under review

இரா. நடராசன்

From Tamil Wiki
இரா. நடராசன் (படம் நன்றி: இந்து தமிழ் திசை)
இரா. நடராசன்

இரா. நடராசன் (ஆயிஷா இரா. நடராசன்; பிறப்பு: டிசம்பர் 8, 1964) தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், கல்வியாளர். தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். பல நூல்களை மொழிபெயர்த்தார். நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். பால சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

இரா. நடராசன், திருச்சியை அடுத்த லால்குடியில், டிசம்பர் 8, 1964 அன்று பிறந்தார். தந்தை அரசு ஊழியர். தந்தையின் பணி மாறுதல் காரணமாக, நடராசன் பல்வேறு ஊர்களில் பள்ளிக்கல்வி கற்றார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இரா. நடராசன், தனது பதினாறம் வயதில், கிராம நலப்பணி திட்ட முகாமொன்றில் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றினார். 1986-ல் அறிவியல் மற்றும் மொழியியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1996-ல், சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றினார். 1999 முதல் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். மணமானவர்.

ஆயிஷா - இரா. நடராசன் குறு நாவல்

இலக்கிய வாழ்க்கை

இரா. நடராசனுக்கு, அவரது தந்தையின் மூலம் இலக்கிய நூல்கள் அறிமுகமாகின. பள்ளி மற்றும் பொது நூலகங்களில் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். முதல் கவிதை, ஆனந்த விகடனில், 1976-ல் வெளியானது. தொடர்ந்து கணையாழி, தினமலர் வாரமலர் உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் வெளியாகின. முதல் கவிதைத் தொகுதி ‘கருவறை முதல் கல்லறை வரை..’ 1982-ல் வெளியானது. 1990-ல் ‘கறுப்பு யுத்தம்’ என்ற தலைப்பிலான நடராசனின் கவிதைத் தொகுதியை எழுத்தாளர் சுஜாதா வெளியிட்டார். கவிஞர் இன்குலாப் அதற்கு முன்னுரை எழுதினார். நடராசனின் முதல் சிறுகதை 'இரவாகி' கணையாழியில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு, ‘மிச்சமிருப்பவன்', 1994-ல், வெளியானது. நாவல்கள் எழுதினார். கதையை, கதை மாந்தர்களே வாசகர்களோடு சேர்ந்து வாசிக்கும் உத்தியை ‘பாலிதீன் பைகள்' என்ற நாவலில் கையாண்டார்.

எழுத்து

1996-ல் வெளியான, இரா. நடராசனின் ‘ஆயிஷா’ குறுநாவல், கல்வி முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், கல்வி முறையின் அவலங்களையும், அவற்றின் போதாமைகளையும் சுட்டிக் காட்டியது. இந்நாவல் ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது. 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. குறும்படம், படக்கதை, நாடகம் என்று பல தளங்களில் வெளியானது. தமிழக அரசு, ’அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இந்நூலைக் கட்டாயப் பாடமாக்கியது. பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ’ஆயிஷா’ பாடமாக வைக்கப்பட்டது. இப்படைப்பின் மூலம் நடராசன், ‘ஆயிஷா’ நடராசன் ஆனார்.

நடராசன் சிறுகதை, குறுநாவல், புதினம் , பொருளாதாரம், அறிவியல், கணிதம், மேலாண்மை, மருத்துவம், வாழ்க்கை வரலாறு, குழந்தை வளர்ப்பு எனப் பல துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இவரது நான்கு சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு சர்வதேசத் திரைவிழாக்களில் விருதுகள் பெற்றன. இவரது படைப்புகளில் சில ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், ஹிந்தி, தெலுங்கு, கொங்கணி, மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நூல்களை மாணவர்கள் சிலர் எம்.பில் படிப்பிற்காக ஆய்வு செய்தனர்.

சிறார் இலக்கிய நூல்கள்
சிறார் இலக்கியம்

இரா. நடராசன், ஆசிரியராக இருந்த அனுபவத்தைக் கொண்டு பல சிறார் நூல்களை எழுதினார். சுனாமியையும், சாரணர் அமைப்பின் முக்கியத்துவத்தையும் கூறும் நாவல், கணிதத்தை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் கதை வழியே கூறும் கதை, குழந்தைத் தொழிலாளியான சிறுவன் ஒருவன் செஸ் சாம்பியனாய் மாறும் படைப்பு, அறிவியல் புனைகதை, மருத்துவம் பற்றிய கதை என பல்வகைக் கதைகளைச் சிறார்களுக்காக எழுதினார்.

