under review

க. கிருஷ்ணசாமி

From Tamil Wiki
க. கிருஷ்ணசாமி

க. கிருஷ்ணசாமி (பிப்ரவரி 3, 1940-ஆகஸ்ட் 25, 2008) மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்,பேச்சாளர், தமிழ் வளர்ச்சிக்காகப் போராடியவர். மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் இரண்டாவது தேசியத் தலைவர்.

பிறப்பு, கல்வி

க. கிருஷ்ணசாமி காஜாங்கில் பிப்ரவரி 3, 1940-ல் பிறந்தார். இவரது தந்தையார் முத்து கருப்பையா தமிழ்நாட்டின் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர். இவர் மலாயாவுக்குத் தனவணிகர் நிறுவனத்தில் கணக்கெழுதும் பணியாளராக வந்தவர். தாயார் சுப்பு அம்மாள். க. கிருஷ்ணசாமியின் உடன்பிறந்தோர் இருவர்.

க. கிருஷ்ணசாமி காஜாங் தமிழ்ப்பள்ளியில் தன் கல்வியைத் தொடங்கி 1955-ல் ஏழாம் வகுப்பை முடித்தார். க. கிருஷ்ணசாமிக்குப் பெரிதும் துணையாக இருந்தவர் இலங்கைத் தமிழரான தமிழ்ப் பண்டிதர் ச. சின்னராசா எனும் தலைமையாசிரியர். க. கிருஷ்ணசாமி 1956-லிருந்து 1959 வரை தமிழாசிரியர் போதனா முறை வகுப்பில் பயிற்சி பெற்றார்.

தொழில், திருமணம்

க. கிருஷ்ணசாமி குவாங் பிரிஸ்டல் தோட்டத்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். பின்னர் கோலாலம்பூரிலுள்ள விவேகானந்தா தமிழ்ப் பள்ளி, செந்தூல் தமிழ்ப் பள்ளி, செகாம்புட் தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்றி இறுதியாக தம்புசாமி தமிழ்ப் பள்ளியில் பிப்ரவரி 2, 1995-ல் பணி ஓய்வு பெற்றார்.

க. கிருஷ்ணசாமி ஏப்ரல் 9, 1966-ல் ஆசிரியரான இந்திராணியை மணமுடித்தார். இவர்களுக்கு செல்வபாரதி, சரவணன் என்ற இரண்டு குழந்தைகள்.

பொது வாழ்க்கை

எழுத்தாளர்

க. கிருஷ்ணசாமி மாணவர் மணிமன்ற இதழில் தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். 1957-ல் முதலாம் சுதந்திர தினத்தின்போது நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் க. கிருஷ்ணசாமி இரண்டாம் நிலையில் வென்று சுதந்திரத் தந்தை தூங்கு அப்துல் ரஹமானின் வாழ்த்துச் சான்றிதழையும் பெற்றார். இவரின் படைப்புகள் பல நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் வெளிவந்தன. க. கிருஷ்ணசாமி சிறுகதை, கட்டுரை, நாடகம் என மூன்று துறைகளிலும் எழுதினார். எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இலக்கிய, சமுதாயக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். க. கிருஷ்ணசாமி 250-க்கும் மேற்பட்ட இலக்கிய, சமூக நாடகங்களையும் வானொலிக்கு பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளார். தமிழ் நேசன் நாளிதழில் க. கிருஷ்ணசாமி 'திருநம்பி' என்ற பெயரில் வாரந்தோறும் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சனைகளைத் தொட்டு பல ஆண்டுகள் எழுதி வந்த ‘கண்ணோட்டம்’ வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தது.

மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை க. கிருஷ்ணசாமிக்கு நடத்திய மணிவிழாவில் இவரின் 'மண்ணின் மைந்தர்கள்' என்னும் நாடகத் தொகுப்பும் 'இலக்கியத் தேடல்' என்னும் சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டன.

