under review

அறப்போர் (இதழ்)

From Tamil Wiki
அறப்போர் - வார இதழ்

அறப்போர் (1961) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வெளிவந்த வார இதழ். இராம. அரங்கண்ணல் இதன் ஆசிரியர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றிய பல செய்திகளைத் தாங்கி அறப்போர் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

தி.மு.க. வார இதழ் என்ற அறிவிப்புடன் 1961-ல் வெளிவந்த அரசியல் வார இதழ் அறப்போர். இராம. அரங்கண்ணல் இதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். எம்.பி. சத்தியமூர்த்தியின் முல்லை அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. முதல் ஆண்டு எட்டுப் பக்கங்களுடன் வெளிவந்த இவ்விதழ், இரண்டாமாண்டில் 12 பக்கங்களுடன் வெளிவந்தது. இதழின் அரையாண்டு சந்தா நான்கு ரூபாய். முழு ஆண்டுச் சந்தா 8 ரூபாய்.

உள்ளடக்கம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சார இதழாக அறப்போர் வெளிவந்தது. திராவிட இயக்கச் செய்திகள், கூட்டங்கள், கொள்கை விளக்கங்கள், அண்ணாவின் தலையங்கங்கள், கட்டுரைகள், சுற்றுப்பயண விவரங்கள் போன்றவை அறப்போரில் இடம்பெற்றன. வெளிநாட்டுப் புரட்சியாளர்கள் பற்றி அரங்கண்ணல் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். ’நான் கண்ட அண்ணா’ என்ற தலைப்பில் அரங்கண்ணல் எழுதிய தொடர் வரவேற்பைப் பெற்றது. 'குன்றத்திலே கொள்கைக் குன்றுகள்', 'பாட்டாளிகள் ஆண்ட புதிய அரசு', 'பிரெஞ்சுப் புரட்சி', '6000000 பேர்களைக் கொன்ற காதகன் ஈச்மென்', 'சர்க்காரை சந்திக்கழைத்த சரசவல்லி' போன்ற கட்டுரைகளை அரங்கண்ணல் எழுதினார். சிறுகதைகளுக்கும் இவ்விதழ் இடமளித்தது. ஆங்கில, இந்தியப் பிறமொழிக் கதைகள் அறப்போரில் இடம் பெற்றன.

அண்ணாவின் ‘தனித் திராவிட நாடு’ கோரிக்கையை அறப்போர் ஆதரித்தது. காங்கிரஸ் ஆட்சியைக் கண்டித்து பல கட்டுரைகள் அறப்போரில் வெளியாகின. அரசியல் சார்புக் கவிதைகளும் வெளிவந்தன. சிறுசிறு விளம்பரங்களும் இவ்விதழில் இடம் பெற்றன.

அறப்போர் - பொங்கல் மலர்

சிறப்பு வெளியீடுகள்

அறப்போர் இதழ் தைப் பொங்கலை ஒட்டி பொங்கல் மலர்களை வெளியிட்டது. 1962 தைப் பொங்கலின்போது வெளியான அறப்போர் பொங்கல் சிறப்பிதழில் கீழ்காணும் கட்டுரைகள் இடம் பெற்றன.

  • அண்ணாவின் அறப்போர் கட்டுரை
  • நாவலர் நெடுஞ்செழியனின் பொங்கலோ பொங்கல் கவிதை
  • மு. கருணாநிதியின் எனது பணி கட்டுரை
  • நாஞ்சில் மனோகரனின் சட்டமன்றம் செல்வதேன் கட்டுரை
  • க. அன்பழகனின் வெற்றிவாகை சூடுவோம் கட்டுரை
  • கா. அப்பாதுரையின் புதியதோர் உலகம் செய்வோம் கட்டுரை

கட்டுரைகளுடன் சிறுகதைகளும் பொங்கல் மலரில் இடம் பெற்றன. அரங்கண்ணல் எழுதிய ‘நான் ரெளடியா சார்?’ என்ற குறுநாவல் இடம் பெற்றது. அரசியல் பொங்கல் என்ற தலைப்பில் காமராசர்-கலக்கல் பொங்கல், பெரியார்-பணப் பொங்கல், சம்பத்-சுயநலப் பொங்கல், அண்ணா-அன்புப் பொங்கல், மக்கள்-காணிக்கைப் பொங்கல் போன்ற பல கோட்டோவிய கேலிச் சித்திரங்கள் இடம் பெற்றன.

நிறுத்தம்

அறப்போர் இதழ், சூழல்கள் காரணமாக சில ஆண்டுகளுக்குப் பின் நின்று போனது.

வரலாற்று இடம்

திராவிட இயக்கத்தின் சார்பாக நூற்றுக்கணக்கான இதழ்கள் தமிழில் வெளிவந்தன. அவற்றுள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இதழாகச் செயல்பட்ட முன்னோடி இதழ் அறப்போர். திராவிட நாடு கோரிக்கையை ஆதரித்து வெளிவந்த முக்கிய இதழ்களுள் ஒன்றாக அறப்போர் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page