சி. வேலுசுவாமி
சி. வேலுசுவாமி (ஏப்ரல் 2, 1927 - மே 24, 2008) மலேசிய எழுத்தாளர். கவிஞர், பதிப்பாளர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர்.
பிறப்பு, கல்வி
சி. வேலுசுவாமி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரந்தாவ் எனும் ஊரில் ஏப்ரல் 2 1927லில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசுவாமி, அங்கம்மாள். சி.வேலுசுவாமி லிங்கி தோட்டத் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கினார். ஏழாம் வகுப்புக்குப்பின் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
தமிழாசிரியராக கோலாலம்பூரில் லொக் யு சாலை (இப்பொழுது சன் பெங் சாலை) தமிழ்ப்பள்ளியில் பணியைத் தொடங்கினார். சி. வேலுசுவாமி கோலாலம்பூரிலுள்ள அப்பர் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியாக 1982-ல் பணிஓய்வு பெற்றார். கோலாலம்பூர் ஜாலான் குவந்தானிலுள்ள பகல்நேர ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (DTC) பகுதி நேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
சி.வேலுசுவாமி 1946-ல் லெட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு எட்டு குழந்தைகள்.
இலக்கிய வாழ்க்கை
1948-ம் ஆண்டு தமிழ் நேசனில் சுப. நாராயணன் (கந்தசாமி வாத்தியார் ) பைரோஜி நாராயணன் (வானம்பாடி) இருவரும் நடத்திய கதை வகுப்பின் மூலம் எழுத்துத்துறையில் ஈடுபட்டார். தமிழ்ப் பண்ணை நடத்திய சிறுகதைப் போட்டியில் 'மீனாட்சி' என்ற சிறுகதையை எழுதித் தங்கப் பதக்கப்பரிசு பெற்றார். இக்கதை தமிழகத்தில் வெளியிடப்பட்ட அக்கரை இலக்கியம் என்னும் நூலில் இடம்பெற்றது. வானொலியில் இவரது கதைகளும் கட்டுரைகளும் இடம்பெற்றன. தமிழகத்து ஏடுகளான கலைமகள், தீபம், மஞ்சரி முதலியவற்றிலும் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.
பாடநூல்கள்
மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பள்ளிகளுக்கான தமிழ்ப் பாடநூல்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டன. க. நமச்சிவாயமுதலியாரின் திராவிடவாசகம், அமிர்தவாசகம் இரண்டும் பாடநூல்களாகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் பாரத மாதா வாசகம் இணைத்துக்கொள்ளப்பட்டது. ராமானுஜாச்சாரியார் எழுதிய அறிவு விளக்க வாசகநூல் மலேசியாவில் வெளியீடு கண்ட முதல் நூலாகும்.
மலேசியா சுதந்திரம் அடைந்ததும் ரசாக் கல்விக் கொள்கையின் அமலாக்கத்தின் கீழ் எல்லாப் பள்ளிகளிலும் போதனை முறைகள் சீரமைக்கப்பட்ட சமயத்தில், உள்நாட்டுச் சூழலுக்கேற்ற பாடநூல்கள் தேவைப்பட்டன. சி. வேலுசுவாமி முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரைக்குமான 'செந்தமிழ் வாசகம்’ எனும் நூலை ‘மனோண்மனி பதிப்பகத்தின் வழி வெளியிட்டார்.
தமிழ்மொழிப் பயிற்சிநூல் இல்லாத குறையைப் போக்கவும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் 'நற்றமிழ்த் துணைவன்' என்ற பயிற்சிநூல் வரிசையை வெளியிட்டார். இந்நூல் பலருக்கும் பேருதவியாக இருந்து வந்தது.
பதிப்பகம்
மலாயாவில் அச்சு வசதியும் ஊடக வளர்ச்சியும் அரிதாக இருந்த காலத்தில் சி. வேலுசுவாமி சொந்த பதிப்பகத்தைத் தொடங்கி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடியாகத் திகழ்ந்தார். சி.வேலுசுவாமி பல்வேறு புனைப்பெயர்களில் எழுதிவந்தார். சரவணபவன், சந்திரன், தமிழ்வாணன், கவிதைப்பித்தன், இளங்கவிஞன், ஏச்சுப்புலவன் உள்ளிட்ட பல பெயர்களில் இவர் பல துறை சார்ந்து நூல்களை எழுதியுள்ளார்.