தமிழ் இளைஞர் மணிமன்றம்
சா.அ. அன்பானந்தனுடன்

க. கிருஷ்ணசாமி இளமையிலேயே பொதுவாழ்க்கையில் ஆர்வமுடையவராக இருந்தார். மலாயா திராவிடர் கழகத்தின் காஜாங் கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தார். க. கிருஷ்ணசாமியின் பேச்சாற்றல் வளர்வதற்கு இங்குதான் களம் அமைந்தது. க. கிருஷ்ணசாமி 1959-ம் ஆண்டு செந்தூல் தமிழர் திருநாள் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றபோது, அன்றைய சிறப்பு நிகழ்வில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் க.கிருஷ்ணசாமிக்கு 'தமிழ்த் தென்றல்' என்ற விருதினை வழங்கினார். க. கிருஷ்ணசாமி கோலாலம்பூருக்கு மாற்றலாகி வந்தபின்னர் அகில மலாயா தமிழர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். இச்சங்கம் கலைக்கப்பட்ட பின்னர் கோலாலம்பூர் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் இணைந்து பல பொறுப்புகளை வகித்தார். 1964-ல் பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றம் முதல் மணிமன்ற மாநாட்டைக் கூட்டியது.

அம்மாநாட்டில் மணிமன்றப் பேரவை அமைக்கப்பட்டு க. கிருஷ்ணசாமி அதன் முதல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செந்தமிழ்ச்செல்வர் சி. வீ. குப்புசாமி, இல. இராமலிங்கம் இருவரின் துணையோடு சட்டதிட்டங்களை வகுத்து மணிமன்றப் பேரவையின் அமைப்புக் கூட்டத்தை கம்போங் பண்டான் இளைஞர் மண்டபத்தில் அக்டோபர் 10, 1966-ல் நடத்தினார். பேரவை பதிவு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். சா.ஆ. அன்பானந்தனின் மறைவுக்குப் பின்னர் 1972-ம் ஆண்டு க. கிருஷ்ணசாமி தேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் பொறுப்பினை ஏற்றார்.

க. கிருஷ்ணசாமியுடன் மணிமன்றத்தில் இணைந்து செயலாற்றியவர்களுள் ஆ. பாதாசன், சை.பீர்முகம்மது, மைதீ. சுல்தான், சோ. பரஞ்சோதி ஆகியோரும் அடங்குவர். க.கிருஷ்ணசாமி 1990 வரை தேசிய தலைவராக இருந்தார். சா.ஆ. அன்பானந்தன் க.கிருஷ்ணசாமிக்கு 'சங்கநாதம்' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

க. கிருஷ்ணசாமி ஆசிரியப் பணியோடு மன்றப் பணிகளையும் இடையறாது மேற்கொண்டார். குறைந்த எண்ணிக்கையிலான மன்றங்களே இருந்த நிலையை மாற்ற பெர்லிஸிலிருந்து ஜோகூர் வரை தோட்டப்புறங்கள், நகர்ப்புறங்கள் என பயணம் செய்து 520 மணிமன்றங்கள் அமைப்பதில் வெற்றி கண்டார். தேசிய இயக்கங்களிலேயே தலைசிறந்த பேரியக்கமாக மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையினை வழிநடத்தினார். மன்றத்திற்கான சொந்தக் கட்டிடம் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு 1985-ல் கிளான ஜெயாவில் மணிமண்டபம் வாங்கப்பட்டது.

மாஜூ ஜெயா இளைஞர் கூட்டுறவுக் கழகம்

மணிமன்றங்கள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் இளைஞர்களுக்கான கூட்டுறவுச் சங்கம் அமைக்கும் எண்ணம் சா.ஆ. அன்பானந்தனுக்கும் க. கிருஷ்ணசாமிக்கும் ஏற்பட்டது. டத்தோ கு. பத்மநாதன், நா. கோவிந்தன் ஆகியோரின் உதவியுடன் அமைப்புக் கூட்டத்தை நடத்தி அதன் முதல் தலைவராகவும் க. கிருஷ்ணசாமி செயல்பட்டார். மாஜூ ஜெயா இளைஞர் கூட்டுறவுக் கழகம் பதிவு செய்யப்பட்ட பின் நடந்த தேர்தலில் க. கிருஷ்ணசாமி தோல்வி கண்டார்.

இதர இயக்கங்கள்

கிரு.jpg

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடக்ககால அமைப்பாளர்களின் ஒருவராகவும் க.கிருஷ்ணசாமி இருந்தார். மலேசிய இளைஞர் பேரவையில் க. கிருஷ்ணசாமி பலகாலம் நிர்வாக மன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். அக்காலக் கட்டத்தில் தூங்கு அப்துல்லா, அன்வர் இப்ராகிம், தஜோல் ரோஸ்லி போன்ற இளைஞர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றினார். இவ்வேளையில் பல நாடுகளுக்குச் செல்லவும் அங்குள்ள இளைஞர் இயக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் இவருக்கு வாய்ப்புக் கிட்டியது. க. கிருஷ்ணசாமி ஆசிய இளைஞர் பேரவை, உலக இளைஞர் பேரவை ஆகியவற்றிலும் மலேசியப் பேராளராக கலந்து கொண்டுள்ளார். மலேசிய இளைஞர் பேரவையின் நாற்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் க. கிருஷ்ணசாமிக்கு 'தொக்கோ பெலியா' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

