under review

இரா. கலியபெருமாள்

From Tamil Wiki
முனைவர், புலவர் இரா. கலியபெருமாள்

இரா. கலியபெருமாள் (பிறப்பு: டிசம்பர் 5, 1936) (சான்றிதழ் படி: ஜூலை 1, 1938) தமிழறிஞர், ஆய்வாளர், சொற்பொழிவாளர். தமிழாசிரியராகப் பணியாற்றினார். தஞ்சைக் கம்பன் கழகம் சார்பாக கம்பராமாயண வகுப்புகளை நடத்தினார். பெரியபுராணம், கலித்தொகை, புறநானூறு வகுப்புகளை நடத்தினார். தமிழக அரசின் இலக்கியமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

இரா. கலியபெருமாள், தஞ்சாவூர் இராவுசாப்பட்டியில், க.இராசு-துளசியம்மாள் இணையருக்கு, ஜூலை 1, 1938 அன்று பிறந்தார். தொடக்கக் கல்வியை இராவுசாப்பட்டி ஆரம்பப் பள்ளியில் படித்தார். ஆறு முதல் பதினொன்று வரை வல்லம் பள்ளியில் படித்தார். கரந்தை புலவர் கல்லூரியில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியர் பயிற்சி பெற்றார். தொலைதூரக் கல்வி வாயிலாக பி.லிட், பி.எட், எம்.ஏ., எம்.எட். பட்டங்கள் பெற்றார். ‘தொல்காப்பிய உவமையியல் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றார். ‘தொல்காப்பியப் பொருளதிகார உரைவேறுபாடு - அகத்திணையியல், புறத்திணையியல்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இரா. கலியபெருமாள் அரசுப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்விற்குப் பின் தஞ்சை ந.மு.வேங்கடாசமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: க. இராசேசுவரி. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

இலக்கிய வாழ்க்கை

இரா. கலியபெருமாள், தமிழ்ப் பொழில் இதழில் பல கட்டுரைகளை எழுதினார். கம்பன் கழகத்தில் நிகழ்ந்த பல பட்டிமன்றங்களில், சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். கம்பன் கழகம் சார்பில் கம்பராமாயண வகுப்புகளைப் பத்து ஆண்டுகளுக்கும் நடத்தினார். பெரியபுராணம், கலித்தொகை வகுப்புகளை நடத்தினார். தஞ்சை உலகத் திருக்குறள் பேரவை சார்பில், புறநானூற்று வகுப்புகளை நடத்தினார்.

பல்வேறு கல்லூரிகளிலும், சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய இலக்கியவிழாக்களிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தனது தொல்காப்பியம் பற்றிய ஆய்வு நூலை ’தொட்டனைத்தூறும் தொல்காப்பியம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். கோவையில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் மாநாட்டில் ‘தொல்காப்பியர் உவமைகள்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசித்தார்.

விருதுகள்

  • தஞ்சை ரோட்டரி சங்கம் வழங்கிய தமிழ்ப்பேராசான் விருது
  • திருவையாறு ஔவைக் கோட்டம் வழங்கிய ஔவை விருது
  • வாண்டையார் விருது
  • தஞ்சை சதய விழாக் குழுவினர் வழங்கிய மாமன்னன் இராசராசன் விருது
  • தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை வழங்கிய குறள் நெறிச் செம்மல்
  • தஞ்சாவூர் திருவருள் பேரவை அளித்த ‘கம்பர் சீர் பரவுவார்’ பட்டம்
  • வெற்றித் தமிழர் பேரவை வழங்கிய கவிஞர் திருநாள் விருது
  • தி.மு.க. இலக்கிய அணி அளித்த ’தமிழவேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழி விருது’
  • தமிழகப் புலவர் குழுவின் தொல்காப்பியர் விருது
  • இரகுநாத ராசாளியார் விருது
  • தஞ்சை சுழற்சங்கத்தின் மண்ணின் சிறந்த தமிழறிஞர் விருது
  • வாழ்நாள் சாதனையாளர் விருது
  • ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரிசு
  • சித்பவானந்தா கழகப் பரிசு
  • திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பரிசு
  • ந.மு.வேங்கடசாமி.நாட்டார் நினைவுத் தங்கபதக்கம்

பொறுப்புகள்

  • தஞ்சை ந.மு.வேங்கடாசமி நாட்டார் கல்லூரியின் இலக்கியச் செயலாளர்
  • பல்வேறு இலக்கிய அமைப்புகளில் உறுப்பினர்.

மதிப்பீடு

புலவர் இரா. கலியபெருமாள் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்த பயிற்சி பெற்ற தமிழறிஞர். இலக்கியங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பாடல்களை மேற்கோளாகக் காட்டி உரையாற்றக் கூடியவராக சக தமிழறிஞர்களால் அறியப்படுகிறார்.

நூல்

  • தொட்டனைத்தூறும் தொல்காப்பியம்

உசாத்துணை


✅Finalised Page