under review

அழிசி நச்சாத்தனார்

From Tamil Wiki

அழிசி நச்சாத்தனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

அழிசி நச்சாத்தனார், அழிசி என்னும் ஊரினராகவோ, அழிசி என்பவரின் மகனாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சாத்தனார் என்ற பெயருடன் 'ந' என்னும் நன்மை தரும் தொகுதி இணைந்து நல்ல சாத்தனார் என்னும் பொருளைத் தரும்.

இலக்கிய வாழ்க்கை

அழிசி நச்சாத்தனார் இயற்றிய ஒரு பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 271-வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இப்பாடலை, ஒருநாள் தலைவனோடு பழகியது நோய்போலத் தொடர்கிறது என தலைவி கூறுவதாக இயற்றியுள்ளார்.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 271
  • இப்பாடலில் தலைவன் “நாடன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறான். நாடன் என்பது குறிஞ்சி நிலத்தலைவனைக் குறிக்கிறது.
  • அருவி குறிப்பிடப்பட்டிருப்பதால் தலைவனின் இடம் மலை சார்ந்த இடம் என்று அறிகிறோம். முதற்பொருளாகிய நிலத்தின் அடிப்படையில் பார்த்தால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகத் தோன்றுகிறது. தலைவனைச் சிலகாலமாகக் காணாததால் தன் வருத்தத்தைத் தலைவி தோழியிடம் கூறுவதால் இது மருதத் திணை.
குறுந்தொகை 271

மருதத் திணை தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

அருவி யன்ன பருவறை சிதறி

யாறுநிறை பகரு நாடனைத் தேறி

உற்றது மன்னு மொருநாள் மற்றது

தவப்பன் னாள்தோள் மயங்கி

வௌவும் பண்பின் நோயா கின்றே.

(தோழி! அருவி கொட்டுவதைப் போல, மேகம் பருத்த மழைத்துளிகளைச் சிதறியதால், ஆற்றில் வெள்ளம் நிறைந்து ஓசையுடன் ஓடும் நாட்டை உடைய தலைவனை நல்லவன் என்று தெளிந்து, அவனோடு கூடி இன்பமாக இருந்தது ஒருநாள்தான். அங்ஙனம் அவனோடு கூடி இன்புற்ற அந்த ஒருநாள் உறவு மிகப்பல நாட்கள், என் தோளை வருத்தி, என் அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையையுடைய துன்பத்தைத் தருகிறது.)

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை 14, புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

குறுந்தொகை 271, தமிழ் சுரங்கம் இணையதளம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jan-2023, 18:45:17 IST