து எடுத்துக்காட்டினார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து பூதந்தேவனார் பாடிய ஏழு பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகியவற்றில் உள்ளன.

பாடல்கள்
  • அகநானூறு (88, 231, 307)
  • குறுந்தொகை (189, 343, 360)
  • நற்றிணை (366)

பாடல்வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு 88
  • குறிஞ்சித்திணைப்பாடல்
  • "இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது" என்ற துறையில் வரும்.
  • மேட்டு நிலத்தில் முளைத்து விளைந்திருந்த நல்ல தினைக் கதிர்களை உண்ணுவதற்காகப் புருவைப்பன்றி (முள்ளம்பன்றி) வரும். அதனைத் தெரிவிப்பதற்காகப் பெரிய வாயை உடைய பல்லி ஒலி எழுப்பும். பல்லி ஒலி எழுப்பாத தருணம் பார்த்து புருவைப்பன்றி விளைச்சலில் நுழைந்து தினைக்கதிர்களை உண்ணும்.
  • கானவன் கழுதின்மேல் ஏறிக் காவல் புரிவான். அந்தப் பந்தலின்மேல் அவன் விளக்கு வைத்திருப்பான்.
அகநானூறு 231
  • பாலைத் திணைப்பாடல்
  • “தலைமகள் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது” என்ற துறையில் வரும்.
  • போரிட்டவரை வென்று புகழ் பெற்ற பசும்பூட்பாண்டியன் மதுரை கூடல் நகருக்கு பெருமை சேர்ப்பவன்.
  • பூ மணம் கமழும் கூடலில் தேனுண்ணும் வண்டுகள் முரலும் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.
அகநானூறு 307
  • பாலைத்திணைப்பாடல்
  • “பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது” என்ற துறையில் வரும் பாடல்.
  • உவமை: மழையில் நனையும் மலரிலிருந்து நீர் ஒழுகுவது போல தலைவியின் கண்ணீர் வழிகிறது.
  • தன்னைக் கொல்ல வந்த வேங்கைப்-புலியின் பகையை வென்ற யானை, காம உணர்வால் ஒழுகும் மதம் பெருக்கெடுத்து, வழிப் போக்கர்களையும் கொல்லும்
  • வலிமை மிக்க கையினை உடைய கரடி புற்றிலுள்ள கறையான் கூட்டைத் தோண்டும்.
  • கோயில் சுவரில் புற்று ஏற, கோயில் கொடிக்கம்பத் தூணில் நிலை கொள்ளாமல் கடவுள் விட்டுவிட்டுப் போன கோயிலை விட்டு விலகிச் செல்லாமல் அதன் சுவற்றில் வாழும் ஆண்-புறா தன் பெண்-புறாவைக் கூவி அழைக்கும்.
குறுந்தொகை 189
  • பாலைத்திணைப்பாடல்
  • "வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது" என்ற துறையில் வரும் பாடல்.
குறுந்தொகை 343
  • பாலைத்திணைப்பாடல்
  • "தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது." என்ற துறையில் வரும் பாடல்.
  • மதம் கொண்ட ஆண்யானையின் முகத்தில் வலிமை மிக்க புலி பாய்ந்து அதன் வெள்ளைத் தந்தம் சிவப்புநிறம் ஆகும்படிக் காயப்பட்டு மேலைக்காற்று வீசுவதால் உதிர்ந்து கிடக்கும் வாடிய வேங்கைப் பூக்களின் மேல் செத்துக்கிடக்கும் நாடன்
குறுந்தொகை 360
  • குறிஞ்சித்திணை
  • "தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது" என்ற துறையில் வரும் பாடல்.
  • கால் சிலம்பு போல் ஒலி எழுப்பும் குளிர் கருவியைக் கையில் வைத்துக்கொண்டு யானையின் கை போல் கதிர் வாங்கியிருக்கும் தினைப்புனத்தில் கிளி ஓட்டும் நாடன்.
நற்றிணை 366
  • பாலைத்திணைப்பாடல்
  • ”உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது” என்ற துறையில் வரும் பாடல்
  • பாம்பு படமெடுத்து எழுந்தது போல பலவாகக் கலந்த எண்மணிக் கோவையாகிய மேகலை.
  • நுண்ணிய துகிலும், திருந்திய இழையணிந்த அல்குலையும், பெரிய தோளையும் உடைய தலைவி
  • குளிர் காற்றால் மலருகின்ற முல்லையின் குறுகிய காம்பையுடைய மலர்களை இளைய பெண் வண்டுடனே ஆண் வண்டுஞ் சூழுமாறு முடித்திருக்கின்ற தலைவி
  • அறிவுமிக்க தூக்கணங்குருவி தான் முயன்று செய்த கூட்டை மூங்கில் தன் அடித்தண்டும் அசையுமாறு மோதும் வடதிசைக்குரிய வாடைக்காற்று வீசும் கூதிர்ப் பருவம்.

பாடல் நடை

  • அகநானூறு 88

முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்

  • குறுந்தொகை 189

இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
காலியற் செலவின் மாலை எய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாக மணந்துவக் கும்மே.

  • நற்றிணை 366

அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ

உசாத்துணை


✅Finalised Page