நடராசன் எழுதிய ‘பூஜ்யமாம் ஆண்டு’ சிறார் நாவல், தமிழின் முதல் பிரெய்ல் மொழி நாவலாகக் கருதப்படுகிறது. கண்பார்வையற்ற ஒரு சிறுவன், பேச்சுத்திறன் அற்ற மற்றொரு சிறுவன், காது கேளாத எடி என்னும் சிறுவன் இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து செய்யும் சாதனைகளை, அதற்கான அவர்களது முயற்சிகளைப் பேசுபொருளாகக் கொண்டது இந்நாவல் .

மொழிபெயர்ப்பு

இரா. நடராசன், மொழிபெயர்ப்புகளிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். ஆங்கிலத்திலிருந்து பல்துறை நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

இரா. நடராசன் உரை

இதழியல்

இரா. நடராசன், புத்தகங்களுக்காகவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார்.

அமைப்புச் செயல்பாடுகள்

கல்வியாளரான இரா. நடராசன், ஆசிரியரும் மாணவர்களும் ஒன்றிணைந்து கற்கும் செயல் முறைக் கல்வியான ‘வகுப்பறை ஜனநாயகம்’ என்ற கல்வி முறையை உருவாக்கினார். அதனைத் தம் பள்ளியில் செயல்படுத்தி வரவேற்பைப் பெற்றார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிகழும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். 'கல்வியியல்’ சார்ந்து பல்வேறு விவாதங்களை முன்னெடுத்தார். பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு நிகழ்வதே நல்ல கல்விக்கு அடிப்படையாகும் என்பதைப் பல உரைகளின் மூலம் விளக்கினார்.

இரா.நடராசன் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்து நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதெமியோடு இணைந்து கடலூரில் தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவினை (National Childrens Book Festival of Cuddalore) நடத்தினார்.

பால சாகித்ய புரஸ்கார் விருது

விருதுகள்

  • திருப்பூர் கலை இலக்கிய பேரவை நடத்திய சுதந்திர பொன்விழா ஆண்டு நாவல் போட்டியில் பரிசு - பாலிதீன் பைகள் நாவல்.
  • கணையாழி குறுநாவல் போட்டிப் பரிசு - ஆயிஷா குறு நாவல்.
  • தமிழ் வளர்ச்சித் துறை விருது - கணிதத்தின் கதை நூல்.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கிய சிறந்த சிறுவர் நூலுக்கான விருது - மலர் அல்ஜீப்ரா நாவல்.
  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லி தெய்வசிகாமணி விருது
  • நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
  • பால சாகித்ய அகாடமி விருது - விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகளுக்காக.

இலக்கிய இடம்

இரா. நடராசன், அறிவியல், சிறார் இலக்கியம், கல்வியியல் சார்ந்து பல நூல்களை எழுதினார். மொழிபெயர்த்தார். சிறுவர்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் தனது படைப்புகளை எழுதினார். உலக விஞ்ஞானிகளை, அறிஞர்களை சிறார்களுக்குத் தனது மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். அறிவியல் செய்திகளை சிறார்களுக்குப் புரியும் வகையில் தந்த முக்கிய படைப்பாளியாக இரா. நடராசன் மதிப்பிடப்படுகிறார். அறிவியலையும், உளவியலையும் முதன்மைப்படுத்தி போதிக்கும் ஒரு கல்வியியலாளராக இரா. நடராசன் மதிக்கப்படுகிறார்.

