second review completed

பெருங்கதை

From Tamil Wiki

பெருங்கதை (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு) சமண மதம் சார்ந்த காப்பியம். குணாட்டியர் என்பவர் இயற்றிய வடமொழி நூலைத் தழுவி கொங்கு வேளிர் என்பவரால் தமிழில் இயற்றப்பட்டது.

பதிப்பு, வரலாறு

உ.வே.சாமிநாதையருக்கு கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையின் ஆரம்பமும் முடிவும் இல்லாத சுவடி கிடைத்தது. இந்த நூலின் முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11-வது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், உ.வே. சாமிநாதையர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதிய பிரதியை ராவ்பகதூர் கனகசபை பிள்ளை என்பவர் தனது சொற்பொழிவுக்காகக் கேட்டு வாங்கினார். பிள்ளை அவர்கள் இறக்கவே பெருங்கதை பிரதி திரும்பி வரவில்லை. மீண்டும் கிடைத்த சுவடிகளை ஆராய்ந்து பெருங்கதையை சுவாமிநாதையர் பிப்ரவரி 18, 1924 அன்று பதிப்பித்தார்.

ஆசிரியர்

கொங்கு நாட்டு விசய மங்கலத்தில் பிறந்த கொங்கு வேளிர் எழுதிய நூல், பெருங்கதை . இது வடமொழி நூலைத் தழுவியது. குணாட்டியர் என்பவர் எழுதிய வடமொழி நூல் 'பிருகத் கதை'. அந்த நூல் தமிழில் பெருங்கதையாக உருவாயிற்று. கொங்கு வேளிர் சமணர். எனவே இந்த நூலில் சமண சமயக் கருத்துகளைக் காணலாம்.

கொங்குவேளிர் கொங்கு நாட்டைச் சேர்ந்த,வேளாள வகுப்பில் பிறந்த சிற்றரசர்களுள் ஒருவர். இவர் பிறந்த ஊர் கொங்கு நாட்டில் உள்ள விசயமங்கலம் என்று தெரிய வருகின்றது. இவர் தமிழ்ப் புலவர் பலரை ஒன்று சேர்த்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்தக் கழகத்தில் புலவர் பலர் இடைவிடாமல் பழைய நூல்களை ஆராய்ச்சி செய்து வந்தனர். கொங்குவேளிரும் அவர்களோடு கலந்து தமிழ் ஆராய்ந்து விவாதித்து வந்தார்.

அடியார்க்கு நல்லார் என்னும் சிலப்பதிகார உரையாசிரியரின் கூற்றின்படி கொங்குவேளிர் காலத்தில் இடைச்சங்க நூல்கள் வழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. இவரும் இவரது காலத்துப் புலவர்களும் இடைச்சங்க நூல்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்ததும் தெரிய வருகின்றது.

நீதப் புகழ்உத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேள்அடிமை
மாதைக்கொடு உத்தரஞ் சொன்னது வும்கொங்கு மண்டலமே

                (கொங்கு மண்டல சதகம் - 99)

கொங்குவேளிர் நூலை எழுதிவரும்போது, இவருக்கு விரைவில் மரணம் நேரும் என்று சோதிடர் கூறினர். இதனை அறிந்த கொங்குவேளிர் எப்படியாவது மரணத்தைத் தள்ளிப்போட்டு நூலை முடிக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக மூன்று பிறவிகள் எடுக்கத் திட்டமிட்டார். இதன்படி இல்லறம் ஒரு பிறவி ஆயிற்று. இல்லறத்திலிருந்து நீங்கி, வானப்பிரஸ்தம் (மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்தல்) மேற்கொண்டார். இதிலிருந்தும் நீங்கித் துறவறம் மேற்கொண்டார். இது மூன்றாம் பிறவி ஆனது. துறவறம் பூண்டு பெருங்கதையை நிறைவு செய்தார் என்று உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

காலம்

கங்க மன்னர்கள் சமணத்தை ஆதரித்தவர்கள். துர்விநீதன் எனும் கங்க மன்னன் பொ.யு. 550 முதல் 600 வரை ஆண்டான். அவன் ‘பிருகத் கதை' யை வடமொழியில் மொழிபெயர்த்தான் என்று கருதப்படுகிறது. கொங்குவேளிர் எழுதிய, ‘பெருங்கதை' துர்விநீதனின் மொழி பெயர்ப்பைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருக்கலாம் என்று ஈ.எஸ்.வரதராச அய்யர் குறிப்பிடுகிறார்.

நூல் அமைப்பு

பெருங்கதைக்கு கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு இரண்டு பெயர்களும் உள்ளன. பெருங்கதை

  • உஞ்சைக் காண்டம்
  • இலாவண காண்டம்
  • மகத காண்டம்
  • வத்தவ காண்டம்
  • நரவாண காண்டம்

என்ற ஐந்து பகுதிகளைக் கொண்டது. ஆறாம் காண்டமான துறவுக் காண்டம் முழுதும் அழிந்துவிட்டது. பெருங்கதை அகவற்பாவால் ஆன தொடர்நிலைச் செய்யுள்களால் ஆனது. முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11-வது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த ஐயர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார்.

