under review

நெல்லை சு. முத்து

From Tamil Wiki
முத்து என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்து (பெயர் பட்டியல்)
விஞ்ஞானி, எழுத்தாளர் நெல்லை சு. முத்து (படம் நன்றி: தினமணி)
நெல்லை சு. முத்து

நெல்லை சு. முத்து (மே 10, 1951- ஜூன் 16, 2025) தமிழக எழுத்தாளர், விஞ்ஞானி. விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம், சதீஷ்தவான் விண்வெளிமையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். சிறார்களுக்காகச் சில அறிவியல் நூல்களை எழுதினார். தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

நெல்லை சு. முத்து, மே 10, 1951 அன்று, திருநெல்வேலியில், எம். சுப்பிரமணிய பிள்ளை - எம். சொர்ணத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருநெல்வேலியில் பள்ளிக் கல்வி கற்றார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் புதுமுக வகுப்புப் பயின்றார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் (இன்றைய மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) வேதியியலில் இளநிலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

நெல்லை சு. முத்து, 1973-ல், தனது 22-ம் வயதில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணிக்குச் சேர்ந்தார். 1997-ல், ஸ்ரீ ஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குப் பணியிட மாற்றம் பெற்றார். அங்கு 'திண்ம உந்து எரி பொருள் திட்டத் தொடர்புக்குழு' மேலாளராகப் பணியாற்றினார். முதல் நிலை விஞ்ஞானிகளுள் ஒருவராகப் பணிபுரிந்தார். டாக்டர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றினார். 2008-ல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள இந்திய விண்வெளி அலுவலகத்திற்குப் பணியிட மாற்றம் பெற்றார்.

நெல்லை சு. முத்து, மணமானவர். மனைவி: மரகதம். இவர்களுக்கு பாலசுப்பிரமணியன், கலைவாணி என இரு பிள்ளைகள்.

எழுத்தாளர் ஆ. மாதவனுடன் நெல்லை சு. முத்து

இலக்கிய வாழ்க்கை

நெல்லை சு. முத்து, அறிவியல் சார்ந்த கட்டுரைகள், தொடர்களை இதழ்களில் எழுதினார். சிறார்களுக்கான கதை, கட்டுரைகளை எழுதினார். 'காக்கைச் சிறகினிலே' இதழில் இரும்பின் தொன்மை குறித்த தொடர் ஒன்றை எழுதினார். நெல்லை சு. முத்து, அப்துல்கலாம் குறித்து நான்கு நூல்களை எழுதினார். அப்துல் கலாம் எழுதிய சில நூல்களை மொழிபெயர்த்தார். நெல்லை சு. முத்து எழுதிய அறிவியல் ஆத்திசூடி நூல், தமிழக அரசின் ஆறாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது.

நெல்லை சு. முத்து அறிவியல், நூல்கள், மொழிபெயர்ப்புகள், பொது அறிவு நூல்கள், கட்டுரைகள் என 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

ஆ.ப.ஜெ. அப்துல் கலாமுடன் நெல்லை சு. முத்து

விருதுகள்

  • தேசிய அறிவியல் விருது
  • தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது - விண்வெளி 2057, அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு, ஐன்ஸ்டீனும் அண்டவெளியும், அறிவியல் வரலாறு நூல்களுக்காக - நான்கு முறை
  • பாரதிதாசன் நூற்றாண்டு விழா கௌரவிப்பு
  • கேரளப் பல்கலைக்கழக தமிழ்த் துறை பொன்விழா நினைவுப் பரிசு
  • ஹெர்மன் குண்டர்ட் விருது
  • சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சிறந்த எழுத்தாளர் விருது
  • மலேசியா உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை அளித்த கவிமாமணி விருது
  • இளவேனில் அறிவியல் அமைப்பு அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருது

வாழ்க்கை வரலாறு

நெல்லை சு. முத்துவின் வாழ்க்கை வரலாற்றை ஆறு. இளங்கோவன் எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் மலாயா இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து, 2016-ல் வெளியிட்டது.

