standardised

வட்டத்தொட்டி

From Tamil Wiki
டிகேசி இல்லம், ராஜாஜி முதலியொர்

வட்டத்தொட்டி (1924- 1939 ) டி.கே.சிதம்பரநாத முதலியார் தன் இல்லத்தில் நடத்திவந்த இலக்கிய ரசனைக்கூட்டம்.

வரலாறு

டி.கே.சிதம்பரநாத முதலியார் திருநெல்வேலியில் வழக்கறிஞராக பணியாற்றிய போது 1924-ம் ஆண்டு ’இலக்கியச் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு ஒரு நட்புக்கூட்டமாகவே இருந்தது. வண்ணாரப்பேட்டையில் இருந்த தன் இல்லத்தில் இதன் சந்திப்புகளை நடத்தினார். நெல்லையிலுள்ள பாரம்பரிய வீட்டின் உள்முற்றத்தில் இக்கூட்டம் நடந்தமையால் இது வட்டத்தொட்டி (உள்முற்றத்துக்கான நெல்லைமாவட்ட பெயர்) என அழைக்கப்பட்டது.

வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பு 1924-ல் இருந்து 1927-வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. பின்னர் 1935-ல் இருந்து 1939- வரை சென்னையிலும் திருநெல்வேலியிலும் நடைபெற்றது

டிகேசி காலடியில் கி.ராஜநாராயணன்

பங்குகொண்டவர்கள்

திருநெல்வேலியில் இருந்த இலக்கிய ஆர்வலர்கள் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டனர். வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, சக்கரபாணி நம்பியார், மு. அருணாசலம் ,வித்வான் அருணாசலக் கவுண்டர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, மீ.ப.சோமு, தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான், அ.சீனிவாசராகவன் போன்றவர்கள் தொடர்ச்சியாக வந்தவர்கள். சி.ராஜகோபாலாச்சாரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெ.நா.அப்புசாமி , பாலசுப்பிரமணிய ஐயர் உள்ளிட்டோர் வட்டத்தொட்டிக்கு அவ்வப்போது வந்து கலந்துகொள்வோரில் குறிப்பிடத்தக்கவர்கள். அன்றைய இளம்படைப்பாளிகளான சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

டி.கே. சி.யின் மகள்  வயிற்றுப்பேரன்  தளவாய்   T. இராமசாமி  ( D.T.R. ) புரவலராகத்  தொடர்ந்து   நிகழ்த்தும்  பொருநை  இலக்கிய   வட்டம் டி.கே..சியின்  வட்டத்தொட்டி இலக்கிய   அமைப்பின் தொடர்ச்சியாக நவம்பர் 4,1984-அன்று தொடங்கப்பட்டது

இலக்கியப் பங்களிப்பு

வட்டத்தொட்டி தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய சந்திப்பு நிகழ்வு. மரபிலக்கியத்தை ரசிப்பதற்கான வழிமுறையை அது பயிற்றுவித்தது. அதன் கவிதையியல் என்பது மொழியழகு, சந்தம் ஆகியவற்றை முதன்மையாகக் கொள்வது. அதற்கு அச்சு ஊடகம் உதவியானது அல்ல. நேர்ச்சந்திப்புதான் தேவை. பாடல்களை பதம்பிரித்து, அடிப்படையான பண்களில் பாடுவது அவசியம். வெவ்வேறு கோணங்களிலான சொல்லாராய்ச்சியும் தேவை. அதற்கு இச்சந்திப்புகள் வழியமைத்தன. அச்சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள் பின்னாளில் விரிவான ரசனை விமர்சனங்களை எழுதி அதை ஓர் இயக்கமாக நிலைநாட்டினர்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.