இரா. நடராசன் நூல்கள்
இரா. நடராசன் நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • கருவறை முதல் கல்லறை வரை
  • கறுப்பு யுத்தம்
  • தொலைப்புச் செய்திகள்... (கதைக் காவியம்)
சிறுகதைத் தொகுப்புகள்
  • மிச்சமிருப்பவன்
  • மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து
  • ரோஸ் மற்றும் - நெடுங்கதைகள்
  • ஒரு தூய மொழியின் துயரக் குழந்தைகள்
  • ஆயிஷா இரா.நடராசன் சிறுகதைகள்
நாவல்
  • பாலித்தீன் பைகள்
மொழிபெயர்ப்பு
  • அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை - மூலம்: பெடரிக் டக்ளஸ்
  • பயாஃப்ராவை நோக்கி - மூலம்: புச்சி யாசெட்டா
  • இடையில் ஓடும் நதி - மூலம்: கூ.கி.வா.திவாங்கோ
  • உருவாகும் உள்ளம் - மூலம்: விளையனூர் எஸ். ராமச்சந்திரன்
நாடகம்
  • ஃபீனிக்ஸ் - அறிவியல் நாடகங்கள்
  • சார்லஸ் டார்வின்
  • கலிலியோ
  • கேள்வியின் நாயகன்
சிறார் படைப்புகள்
  • ஆயிஷா
  • நீ எறும்புகளை நேசிக்கிறாயா?
  • மலர் அல்ஜீப்ரா
  • கணிதத்தின் கதை
  • டார்வின்
  • மைக்கேல் பாரடே
  • கலிலியோ
  • ஹென்றி ஃபோர்டு
  • மாக்ஸ் பிளாங்க்
  • கிரிகொரி பிங்கஸ்
  • ஆண்டனி-வான்-லியோவென் ஹுக்
  • அந்துவான்-லாவாசியர்
  • அலெக்சாந்தர் ஃபிளமிங்
  • இது யாருடைய வகுப்பறை...?
  • நாகா
  • ரோஸ்
  • கருவியாலஜி
  • நான் ஏன் தந்தையைப் போல இல்லை
  • கதைடாஸ்கோப்
  • சர்க்கஸ் டாட் காம்
  • ரஃப் நோட்டு
  • பூமா
  • இரவு பகலான கதை
  • மேரி கியூரி
  • விண்வெளிக்கு ஒரு புறவழிச் சாலை
  • ஒரு தோழியின் கதை
  • ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்
  • நம்பர் பூதம்
  • சீனிவாச ராமானுஜன்
  • விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்
  • டோரா வரை…கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு
  • நத்தைக்கு எத்தனை கால்?
  • நவீன பஞ்சதந்திரக் கதைகள்
  • உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன்
  • ஐன்ஸ்டீன் முதல் ஹாக்கிங் வரை
  • குண்டு ராஜா 1... 2... 3...
  • மழலையர் கல்வி
  • அறிவியல் நிறம் சிறப்பு
  • அழியவிடல்
  • நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்?
  • போர் முனைக்குச் சென்ற சிறுவன்
  • பாஸ்தான் பெயில்; பெயில் தான் பாஸ்
  • சர்க்யூட் தமிழன்
  • வாங்க அறிவியல் பேசலாம்
  • ஆதியோடு அறிவியல் கொண்டாட்டங்கள்
  • உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்
  • புராதன மருந்தகத்தின் பணிச் சிறுவன்
  • வாசிக்கலாம்
  • எப்படி வந்தேன் தெரியுமா?
  • மரபியல்
  • கணித மேதைகளின் பேஸ்புக்
  • அறிவியல் அ முதல் அஃ வரை
  • ஒரு படை வீரரின் மகன்
  • இளம் விஞ்ஞானி ஐடியா அகிலன்
  • சூப்பர் சுட்டிஸ்
  • உலகப் பெண் விஞ்ஞானிகள்
  • வரலாறு மறந்த விஞ்ஞானிகள்
  • ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை
  • 10 எளிய இயற்பியல் சோதனைகள்
  • 10 எளிய வேதியியல் சோதனைகள்
  • 10 எளிய உயிரியல் சோதனைகள்
  • வந்தே மாதரம் - அறிவியல் நெடுங்கதை
  • மின்மினி உலகத்தின் கதை
  • அறிவியல் வெல்லும்
  • அறிவியல் அடுத்தது என்ன?
  • உயிரியல் சோதனைகள்
  • அறிவியல் நிறம் சிவப்பு
  • இங்கிலீஷ் தவளை
  • டார்வின் ஸ்கூல்
  • ரயில்
  • கப்பல்
  • விமானம்
  • ராக்கெட் - அறிவியல் புனை கதைகள்
  • ரோபோட்
  • டெலஸ்கோப் மாமா சாகசங்கள்
  • குண்டக்க மண்டக்க அறிவியல்
  • இயற்பியலின் கதை ஈர்ப்பு விசை முதல் ஈர்ப்பு அலைகள் வரை
  • 1729
  • கல்வி 4.0
  • பூஜ்யமாம் ஆண்டு (ப்ரெய்லி நூல்)
கட்டுரை நூல்கள்
  • இந்தியக் கல்விப் போராளிகள்
  • மலாலா:கரும்பலையின் யுத்தம்
  • வரலாற்றில் மொழிகள்
  • ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை
  • உலகத் தொழில்நுட்ப முன்னோடிகள்
  • ஈரடிப்போர்
  • உலகை மாற்றிய சமன்பாடுகள்
  • பள்ளிக் கல்வி
  • வன்முறையில்லா வகுப்பறை
  • இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்
  • காலநிலை அகதிகள்
  • கற்றல் என்பது யாதெனில்
  • ஒளியின் சுருக்கமான வரலாறு
ஆங்கில நூல்கள்
  • The Learning Teacher
  • Darwin School
  • Mendal – Scientific Revolution
  • Antoine Lavoisier – Scientific Revolution
  • Nicholas Copernicus – Scientific Revolution
  • Issac Newton – Scientific Revolution
  • Galileo Galilei – Scientific Revolution
  • Charles darwin – Scientific Revolution
  • Albert Einstein – Scientific Revolution
  • Euclid – Scientific Revolution
  • Pavlov – Scientific Revolution
  • Marie Curie - Scientific Revolution

மற்றும் பல நூல்கள்

உசாத்துணை


✅Finalised Page