ஆசிரியன் பெருங்கண்ணன்
ஆசிரியன் பெருங்கண்ணன், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
ஆசிரியன் பெருங்கண்ணனின் இயற்பெயர் பெருங்கண்ணன். ஆசிரியன் என்ற அடைமொழி புலவரைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இதுவன்றி, ஆசிரியன் என்ற சொல் அந்தணரைக் குறிப்பது என்றும் சிலர் கருதுகிறார்கள்.
இலக்கிய வாழ்க்கை
ஆசிரியன் பெருங்கண்ணன் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 239-வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தலைவன் அருகிலிருக்கும்போது அவனைத் தழுவாமல் இருப்பதேன் என தோழி தலைவிக்கு கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பாடலால் அறியவரும் செய்திகள்
- காந்தள் மலரில் அமரும் தும்பி மாணிக்கத்தை உமிழும் பாம்பு போல் காட்சியளிக்கிறது
- காந்தள் மலரின் தாது இயற்கையாகவே மணம் நிரம்பியது, தும்பி ஊதியதால் இன்னும் அதிகமாக மணம் கமழ்ந்தது. தலைவன் செயலால் ஊரில் அலர் எழுந்தது. காந்தளும் தும்பியும் பொருந்தியது பாம்பும் மணியும் போலும் அச்சம் தரும் தோற்றத்தைத் தந்தது போல, அவர்கள் அன்பும் அஞ்சுவதற்கு உரியதாயிற்று.
- பாம்பு மணியை உமிழ்தல் உலகத்தில் நடக்காத செயலாகையால் இது இல்பொருள் உவமை.
பாடல் நடை
குறுந்தொகை 239
தலைவன் சிறைப்புறமாக இருக்கையில் தலைவி தோழிக்குக் கூறுவாளாய், "என் தோள்கள் நெகிழ்ந்தன; நாணமும் அகன்றது’’ என்று கூறி வரைவு கடாயது.
தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே
விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச்
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே
தோழி, அவன் மலைநாடன். அங்கு காந்தள் மலர் மலைப்பிளவுக் குகை முழுவதும் கமழும். அதில் தேன் உண்ணும் தும்பி நாகப்பாம்பு மணி உமிழ்வது போல் தோன்றும். இப்படிப்பட்ட மலைநிலப் பகுதி அவன் வேலிநிலம். அவனை எண்ணி அவனைத் தழுவிய தோள் வாடுகிறது. கையில் வளையல் கழல்கிறது. இந்த நிலையில் நாணம் எதற்கு?
உசாத்துணை
சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் குறுந்தொகை 239, தமிழ்த் துளி இணையதளம் குறுந்தொகை 239, தமிழ் சுரங்கம் இணையதளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Jan-2023, 07:57:03 IST