மாணவர் இதழ்
திருமகள் எனும் மாணவர் இதழை சி.வேலுசுவாமி 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தினார். கையடக்க வடிவில் வந்த, தகவல்களும் பயிற்சிகளும் கொண்ட இந்த இதழ் மிகக் குறைந்த விலையில் கிடைத்தது.
சமயப் பணி
முருக பக்தரான சி. வேலுசுவாமி மலேசிய இந்து சங்கப் பிரச்சாரக்குழுவில் இடம்பெற்றிருந்தார். இசையுடன் பாடி விளக்கும் ஆற்றலும் தமிழிலக்கியப் பயிற்சியும் இருந்ததால் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினார். இந்து சமய விளக்க நூல்கள் பலவற்றை எழுதியும் தொகுத்துமுள்ளார். 'பக்தி' எனும் சமய இதழை 14 ஆண்டுகளாக நடத்தினார்.
குழந்தைப் பாடல்கள்
சி.வேலுசுவாமி குழந்தைப்பாடல்கள் இயற்றுவதில் புலமை பெற்றவர். பாட்டுப் பாடலாம், நான் பாடும் பாட்டு, தேனீயைப் பாரீர், பாட்டெழுதப் பழகுங்கள், அருள்புரிவாய் என்ற தலைப்புகளில் குழந்தைப்பாடல் நூல்கள் வெளிவந்துள்ளன. சி. வேலுசுவாமியின் அருள்புரிவாய் நூலுக்குக் கவிஞர் கண்ணதாசன் அணிந்துரை வழங்கியுள்ளார்.
கவிதைகள்
'யாப்பதிகாரம்’, 'கவிஞராக' எனும் நூல்களின் சாரங்களை எளிமைப்படுத்திப் பள்ளி மாணவரும் பயன்பெறும்பொருட்டு 'கவிதை பிறந்தது' எனும் தலைப்பில் 'மலைநாடு' வாரஇதழில் கவிதை இலக்கணத்தை எழுதி வந்தார். இவற்றைத் தொகுத்து 'கவிஞராகுங்கள்' எனும் நூல் பின்னர் வெளிவந்தது.
'கவிதைப்பித்தன் கவிதைகள்' எனும் தலைப்பில் சு. வேலுசுவாமியின் கவிதைகள் 1968-ல் நூலாக வெளிவந்தது. அ.கி.பரந்தாமனார், மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஈ.ச.விசுவநாதன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்த இதில் தனிப்பாடல்களும் இசைப்பாடல்களும் வானொலிக் கவியரங்கப்பாடல்களுமாக 72 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வெற்றி, மலைமகள், மாதவி, தமிழ் நேசன், மலைநாடு உள்ளிட்ட ஏடுகளில் வெளிவந்த படைப்புகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்தது. வெண்பா, விருத்தம், சிந்து,கொச்சகக் கலிப்பா வடிவங்களில் அமையப்பெற்றன.
சி.வேலுசுவாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை மலேசிய தேர்வுக் கழகம் ஐந்தாம் படிவ மாணவர்களின் பாடநூலில் இடம்பெறச் செய்தது.
எழுத்துச் சீர்திருத்தம்
ஈ.வெ.ராமசாமிப் பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை மலேசியாவில் நடைமுறைப் படுத்தியதிலும் சி.வேலுசுவாமி பங்காற்றியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மலேசியக் குழுவிலும் அங்கம் பெற்றிருந்தார்.
திருக்குறள் வகுப்பு
சி. வேலுசாமி கோலாலம்பூரில் இயங்கிய குறள் இயக்கம் வழியாகத் திருக்குறள் வகுப்புகளை நடத்தினார். மலேசியாவில் திருக்குறள் பரவுவதற்கு வழிவகுத்தார். மலாய்மொழியில் புலமை பெற்றிருந்த சி.வேலுசுவாமி திருக்குறட்பாக்களை மலாய்மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் நேசன் நாளிதழில் திருக்குறளின் அறத்துப்பால் முழுமைக்கும் உரைநடை எழுதினார்.
