சுப. நாராயணன்
சுப. நாராயணன் (பிறப்பு: நவம்பர் 11, 1913) மலேசியத் தமிழ் எழுத்தாளர். மலேசிய இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் தமிழ் நேசன் நாளிதழில் 1950-ல் நடத்திய 'கதை வகுப்பு' வழியாகவே மலாயா நிலப்பரப்பின் வாழ்வை எழுதும் தமிழ் எழுத்தாளர் வரிசை ஒன்று உருவாகியது.
பிறப்பு, கல்வி
சுப.நாராயணன் தமிழகத்தில் நவம்பர் 11, 1913-ல் பிறந்தார்.
தனிவாழ்க்கை
தமிழகத்தில் வை. கோவிந்தன் நடத்திய 'சக்தி' என்ற சிற்றிதழில் துணையாசிரியராகவும் பிரதான ஆசிரியராகவும் பணியாற்றியவர் சுப. நாராயணன். தமிழகத்தில் வாழ்ந்தபோது 'காதலர் கண்கள்’, 'வேதாள உலகம்’ முதலான நாடகங்களில் நடித்துள்ளார். 1940-களின் இறுதியில் மலாயா வந்தார். முதலில் சிங்கை வானொலியில் தமிழ்ச் செய்திகள் வாசிப்பாளராகப் பணி செய்தார். பின்னர் கோலாலம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்தராகப் பல ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சுப. நாராயணன் தமிழ் நாட்டில் வசித்தபோது 'ஆரியப் புல்லுருவி’, 'மதம்பிடித்த மடாதிபதிகள்’, 'சீனமும் சீன மக்களும்’, 'வாழப்பிறந்தோம்’ என்ற கட்டுரை நூல்களும், 'கவிதை, கலை, விமர்சனம்' என்ற விமர்சன நூலும், 'கற்பளித்த கன்னி', 'விதவையின் காதல்' என்ற நாவல்களையும் எழுதியுள்ளார். மலாயா வந்தபிறகு 'பேசத் தெரியுமா?’, 'எண்ணமும் எழுத்தும்’ என்ற நூல்களைக் கொண்டு வந்தார்.
மே 22, 1949-ல் கோலாலம்பூரில் வெளிவந்த ஜனநாயகம் நாளிதழில் 'எண்ணச் சுழலில்’ என்ற செய்தி விமர்சனக் கட்டுரைத் தொடர் ஒன்றை 'ஏகாங்கி’ எனும் புனைபெயரில் எழுதினார். சிறிது காலம் அந்த நாளிதழின் துணையாசிரியராகவும் இருந்துள்ளார். 1955-ல் தொடங்கப்பட்ட 'திருமுகம்’ இலக்கிய இதழில் 'மீனாவின் கல்யாணம்’ என்ற நாடகத்தைத் தொடராக எழுதினார்.
நவம்பர் 26, 1950 முதல் ஆகஸ்டு 19, 1951 வரை மலேசிய இதழான தமிழ் நேசனில் ஒன்பது மாதங்கள் கதை வகுப்பை நடத்தினார். ஏப்ரல் 19, 1952 முதல் ஜூன் 28, 1952 வரை தமிழ் முரசு நாளிதழில் ரசனை வகுப்பு நடத்தினார்
புதுமைப்பித்தன் விவாதம்
புதுமைப்பித்தனின் 'விபரீத ஆசை’ என்ற சிறுகதையை முன்வைத்து 1951 முதல் 1952 வரை தமிழ் முரசு நாளிதழில் நடைபெற்ற 'புதுமைப்பித்தன் மேதையா’ என்ற விவாதத்தில் துடிப்புடன் பங்கெடுத்தார் சுப. நாராயணன். (பார்க்க புதுமைப்பித்தன் விவாதம்,மலேசியா)
கதை வகுப்பு
புதுமைப்பித்தன் விவாதத்தை ஒட்டி சுப.நாராயணன் தமிழ் நேசன் இதழில் கதை வகுப்பு ஒன்றை தொடங்கினார். கதை வகுப்பு எனத் தலைப்பிடப்பட்டிருந்தாலும் கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், மொழிப்பெயர்ப்புகள் என அனைத்திற்கும் இவ்வகுப்பு இடமளித்தது. சிறுகதைகளே அதிகம் இந்த வகுப்பில் விமர்சிக்கப்பட்டன.
வகுப்பு என்பதால் சுப. நாராயணன் தனக்கு 'கந்தசாமி வாத்தியார்’ எனும் புனைப்பெயரைச் சூட்டிக்கொண்டார். அகோரநாத் பண்டிதர் (பண்டிதர்), படாரிக்கண்ணு (விமர்சகர்), பஸ்மாசுரப் பாவலர் (ரசிகர்) என அவர் தன்னையே பிற கதா பாத்திரங்களாக உருவகித்துக்கொண்டு இவ்வகுப்பை நடத்தினார்/ அவருக்குத் துணையாக பைரோஜி நாராயணன் இருந்தார். அவர் தனக்கு 'வானம்பாடியார்’ எனப் புனைப்பெயர் இட்டுக்கொண்டார்.
