first review completed

மதங்க சூளாமணி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
Line 37: Line 37:
* [https://www.noolaham.net/project/04/325/325.htm மதங்க சூளாமணி இணையநூலகம்]
* [https://www.noolaham.net/project/04/325/325.htm மதங்க சூளாமணி இணையநூலகம்]
* [https://www.noolaham.net/project/04/325/325.pdf மதங்கசூளாமணி இணையநூலகம்]
* [https://www.noolaham.net/project/04/325/325.pdf மதங்கசூளாமணி இணையநூலகம்]
}
{{First review completed}
}


{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:25, 14 July 2023

மதங்க சூளாமணி

மதங்க சூளாமணி (1926) சுவாமி விபுலானந்தர் எழுதிய நாடக இலக்கண நூல். தமிழிலக்கியங்களான சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றில் நாடகம் பற்றியும் கூத்து பற்றியும் சொல்லப்பட்ட செய்திகளை தொகுத்து, அவற்றை புரிந்துகொள்ளும் பொருட்டு ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை ஆராயும் நூல் இது. ஐரோப்பியச் செவ்வியல் நாடக மரபின் இலக்கணங்களுடன் தமிழிலக்கியம் கூறும் செய்திகளை ஒப்பிட்டு பழந்தமிழ் நாடக இலக்கணக்கொள்கைகளை மீட்டமைக்கும் நோக்கம் கொண்டது. இந்நூலின் முதன்மைப் பேசுபொருள் ஷேக்ஸ்பியரின் நாடகங்களே.

பெயர்ப்பொருள்

சுவாமி விபுலானந்தர் தன் நூலுக்கு மதங்க சூளாமணி எனப்பெயர் சூட்டினார். மதங்கர் என்றால் கூத்தர். சூதர், மாகதர் என்னும் இரண்டு பெயர்கள் மகாபாரதம் முதல் பயின்று வருகின்றன.சூதர்கள் பாடி அலையும் பாணர்கள். மாகதர் நடித்துப் பாடுபவர்கள். மாகதர் என்னும் சொல்லுக்கு இணையான சொல் மதங்கர்.சூளாமணி என்றால் மணிமுடியில் இருக்கும் வைரம் போன்ற அரிய கல். மதங்கசூளாமணி என்னும் சொல்லுக்கு கூத்தர் தங்கள் மணிமுடியில் அணிவது என்று பொருள்.

உருவாக்கம்

சுவாமி விபுலானந்தர் மதங்க சூளாமணி நூலின் முகவுரையில் இந்நூல் எழுதப்படுவதற்கான காரணத்தை விளக்குகிறார். தமிழில் சிலப்பதிகாரத்தின் அடியார்க்குநல்லார் உரையிலும் பிற உரைகளிலும் நாடகக்கொள்கைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை தமிழ்ப்பண்ணிசை மரபின் ஒரு பகுதியாகக் கொண்டு பயின்றாலொழிய முழுமையான பண்பாட்டுச் சித்திரத்தை அடைய முடியாது. ஆனால் அந்த இலக்கணங்களால் சுட்டப்படும் நாடகநூல்கள் பெரும்பாலும் வழக்கொழிந்தன. தமிழ்நாடகங்கள் வெளியே இருந்து வந்த நாடகமரபுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கின்றன. ஆகவே நூல்களில் சொல்லப்படும் இலக்கணங்களைத் தொகுத்து ஒரு நூலாக்க விபுலானந்தர் உளம்கொண்டார்.விபுலானந்தரின் காலகட்டத்தில் தமிழின் நாடகநூல்களில் ஏறத்தாழ முழுமையானது என கருதப்படும் கூத்தநூல் வெளியாகவில்லை. ச.து.சு. யோகியார் 1962-ல் அதைக் கண்டெடுத்து 1968-ல் அவர் மறைவுக்குப் பின்னரே அந்நூல் வெளிவந்தது. முந்தைய கூத்தநூல் ஒன்றைப் பற்றிய உதிரிச்செய்திகளே விபுனானந்தர் காலகட்டத்தில் கிடைத்தன.

விபுலானந்தர் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய 24-ஆம் ஆண்டு நிறைவு கருத்தரங்குக்கு மதுரை சென்றிருந்தபோது உ.வே.சாமிநாதையர் தலைமையில் நடந்த மன்றத்தில் பழந்தமிழ் நாடகக் கொள்கைகளைப் பற்றி விரிவாக ஓர் உரையை ஆற்றினார். அந்த அரங்கில் இருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.சி.ஸ்ரீனிவாச ஐயங்கார் என்னும் தமிழார்வலர் அவ்வுரையை விரிவாக நூலாக்கி வெளியிடவேண்டுமென்றும், அதற்குப் பண உதவி செய்வதாகவும் விபுலானந்தரிடம் சொல்லித் தூண்டினார். அதனால் விபுலானந்தர் இந்நூலை எழுதினார்.

இந்நூலில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனைத்தையும், வடமொழி நாடகவியலாளர் தனஞ்சயன் கூறிய நாடக இலக்கணங்களுடன் ஒப்பிட்டு விரித்து எழுத எண்ணியதாக விபுலானந்தர் கூறுகிறார். அவ்வாறு தொடர்ந்து அவரால் எழுத இயலவில்லை

இந்நூல் மதுரை நான்காம் தமிழ்ச்சங்க முத்திராசாலையில் அச்சிடப்பட்டு செந்தமிழ்ப் பிரசுர வெளியீடாக 1926-ல் வெளிவந்தது. இலங்கை பிரதேச அபிவிருத்தி அமைச்சால் 1986-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது.