குருகுலத்தவனும், கௌசாம்பி நகரத்து அரசனுமாகிய சதானிகனின் மகன் உதயணன். உதயணனின் நண்பன் யூகி. உதயணன் வாசவதத்தை, பதுமாவதி, மானனீகை ஆகிய பெண்களை மணந்து இறுதியில் துறவு பூணுவதாகக் கதை முடிகிறது.

தெய்வம் பேணல், ஊழ்வினையின் வன்மை, கல்வியின் பெருமை, நட்பின் திறம், காலம் இடம் ஆகியவை அறிந்து செயல்படுதல், பெண் கல்விச் சிறப்பு, செய்நன்றி அறிதல், ஆசிரியர் மாணவரது இலக்கணங்கள், மந்திரிகளின் இயல்பு, துறந்தோர் பெருமை முதலிய பல குறிப்புகள் இந்நூலில் உள்ளன. பெருங்கதைப் பாடல்கள் நயமிகுந்தவை. இந்நூலின் கதை திருமங்கை ஆழ்வாராலும், சீத்தலைச் சாத்தனாராலும் எடுத்தாளப்பட்டு உள்ளது. சிலப்பதிகார உரைப் பாயிரத்துள் அடியார்க்கு நல்லார் அக்கதையைக் குறிப்பிடுகிறார்.

கதைச்சுருக்கம்

உஞ்சைக் காண்டம்

வத்தவ நாடு அரசன் சதானிகன் சேதி நாட்டு அரசன் சேடகனின் மகள் மிருகாபதியை மணந்து கொண்டான். கருவுற்றிருந்த மிருகாபதியை ஊன் என எண்ணி சிம்புள் என்னும் பறவை தூக்கி சென்றது. ஊன் இல்லையென அறிந்து விபுலமலையில் விட்டுவிட்டது. அவளுக்கு ஆண்மகவு பிறந்தது. மிருகாவதியும் மகனும் பிரமசுந்தர முனிவரால் பாதுகாக்கப்பட்டனர்.

உதயணன் அழகிலும் அறிவிலும் கல்வியிலும், கலையிலும், போர்த்திறத்திலும் சிறந்தவன். முனிவரிடம் சினம் கொண்ட யானையை அடக்கும் மந்திரத்தை கற்று, இந்திரன் தந்த யாழையும் பெற்றான். முனிவரின் மகன் யூகி உதயணனுக்கு தோழனும் மந்திரியுமாக இருந்தான் உதயணன் தன் மாமனது அரசையும் தந்தையின் அரசையும் பகைவரிடம் இருந்து கைப்பற்றி ஆண்டு வந்தான். உதயணனுக்கு ஒரு தெய்வயானை வசமானது. ஒருநாள் யானை அவனைவிட்டு நீங்கவே உதயணன் அதைதேடி கட்டுக்குச் செல்லும்போது உஜ்ஜயினி மன்னன் பிரச்சேதனனால் பிடிக்கப்பட்டு சிறையில் இருக்கிறான். யூகியின் தந்திரத்தால் உஜ்ஜயினி மன்னனுக்கு நண்பனாகி, அவன் மகள் வாசவதத்தையையிடம் காதல் கொள்கிறான்

இலாவாண காண்டம்

உதயணன் வாசவதத்தையுடன் சயந்திக்கு வந்து அவளை மணம் செய்துகொள்கிறான். அவளைவிட்டுப் பிரிய மனமின்றி ஆட்சியில் நாட்டமின்றி இருந்ததால் யூகி வாசவதத்தை இறந்தது போல சூழ்ச்சி செய்து அவர்களைப் பிரிக்கிறான்.

மகத காண்டம்

உதயணன் மகத நாட்டிற்குச் சென்று இராசகிரியம் என்ற நகரத்தின் மறைந்திருந்தான், மகத நாட்டு மன்னனின் தங்கை பதுமாபதியை கண்டு காதல் கொண்டு, மகத நாட்டு மன்னன் தருசகனோடு நட்பு கொண்டு பதுமாபதியை மணந்தான். மகதநாட்டுப் படையுடன் உதயணன் தனது நாட்டிற்குச் சென்று, ஆருணி மன்னனோடு போர் புரிந்து, ஆருணியைக் கொன்று வெற்றி பெற்று தன் தலைநகரமாகிய கோசம்பியிற் புகுந்தான்

வத்தவ காண்டம்

உதயணன் கோசம்பிக்குச் சென்று ஆட்சி செய்யவும், வாசவதத்தையும், யூகியும் வந்து அவனுடன் இணைகின்றனர். உதயணன் மானனீகை, விரிசிகை என இரு பெண்களை மணக்கிறான்.