க. கிருஷ்ணசாமி தேசிய இளைஞர் ஆலோசனை மன்ற உறுப்பினராகவும் மலேசிய கலாச்சார மன்ற உறுப்பினராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். க. கிருஷ்ணசாமி மலேசிய இந்தியர் காங்கிரசில் சேர்ந்து கிளைத் தலைவராகவும் தேசிய இளைஞர் பிரிவு பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்துள்ளார். ம.இ.காவின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவில் பிரதமர் அவர்களால் பொற்பதக்கம் வழங்கிப் பாராட்டப் பெற்றார்.

கல்வித்துறை

பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் ஆரம்பப் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் க. கிருஷ்ணசாமி பங்களிப்பு செய்துள்ளார். மலேசிய தேர்வுக் கழகத்தின் தேர்வுத் தாட்கள் தயாரிப்பிலும் தேர்வுத் தாட்கள் திருத்துதலிலும் பல ஆண்டுகள் செயலாற்றியுள்ளார். க. கிருஷ்ணசாமி வானொலி கல்வி ஒலிபரப்புக்காக பல வரலாற்று நாடகங்களை எழுதினார். க. கிருஷ்ணசாமி மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். அச்சங்கத்தின் முத்திங்கள் இதழான ‘ஆசிரியர் ஒளி’யின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மலாயா தமிழ்ப் பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம் ‘தொண்டர் மணி' விருதும் தங்கப்பதக்கமும் வழங்கி க. கிருஷ்ணசாமியைச் சிறப்பு செய்துள்ளது.

போராட்டங்கள்

க. கிருஷ்ணசாமி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபட்டவர். 1970-களில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ்க் கல்விக்கும் எதிராகச் சிலர் அவநம்பிக்கையான கருத்துகளைப் பரப்பியபோது, அவற்றுக்கு எதிராகக் குரலெழுப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

தமிழ்ப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பிற்குப் பிறகு மலாய் மொழியைப் போதனா மொழியாக ஆக்கவேண்டும் என்று அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைத்து பி.பி. நாராயணன் செயல்பட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்து அத்திட்டத்தை முறியடித்த முத்தமிழ் வித்தகர் முருகு. சுப்ரமணியத்திற்கு க.கிருஷ்ணசாமி பெரிதும் துணை நின்றார். க. கிருஷ்ணசாமி நாடு முழுவதும் எழுத்து, பேச்சு, நாடகம் வழி போராட்டங்கள் செய்தார்.

தமிழ்ப் பள்ளிகளின் தோற்றத்தைப் பாதுகாப்பதற்கு அப்போது தமிழ் நேசன் ஆசிரியர் குழு நடத்திய போராட்டத்தில் க.கிருஷ்ணசாமி முக்கிய பங்காற்றினார். இந்தப் போராட்டத்தின் விளைவாக முருகு. சுப்ரமணியத்தின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பள்ளி மாணவர் உதவி நிதியின் அறங்காவலர் குழுவில் க.கிருஷ்ணசாமி இடம்பெற்றார்.

மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பாடப் புறக்கணிப்புக்கு எதிராக பல்கலைக்கழக வளாகத்தில் பெருங்குழுவுடன் சென்று போராட்டத்தின் வழி தன் கருத்தை வலியுறுத்தினார்.

மறைவு

க. கிருஷ்ணசாமி ஆகஸ்ட் 25, 2008-ல் காலமானார்.

விருதுகள்

  • தொண்டர் மணி விருது , மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம்
  • மலேசிய அரசின் AMN[1] விருது
  • 'தொக்கோ பெலியா' விருது மலேசிய இளைஞர் பேரவை

படைப்புகள்

  • மண்ணின் மைந்தர்கள் (மலேசிய வரலாற்று நாடகங்கள்), 2002, சூரியா பதிப்பகம்
  • இலக்கியத் தேடல் (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை

  • சங்கநாதம் மணிவிழா மலர், மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை 2002

அடிக்குறிப்புகள்

  1. Member of the Order of the Defender of the Realm (A.M.N.) (Malay: Ahli Mangku Negara)


✅Finalised Page