உள்ளடக்கம்

சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் கூறப்பட்டுள்ளதை விபுலானந்தர் எடுத்துச் சொல்கிறார்."இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னூல்களும் இறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாயுள்ள தொன்னூல்களு மிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒரு சாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு விறுதி காணாமையின் அவையு மிறந்தன போலும்"

அவ்வாறு பெரியதோர் நாடக மரபும், நாடக இலக்கண மரபும் தமிழுக்கு இருந்தன. அவை அழிந்து பட்டன. அவற்றின் கூறுகளை வெவ்வேறு நாடகநூல் குறிப்புகளில் இருந்து எடுத்து அவற்றின் அடிப்படையில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை விபுலானந்தர் ஆராய்கிறார்.

விபுலானந்தர் ஷேக்ஸ்பியரை செகசிற்பியார் என மொழியாக்கம் செய்கிறார். ஷேக்ஸ்பியரின் Love's Labour's Lost நாடகத்தை காதல் கைம்மிக்க காவலன் சரிதை என்றும், King Lear நாடகத்தை ஆகுல ராஜன் சரிதை என்றும், Romeo and Juliet என்னும் ஆங்கில நாடகத்தை "இரமியன் சுசீலை சரிதை" என்றும், The Tempest நாடகத்தை பெரும் புயற் சரிதை என்றும், Macbeth நாடகத்தை மகபதி சரிதை என்றும், The Merchant of Venice நாடகத்தை வணிகதேய வர்த்தகன் சரிதை என்றும், As You Like It நாடகத்தை வேனிற் காதை என்றும், The Winter's Tale நாடகத்தை கூதிர்காதை என்றும்Twelfth Night நாடகத்தை கருதியது எய்திய காதலர் சரிதை என்றும் தமிழில் பெயர்களைச் சூட்டினார்.

மதங்க சூளாமணி 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • உறுப்பியல்
  • எடுத்துக்காட்டியல்.
  • ஒழிபியல்

உறுப்பியலில் சிலப்பதிகாரத்திற்குஅடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் இருந்து பெறப்பட்ட நாடகம் பற்றிய குறிப்புகள் சிலவற்றை ஆதாரமாகக்கொண்டு தமிழ் நாடக இலக்கணம் ஒன்றை உருவாக்க முயல்கிறார் விபுலானந்தர். நாடக உறுப்புக்கள், நாடகத்திற்குரிய கட்டுக்கோப்பு என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவை என்பன பற்றி இந்திய ரசக்கோட்பாட்டின் அடிப்படையில் விளக்குகிறார்

எடுத்துக்காட்டியலில் மேற்குறிப்பிட்ட இலக்கணநெறிகள் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் எவ்வண்ணம் உள்ளன என விளக்குகிறார். வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, உருத்திரம், நடுவு நிலையாகிய ஒன்பது மெய்ப்பாடுகளும் நாடகத்தில் எவ்வண்ணம் பயின்று வரவேண்டும் என்று விளக்குகிறார்

ஒழிபியல், தனஞ்சயன் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது. தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் இருந்து நாடகத்திற்குரிய இலக்கணங்கள் பேசப்படுகின்றன. அபிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல், அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன (மௌனகுரு)

இலக்கிய இடம்

"இசையில் தமிழ்த் தனித்துவம் கண்டது போல நாடகத்திலும் தமிழ்த் தனித்துவம் காணல். அதே நேரம் உலக சமஸ்கிருத நாடக வளர்ச்சிக்கியைய எம்மை வளர்த்தல். நாடகத்தை ஆராய்ச்சி ரீதியாகக் கற்றல், நாடக அறிவு பெறல். இந்த அறிவை மன்பதைக்குப் பயன் தரக்கூடிய விதத்தில் பிரயோகித்தல் என்பன நாடகக் கலை பற்றி அவர் கொண்டிருந்த நோக்குகள்’ என்று சி.மௌனகுரு மதங்கசூளாமணியை வகுத்துரைக்கிறார்.

மதங்கசூளாமணி ஒரு முழுமையான நூல் அல்ல. அதில் ஷேக்ஸ்பியரின் சில நாடகங்களுக்கு கதைச்சுருக்கம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. கிரேக்க , சம்ஸ்கிருத நாடகங்கள் விரிவாகக் கருத்தில்கொள்ளப்படவில்லை. இந்திய அரங்கக்கூத்துகளான கதகளி, யக்ஷகானம் போன்ற செவ்வியல் மரபுகளையோ ராம்லீலா, தெருக்கூத்து போன்ற நாட்டார் மரபுகளையோ விபுலானந்தர் அறிந்திருப்பது அந்நூலில் தெரியவில்லை. விபுலானந்தர் அந்நூலை எழுதும்போதே ஐரோப்பிய நாடகத்தில் நவீனத்துவத்தின் அலை தொடங்கி பெரும்படைப்புகள் வரத் தொடங்கிவிட்டிருந்தன. விபுலானந்தர் அவற்றை அறிந்திருக்கவில்லை.

விபுலானந்தர் மதங்கசூளாமணியை நவீன நோக்குடன் எழுத முயன்றாலும் மிகச்செயற்கையான பண்டிதநடையில், தனித்தமிழ் சொற்கள் மற்றும் பெயர்களின் தமிழாக்கத்துடன் எழுதியிருக்கிறார். ஆகவே ஆய்வாளர்களுக்குரிய ஒரு தரவுநூல் என்பதற்கு அப்பால் மதங்கசூளாமணி எந்தச் செல்வாக்கையும் தமிழ் நாடகவியலில் உருவாக்கவில்லை.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.