நரவாண காண்டம்

வாசவதத்தைக்கு நரவாணதத்தன் என்ற மகன் பிறக்கிறான். பதுமாவதிக்கு கோமுகன் என்ற மகன் பிறக்கிறான். நரவாணத்ததன் மதனமஞ்சிகையை மணக்கிறான். மதனமஞ்சிகையை மானசவேகன் என்பவன் கவர்ந்து செல்கிறான். நரவாணதத்தன் விலாசனியை மணக்கிறான். மானசவேகன் மதனமஞ்சிகையை விடுவிக்கிறான். இறுதியில் உதயணன், நரவாணதத்தன் இருவரும் தேவியரோடு துறவு மேற்கொள்கின்றனர். கோமுகன் அரசனாகிறான்.

நூலின் மூலம் அறியவரும் செய்திகள்

மனித வாழ்வின் குறிக்கோள்களாக பெருங்கதை கூறுபவை

  • தெய்வ வழிபாடு
  • பெரியோரை வணங்குதல்
  • ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.
  • கல்வி கற்றவனைப் பகைவனும் மதிப்பான்.
  • எந்தக் காலத்திலும் கல்வியைக் கைவிடக் கூடாது.
  • நல்ல துணைவர்களைப் பெற்றவன் கவலை இன்றி வாழ்வான்.
  • ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பவன் அதற்குரிய துணையையும் கருவியையும் முதலில் பெற வேண்டும்.
  • நன்றி பாராட்ட வேண்டும்.
  • காலத்தைக் கண்ணாக மதிக்க வேண்டும்.
  • யாரிடத்தும் பகை கொள்ளக் கூடாது; யாரையும் இகழக் கூடாது.
  • தருமத்தை உயிராக எண்ணுதல் வேண்டும்.

அரண்மனை அமைப்பு, ஆட்சி முறை, அரசன் பண்பு , படை, ஆயுதங்கள், எந்திரப் பொறிகள், ஊர்திகள் , கோட்டைகள் கைத்தொழில்கள்,கோயில், சாதிமுறைகள், சிற்பம், இசை, கட்டடக்கலை, நாணயங்கள், பறவைகள், விலங்கினங்கள் - மகளிர்க்குரிய விளையாட்டுகள், கலைகள், திருமணம், சடங்கு முறைகள், விழாக்கள் முதலிய பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் இக்காப்பியத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

சிறப்புகள்

வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் பெருங்கதை. இது பலவகைக் கருவிகள், பழக்க வழக்கங்கள், கட்டட அமைப்புகள், விளையாட்டுகள் பற்றிய சமுதாயச் செய்திகளை நுட்பமாகப் பேசும் ஒரு காப்பியம்.

பெருங்கதை பற்றிப் பழைய உரையாசிரியர்கள் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் “கபாடபுரத்தில் இருந்த இடைச் சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள்; இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே உதயணன் கதை” என்று குறிப்பிடுகிறார் (உதயணன் கதை - பெருங்கதை). தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் தொன்மை முதலிய இலக்கணக் கூறுகளை விளக்கும்போது 'இயைபு' என்ற இலக்கணத்தை விளக்கி, அதற்குச் சான்றுகளாகச்  சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலையையும், கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையையும் குறிப்பிட்டுள்ளார்.

நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் உரைகளிலும் பெருங்கதை மேற்கோளாக இடம் பெற்றுள்ளது

உதயண குமார காவியம்

பெருங்கதையில் இடம்பெறும் செய்திகளின் சுருக்கமாக உதயண குமார காவியம் இயற்றப்பட்டது. இதனை இயற்றியவரும் கொங்குவேளிரெ எனவும் கந்தியார் என்ற சமணப் புலவர் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பாடல் நடை

வாசவதத்தையின் அழகு

யாற்றுஅறல் அன்ன கூந்தல் யாற்றுச்
சுழிஎனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்
வில்லெனக் கிடந்த புருவம் வில்லின்
அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்
பிறையெனச் சுடரும் சிறுநுதல் பிறையின்
நிறையெனத் தோன்றும் கறையில் வாள்முகம்
அரவென நுடங்கு மருங்குல் அரவின்
பையெனக் கிடந்த ஐதேந்து அல்குல்
கிளியென மிழற்றும் கிளவி கிளியின்
ஒளிபெறு வாயின் அன்ன ஒள்ளுகிர் ....
வேயெனத் திரண்ட மென்றோள் வேயின்
விளங்கு முத்தன்ன துளங்குஒளி முறுவல்
காந்தள் முகிழ்அன்ன மென்விரல் காந்தள்
பூந்துடுப்பு அன்ன புனைவளை முன்கை
(பெரு. வத்தவ காண்டம், 11: அடிகள் 64 - 79)

காஞ்சனமாலையின் துயரம்

நாவலந் தண்பொழில் நண்ணார் ஓட்டிய
காவலன் மகளே கனங்குழை மடவோய்
மண்விளக் காகி வரத்தின் வந்தோய்...
பொன்னே திருவே அன்னே அரிவாய்
நங்காய் நல்லாய் கொங்கார் கோதாய்
வீணைக் கிழத்தீ வித்தக உருவீ...
புதையழல் அகவயின் புக்கனையோ...
               இலாவாண காண்டம், 18 : அடிகள் 76 - 85)

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.