under review

பாலைத் திணை

From Tamil Wiki
Revision as of 05:46, 28 August 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகை நிலத் திணைகளைக் கொண்டதாகும். மணலும் மணல் சார்ந்த பகுதியும் பாலை நிலமாகும். பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை. பாலைத் திணையின் அக ஒழுக்கம் பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

பாலைத் திணையின் முதற்பொருள்

  • குறிஞ்சியும், முல்லையும் வறட்சியால் திரிந்த நிலமே பாலை ஆகிறது. ’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்' என்கிறது சிலப்பதிகாரம்.
  • பெரும் பொழுது- இளவேனில், முதுவேனில்
  • சிறு பொழுது - நண்பகல்.

பாலைத் திணையின் கருப்பொருள்கள்

தெய்வம் கொற்றவை
மக்கள் எயினர், எயிற்றியர், விடலை, காளை, மறவர், அத்தக் கள்வர், மழவர்
ஊர் குறும்பு
உணவு வழிப்பறி செய்த பொருள்கள், வளமான பகுதிகளில் சென்று கொள்ளை அடித்த பொருள்கள்
தொழில் வழிப்பறி, நிரை கவர்தல்
நீர் நிலை வற்றிய சுனை, கிணறு
மரங்கள் இருப்பை, பாலை
மலர்கள் எருக்கு, களரியாவிரை, இருப்பை, குரவம், பாதிரி
விலங்குகள் செந்நாய், வலுவிழலந்த விலங்குகள்: புலி, யானை
பறவைகள் பருந்து, கழுகு, காக்கை, கூகை, புறா
பண் பஞ்சுரப் பண்
யாழ் பாலையாழ்
பறை துடி

பாலைத் திணையின் உரிப்பொருள்

  • அக ஒழுக்கம்: பிரிதலும் பிரிதல் நிமித்தமும். தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல் பாலைத் திணையாகும்.
  • புற ஒழுக்கம்: வாகைத் திணை (போரில் வென்றவர்கள் வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதல் வாகைத் திணையாகும்)

பாலைத் திணைப் பாடல்கள்

ஐங்குறுநூறு, கலித்தொகை, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களில் பாலைத் திணை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page