under review

இராம. அரங்கண்ணல்

From Tamil Wiki
இராம. அரங்கண்ணல்

இராம. அரங்கண்ணல் (கே.ஆர்.ரங்கசாமி) (மார்ச் 31, 1928 - ஏப்ரல் 29, 1999) எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர். திரைக்கதை-வசன ஆசிரியர். திரைப்படத் தயாரிப்பாளர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. அரங்கண்ணலின் படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

கே.ஆர். ரங்கசாமி என்னும் இயற்பெயர் கொண்ட இராம. அரங்கண்ணல், தஞ்சாவூரில் உள்ள கோமல் என்ற சிற்றூரில், மார்ச் 31, 1928 அன்று, இராமகிருஷ்ணன் - ருக்மணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். உடன் பயின்ற மாணவர் மு. கருணாநிதி. பள்ளி இறுதி வகுப்பில் தவறிய அரங்கண்ணல், மீண்டும் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றார். தனிஆசிரியரின் மூலம் ஆங்கிலத்தை முறையாகப் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார் ஆனால், அதனை முழுமையாக முடிக்காமல் இடையில் நின்றார்.

தனி வாழ்க்கை

அரங்கண்ணல் மணமானவர்.

இராம. அரங்கண்ணலின் தன் வரலாற்று நூல்

இலக்கிய வாழ்க்கை

அரங்கண்ணல் அண்ணாவின் பாணியைப் பின்பற்றி கட்டுரைகள் எழுதினார். தமிழும் வடமொழியும் ஆங்கிலமும் விரவிய நடையில் எழுதினார். அரங்கண்ணலின் அரசியல் கட்டுரைகள் திராவிடநாடு, குடி அரசு, விடுதலை, அறப்போர் போன்ற இதழ்களில் வெளியாகின. ‘கோபுரம் ஏறிய கோமான்கள்’, ‘இரண்டு சைபர்தான் அதிகம்’, ‘நவம்பர் 7’, ‘டில்லியில் ட்ரூமன்’, ‘சக்கரதாரிகள்’ போன்றவை அரங்கண்ணல் எழுதிய அரசியல் கட்டுரைகளில் குறிப்பிடத்தகுந்தவை.

அரங்கண்ணலின் சிறுகதைகள் திராவிடநாடு இதழில் வெளியாகின. சிறுகதைகள் பல தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. பகுத்தறிவுக் கொள்கைகளை மையமாகக் கொண்ட பல நாவல்களை எழுதினார். தனது வாழ்க்கை அனுபவங்களை ‘நினைவுகள்’ என்ற நூலாக எழுதினார்.

இதழியல்

அரங்கண்ணல் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ ஏடான ‘முஸ்லிம்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து திராவிடநாடு இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். குடியரசு வார இதழிலும், விடுதலை நாளிதழிலும், துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1961-ல் ‘அறப்போர்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.

நாடகம்

அரங்கண்ணல் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்தார். கருணாநிதி எழுதிய நாடகங்கள் அரங்கேறிய போது அரங்கண்ணல் அவற்றில் முக்கிய வேடமேற்றார். கருணாநிதி எழுதி நடித்த ’வாழ முடியாதவர்கள்’ என்ற நாடகத்திலும் திராவிட இயக்கப் பிரச்சார நாடகங்கள் சிலவற்றிலும் அரங்கண்ணல் முக்கிய வேடமேற்று நடித்தார்.

திரைப்படம்

அரங்கண்ணல் தனது சிறுகதைகள் சில திரைப்படங்களானபோது அவற்றுக்கு வசனம் எழுதினார். 'செந்தாமரை', 'மகனே கேள்', 'பொன்னு விளையும் பூமி', 'பச்சை விளக்கு', 'அனுபவி ராஜா அனுபவி' போன்ற படங்களுக்குக் கதை-வசனம் எழுதினார். அரங்கண்ணல் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் சில படங்களைத் தயாரித்தார்.

அரசியல்

1940-ல், திருத்துறைப்பூண்டியில், அண்ணாவின் பேச்சைக் கேட்ட பள்ளி மாணவனான அரங்கண்ணல் அவர் பால் ஈர்க்கப்பட்டார். சக மாணவரான கருணாநிதியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அண்ணா, திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது அரங்கண்ணல் அண்ணாவை ஆதரித்துச் செயல்பட்டார். 1962-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வென்றார். 1967 தேர்தலில் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1971 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

1976-ல் தி.மு.க.வில் இருந்து வெளியேறி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைக்கப்பட்டபோது, அரங்கண்ணலும் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். 1984-ல் மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பணிகளை முன்னெடுத்தார்.

பொறுப்புகள்

  • திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர்
  • திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்
  • திராவிட முன்னேற்றக் கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர்

விருதுகள்

தமிழக அரசின் கலைமாமணி விருது

மறைவு

அரங்கண்ணல், ஏப்ரல் 29, 1999 அன்று, தனது 71-ம் வயதில் காலமானார்.

நாட்டுடைமை

அரங்கண்ணலின் படைப்புகளை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.

மதிப்பீடு

அரங்கண்ணல், திராவிட இயக்க எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவர். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை இலக்கிய நுண்ணுர்வுடன் எழுதினார். திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வெற்றிபெற்றார். பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடி அரசியல்வாதிகளுள் ஒருவராக அரங்கண்ணல் மதிக்கப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • செந்தாமரை
  • பச்சை விளக்கு
  • மகளே கேள்
நாவல்
  • வெண்ணிலா
  • அறுவடை
  • இதய தாகம்
  • கடிகாரம்
கட்டுரை நூல்கள்
  • புழுதிமேடு
  • ரஸ்புடீன்
  • ரோம்
  • இதயகீதம்
  • வியர்வை விருந்து
  • அறுவடை
  • உடைந்த இதயம்
  • நினைவுகள் (தன் வரலாற்று நூல்)

உசாத்துணை


✅Finalised Page