மறைவு

நெல்லை சு. முத்து ஜூன் 16, 2025 அன்று, தனது 74-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

நெல்லை சு. முத்து, தமிழகத்தின் விஞ்ஞானிகளுள் ஒருவர். டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றியவர். சிறார் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, அறிவியல், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு என 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சிறார்களுக்கான அறிவியல் நூலகள் சிலவற்றை எழுதியவராகவும், அறிவியல் செய்திகளை எளிய தமிழில் எழுதி விஞ்ஞானத் தொழில்நுட்பங்கள் குறித்த பரவலான கவனத்தை ஏற்படுத்திய எழுத்தாளராகவும் நெல்லை சு. முத்து மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • அனைவருக்கும் அறிவியல்
  • அறிவியலால் இணைவோம்
  • அறிவியலே வெல்லும்
  • அறிவியல் ஆத்திசூடி
  • அற்புத விஞ்ஞான விளையாட்டு
  • எங்கெங்கு காணினும் அறிவியல்
  • கற்றனைத்து ஊறும் அறிவியல்
  • சூரியச் சுற்றுலா
  • செவ்வாய் தேசம் நோக்கி
  • நானோ தொழில்நுட்பம்: ஒரு அறிமுகம்
  • மாக்கோள் மைந்தர்கள்
  • மானுடமாகும் அறிவியல்
  • வள்ளுவர் கண்ட அறிவியல்
  • முத்துவைக் கேளுங்கள்
  • விண்வெளி ஆயிரம்
  • விண்வெளி நாட்குறிப்புகள்
  • விண்வெளியில் புதுமைப் பெண்கள்
  • அறிவியல் கலை வளர்ப்போம்
  • அறிவியல் சிந்தனைகள்
  • அறிவியல் பெண்மணிகள்
  • அறிவியல் போற்றுதும்
  • அறிவியல் வரலாறு - 1
  • அறிவியல் வரலாறு - 2
  • அறிவியல் வரலாறு - 3
  • சேதி
  • அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு
  • வெற்றிப்பாதையில் இந்தியா
  • சுனாமி ஓர் அறிவியல் பார்வை
  • அறிவியல் உங்களுக்காக
  • விண்மீன்கள் கண்டு ரசிப்போம்
  • பாரதி காவியம்
  • மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி
  • சில சந்திப்புகள்... சில பதிவுகள்...
  • தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா
  • இயற்பியல் நோபல் விஞ்ஞானிகள்
  • அறிவியல் கொண்டாட்டம்
  • சமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்)
  • கவிதைகளில் அறிவியல்
  • சண்டால பிக்குணி
  • அறிவியலும் செம்மொழித் தமிழும்
  • ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்
  • தமிழ்ச் சூழலில் அறிவியல் புதினங்கள்
  • தமிழில் ஹைகூ
  • பத்தாயிரம் தமிழ் ஹைகூ
  • இரங்கற்பா
  • இந்திய விண்வெளி
  • வேதியல் நோபல் விஞ்ஞானிகள்
  • வேத விமானம்
  • வெற்றித் திருமகன் அப்துல் கலாம்
  • விண்வெளி 2057
  • சிந்தனை செய்வோம்
  • இந்நூற்றாண்டின் செயற்கைக் கோள்கள்
  • அறிவியல் எழுச்சி
  • இந்திய விஞ்ஞானிகள்
  • செவ்வாய்க் கிரகத்தில் மனிதன்
  • பயணம்
  • வான பலன்
  • அறிவியலே இலக்கியம்
  • ஆ. மாதவன் இலக்கியத்தடம்
சிறுகதைத் தொகுப்பு
  • ஐந்தாவது பரிமாணம்
மொழிபெயர்ப்பு
  • இந்தியா 2020 மாணவர்களுக்கு
  • இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jun-2025, 03:32:23 IST