under review

அறிவியல் ஆத்திசூடி

From Tamil Wiki
ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)
அறிவியல் ஆத்திசூடி

அறிவியல் ஆத்திசூடி (2014), அறிவியல் கருத்துக்களைக் கூறும் ஆத்திசூடி நூல். இந்நூலின் ஒரு பகுதி, தமிழக அரசின் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் நெல்லை சு. முத்து.

வெளியீடு

அறிவியல் ஆத்திசூடி நூலை, 2014-ல், திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டது. இதன் ஆசிரியர் நெல்லை சு. முத்து.

ஆசிரியர் குறிப்பு

நெல்லை சு. முத்து தமிழக எழுத்தாளர், விஞ்ஞானி. விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம், சதீஷ்தவான் விண்வெளிமையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல அறிவியல் நூல்களை எழுதினார். 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

நூல் அமைப்பு

அறிவியல் ஆத்திசூடி, அறிவியல் சிந்தனை கொள், ஆய்வில் மூழ்கு என அகர வரிசையில் தொடங்கி வகர வரிசையில் நிறைவுற்றது.

பாடல்

அறிவியல் சிந்தனை கொள்

ஆய்வில் மூழ்கு

இயன்றவரை புரிந்துகொள்

ஈடுபாட்டுடன் அணுகு

உண்மை கண்டறி

ஊக்கம் வெற்றிதரும்

என்றும் அறிவியலே வெல்லும்

ஏன் என்று கேள்

ஐயம் தெளிந்து சொல்

ஒருமித்துச் செயல்படு

ஓய்வற உழை

ஔடதமாம் அனுபவம்

மதிப்பீடு

ஔவையாரின் ஆத்திசூடி, பாரதியார் மற்றும் பாரதிதாசனின் ஆத்திசூடி நூல்களை முன்னோடியாகக் கொண்டு பல நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் அறிவியலை மையமாகக் கொண்டு அது சார்ந்த கருத்துக்களைக் கூறும் நூலாக அறிவியல் ஆத்திசூடி நூல் அறியப்படுகிறது. இந்நூலின் ஒரு பகுதி, தமிழக அரசின் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jul-2024, 21:46:45 IST