இலக்கியவட்டம் மலேசியா (இதழ்)
To read the article in English: Ilakkiyavattam Malaysia (Magazine).
இலக்கியவட்டம் மலேசியா (1973-1974) பேராசிரியர் இரா. தண்டாயுதம் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு உருவாக்கிய 'இலக்கிய வட்டம்’ குழு வெளியிட்ட காலாண்டு இதழ். தட்டச்சின் மூலம் உருவாக்கப்பட்ட இதழ். தமிழகத்தில் இருந்து க.நா.சுப்ரமணியம் நடத்திய இலக்கியவட்டம் என்னும் சிற்றிதழ் முன்னரே வெளிவந்துள்ளது (பார்க்க இலக்கியவட்டம்)
வரலாறு
பேராசிரியர் ரெ. கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்த காலகட்டத்தில் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து, தட்டச்சு செய்து இலக்கியவட்டத்தின் கூட்டத்தில் வழங்கி விவாதித்துள்ளனர். அவை இலக்கியவட்டம் என்னும் இதழாக ஆயின. முதல் இதழ் பிப்ரவரி 1973-ல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இதழ் அரசாங்க பதிவு எண் இல்லாமல் தனிச்சுற்றாகவே வந்துள்ளது. பின்னர் இவ்விதழ் முறையான அரசாங்க பதிவு எண்ணைப்பெற்று குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே வாசிப்புக்குச் சென்றுள்ளது. அரசுப் பதிவு எண்ணுக்காக எழுத்தாளர் எம். குமரன் (மலபார் குமார்) முகவரி வழங்கப்பட்டிருந்த சூழலில் உள்ளடக்கச் சாரத்தை ரெ.கார்த்திகேசுவே தீர்மானித்துள்ளார். மே 1974-ல் ரெ.கா வானொலி பணியில் இருந்து விலகி பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது இலக்கிய வட்டம் நின்றது.
’ஆயிரம் பிரதிகளா, ஐம்பது பிரதிகளா என்பதெல்லாம் முக்கியமான விஷயங்கள் என இந்த வட்டம் கருதவில்லை. சோதனைக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள இப்பத்திரிகையை எழுத்தாளர்கள் இருதய சுத்தியோடு பயன்படுத்திக்கொள்வார்களா என்பதைத்தான் வட்டம் கவனித்துக்கொண்டு வருகிறது’ என்று தன் நோக்கத்தை இதழ் குறிப்பிட்டிருக்கிறது
உள்ளடக்கம்
பைரோஜி நாராயணன், மெ. அறிவானந்தன், இரா. தண்டாயுதம், வீ. செல்வராஜ், க. கிருஷ்ணசாமி, சி. வடிவேலு, சி. வேலுசாமி, அரு. சு. ஜீவானந்தன், சு. கமலநாதன், சா.ஆ. அன்பானந்தன், எம். குமாரன், ரெ. கார்த்திகேசு, மைதீ. சுல்தான் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். ஐந்து இதழ்களிலும் சுமார் 5 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
- பிப்ரவரி, 1973 - வட்டத்துக்கு வெளியே - அரு. சு. ஜீவானந்தன்
- ஜூன், 1973 - அவளுக்காக - மைதீ. சுல்தான்
- அக்டோபர், 1973 - முனுசாமி தலைகுனிந்து நிற்கிறான் - ரெ. கார்த்திகேசு
- ஏப்ரல், 1974 - நதிகள் கடலில் கலக்கட்டும் - அரு. சு. ஜீவானந்தன்
- ஜனவரி, 1974 - பத்துரோட்டில் ஒரு கடை இருந்தது - எம். குமாரன்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:26 IST