நவம்பர் 26, 1950 முதல் மார்ச் 18, 1951 வரை இவ்வகுப்பு நடைபெற்றது. இடையில் ஒரு மாதம் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 8, 1951-ல் தொடங்கி ஆகஸ்டு 19, 1951 வரை இந்த வகுப்பு நீடித்தது. மார்ச் 11, 1951-ல் இவ்வகுப்பை ஒட்டி பரீட்சையும் நடத்தப்பட்டது.
தமிழ் நேசனின் வரும் சிறுகதைகளை சுப. நாராயணன் விமர்சித்து எழுதினார். சிறந்த படைப்புகளைத் தமிழ் நேசனில் பிரசுரித்தார். சில படைப்புகளைச் செறிவாக்கி மேம்படுத்த வேண்டிய குறிப்புகளுடன் வெளியிட்டார். புதிய எழுத்தாளர்களை நெறிப்படுத்துவதே இவ்வகுப்பின் நோக்கமாக இருந்தது. இதன் வழி புதிய எழுத்தாளர் அணி ஒன்று மலாயாவில் அடையாளம் காணப்பட்டது. மா. செ. மாயதேவன் மற்றும் மா. இராமையா ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'இரத்த தானம்’ சிறுகதை நூல் இம்முயற்சியில் உருவான விளைவு.
இம்முயற்சி குறித்த விமர்சனம்
மார்ச் 11, 1951-ல் கதை வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்காக தமிழ் நேசன் நாளிதழில் நடத்தப்பட்ட பரீட்சை, இலக்கியத்தை ஒட்டியதாக இல்லை என்பது ஆய்வாளர் பாலபாஸ்கரன் அவர்களின் கருத்து. கதை வகுப்பின் நோக்கத்தை அந்த பரீட்சை முறியடித்ததாக அவர் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். பொருளியல், தத்துவம், அரசியல், மனத்தத்துவம், மொழி, இலக்கணம், இலக்கியம் எனப்பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் அவர் இக்கருத்தை முன் வைக்கிறார்.
ரசனை வகுப்பு
ஏப்ரல் 19, 1952 முதல் ஜூன் 28, 1952 வரை ரசனை வகுப்பு எனும் புதிய திட்டத்தைத் தமிழ் முரசு நாளிதழில் தொடங்கினார் சுப. நாராயணன். கந்தசாமி வாத்தியார் எனும் பெயரிலேயே அதை நடத்தினார். அவருக்குத் துணையாக வை. திருநாவுக்கரசு தும்பி என்ற பெயரில் இணைந்தார். இம்முயற்சிக்குத் தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் கோ. சாரங்கபாணி மேற்பார்வையாளராக இருந்தார்.
இலக்கிய இடம்
1950 -1951 ஆண்டுகளில் தமிழ் நேசன் நாளிதழில் நடைபெற்ற 'கதை வகுப்பு’ அன்றைய மலாயா இலக்கிய வரலாற்றில் முக்கியத் திருப்புனை. தமிழ் நாட்டு எழுத்துப்படிவங்களை நம்பியிருந்த தமிழ் நேசன் நாளிதழுக்கு உள்நாட்டு படைப்புகளை இவ்வகுப்பு இடையறாது உருவாக்கியது. தாய் நிலமான தமிழகத்தைவிட மலாயா நிலத்தின் வாழ்வு எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் இவ்வகுப்பின் வழியாக உருவாக்கப்பட்டது. தமிழிலக்கியத்தில் இலக்கியப் பயிற்றுநராக இவர் இடம்பெறுகிறார்
நூல்கள்
கட்டுரைகள்
- வாழப்பிறந்தோம் - 1947
- ஆரியப் புல்லுருவி - 1949
- மதம்பிடித்த மடாதிபதிகள்
- சீனமும் சீன மக்களும்
- பேசத் தெரியுமா? - 1950
- எண்ணமும் எழுத்தும்
விமர்சன நூல்
- கவிதை, கலை, விமர்சனம்
நாவல்
- கற்பளித்த கன்னி
- அன்று இரவில் - 1948
உசாத்துணை
- சிங்கப்பூர் - மலேசியா தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பங்கள் - பாலபாஸ்கரன்
- தமிழில் சிறுபத்திரிகைகள் - வல்லிக்கண்ணன்
- மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள்-1, vallinam.com
- அறிந்த வரலாற்றில் அறியப்படாத இடைவெளி, திலிப் குமார் அகிலன், இரா. சிரவணதீர்த்தா, வல்லினம்
- கந்தசாமி வாத்தியார் ஆகிய சுப நாராயணனும் மலாயாத் தமிழ் எழுத்தாளர்களும்
- சடக்கு சுப நாராயணன் படம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:04 IST