தமிழ்-மலாய் அகராதி
சி. வேலுசுவாமி மலாய் மொழியில் புலமை மிக்கவராக இருந்தார். சி.வேலுசுவாமி வெளியிட்ட மலாயிலிருந்து தமிழுக்கான அகராதியும் மலாய்-தமிழ்-ஆங்கில அகராதியும் குறிப்பிடத்தக்கவை. இவை பல பதிப்புகளாக வெளிவந்து விற்பனையிலும் வரவேற்பு பெற்றன. மலேசிய மொழி படியுங்கள், 30 நாட்களில் மலாய் ஆகிய நூல்களும் அடிப்படை மலாய் மொழியைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடையோருக்கு வழிகாட்டி நூலாக அமைந்தன.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்ததில் சி.வேலுசுவாமிக்குப் பங்குண்டு. 5.7.1958ல் சி.வேலுசுவாமியின் முயற்சியால் சங்க அமைப்புக்கூட்டம் கோலாலம்பூர் பங்சார் தமிழ்ப் பள்ளியில் நடந்தது. இதில் சி. வேலுசுவாமி செயலாளராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2, 1959ல் சங்கம் பதிவு பெற்றது. இதன் பிறகு சங்கம் செயலிழந்து அதன் பதிவும் ரத்தானது. மீண்டும் சி.வேலுசுவாமியால் 1962ல் ஓர் அமைப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சங்கப்பதிவுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற புதிய பெயரில் பதிவு பெற்றது. சி. வேலுசுவாமி துணைத் தலைவராகத் தேர்வானார்.
விருதுகள்
- மலேசிய அரசாங்கத்தின் பிபின்(PPN ) விருது, 1988
- தமிழ் எழுத்தாளர் சங்க விருது, 1988
- தொண்டர்மாமணி விருது மலேசிய இந்து சங்கம்
- சங்கபூஷண் விருது மலேசிய இந்து சங்கம்
மறைவு
சி.வேலுசுவாமி மே 24 ,2008-ல் காலமானார்.
பங்களிப்பு
மலேசியத் தமிழ் அறிவுச்சூழலுக்கு சி. வேலுசுவாமி கல்வியாளர், அறிவியக்க ஒருங்கிணைப்பாளர், பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என்னும் நிலைகளில் பங்களிப்பாற்றினார். சி. வேலுசுவாமி வெளியிட்ட பாட நூல்களால் சிக்கலற்ற தமிழ் வழிக்கல்வி மலேசியாவில் சாத்தியமானது. சி. வேலுசுவாமியின் முனைப்பான செயல்பாட்டினால் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவானது. தமிழர்களிடையே மலாய் மொழி அறிவு வளர்வதற்காக சி. வேலுசுவாமி முன்னெடுத்த முயற்சிகளும் பதிப்பகத் திட்டங்களும் அவரை மலேசியத் தமிழ் அறிவுலகின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவராக உருவாக்கியது.
நூல்கள்
- கவிஞராகுங்கள் (சரவணபவன் பதிப்பகம், கோலாலம்பூர், 1966)
- இந்து மத விளக்கம் பாகம் 1 (சரவணபவன் பதிப்பகம், கோலாலம்பூர், 1977)
- இந்து மத விளக்கம் பாகம் 2 (சரவணபவன் பதிப்பகம், கோலாலம்பூர், 1978)
- இந்து மத விளக்கம் பாகம் 3 (சரவணபவன் பதிப்பகம், கோலாலம்பூர், 1981)
- இந்து மத விளக்கம் பாகம் 4 (சரவணபவன் பதிப்பகம், கோலாலம்பூர், 1987)
- திருமகள் கையகராதி, திருமகள் பதிப்பகம்
- மாணவர் அகராதி, திருமகள் பதிப்பகம்
- சிறுகதைத் திறனாய்வுச் சிந்தனைகள் (சரவணபவன் பதிப்பகம், கோலாலம்பூர், 1999)
இணைய இணைப்பு
- மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு - ரெ. கார்த்திகேசு
- சி. வேலுசுவாமி
- மலேசிய கவிஞர் சி. வேலுசுவாமி - முனைவர் மு. இளங்கோவன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Aug-2022, 19:40:39 IST