first review completed

துரை. மாலிறையன்

From Tamil Wiki
கவிஞர், எழுத்தாளர் துரை. மாலிறையன்

துரை. மாலிறையன் (துரை. நாராயணசாமி) (பிறப்பு: ஆகஸ்டு 29, 1942) கவிஞர், எழுத்தாளர். தமிழாசிரியராகப் பணியாற்றினார். காப்பிய நூல்கள், சிறார் நூல்கள் என 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இந்திய அரசின் நல்லாசிரியர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

நாராயணசாமி என்னும் இயற்பெயர் கொண்ட துரை. மாலிறையன், ஆகஸ்டு 29, 1942 அன்று, புதுச்சேரியில், துரைசாமி -கோவிந்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். புதுச்சேரியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1965-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

துரை. மாலிறையன், புதுச்சேரியிலுள்ள வீரமாமுனிவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். புதுச்சேரியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி, 2002-ல் பணி ஓய்வு பெற்றார். மனைவி: சூரிய விசயகுமாரி, பள்ளி ஆசிரியை (அமரர்).

அன்னை தெரேசா காவியம் நூல் வெளியீடு

இலக்கிய வாழ்க்கை

துரை. மாலிறையனின் ‘காதற்கனிகள்’ என்னும் காப்பிய நூல் 1986-ல் வெளியானது. இதுவே அவரது முதல் நூல். தொடர்ந்து அம்பேத்கர், காமராஜர், அன்னை தெரேசா, பாரதிதாசன் ஆகியோர் மீது காப்பிய நூல்களை இயற்றினார். சமயம் சார்ந்த வகையில் அருள் நிறை மரியம்மை காவியம், இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம் போன்ற நூல்களை இயற்றினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார்.  துரை. மாலிறையன் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

அமைப்புப் பணிகள்

  • புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்
  • கனடா உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் புதுவைக் கிளைச் செயலாளர்.
புதுவை அரசின் தமிழ்மாமணி விருது
இந்திய அரசின் நல்லாசிரியர் விருது
தமிழக அரசின் பாராட்டு

விருதுகள்

  • புதுவை அரசின் தமிழ்மாமணி விருது.
  • உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய தமிழ்மாமணி பட்டம்.
  • புதுவை அரசின் சிறந்த தமிழாசிரியர் விருது.
  • இந்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது.
  • அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது.
  • புதுவை கடலூர் கத்தோலிக்க மறை மாவட்டம் வழங்கிய ஆன்மிகக் கவிஞர் பட்டம்.
  • திருச்சி கலைக்காவிரி கல்லூரி வழங்கிய கலைக்காவிரி விருது.
  • நெல்லை மாவட்டத் திருவருட் பேரவை வழங்கிய சமய நல்லிணக்கச் சான்றோன் பட்டம்.
  • திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் வழங்கிய வீரமாமுனிவர் விருது.
  • குழந்தைகள் விரும்பும் நேரு காவியம் நூல், 1988-ல், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறார் நூலுக்கான பிரிவில் பரிசு பெற்றது.
  • பாவேந்தர் காவியம்  நூலுக்கு, 1989-ல், பாவேந்தர் நூற்றாண்டு விழாவையிட்டி புதுவையில் நடந்த விழாவில், பாவேந்தர் புகழ்ப் பரிசு புதுவை அரசால் வழங்கபட்டது.
  • தீண்டாமை ஒழித்த அம்பேத்கர் காவியம் நுல், 1991-ல், புதுவை அரசிடம் இருந்து சிறப்புப் பரிசு பெற்றது.
  • அருள்ஒளி அன்னை தெரேசா காவியம், 1994-ல், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் காவிய இலக்கியத்திற்கான பரிசைப் பெற்றது.
  • அருள் நிறை மரியம்மை காவியம், 1996-ல், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் கவிதைக்கான பிரிவில், முதல் பரிசு பெற்றது.
  • இறைபேரொளி நபிகள் நாயகம் காவியம், 2000 ஆம் ஆண்டில், புதுவை அரசு நடத்திய விழாவில் கம்பன் புகழ்ப் பரிசு பெற்றது.
  • கல்வி வள்ளல் காமராசர் காவியம், 2003-ல், புதுவை அரசு ஜவகர்லால் நேரு பிறந்த தின விழாவினையொட்டி நடத்திய விழாவில் பரிசளித்துச் சிறப்பிக்கப்பட்டது.

மதிப்பீடு

துரை. மாலிறையன் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மரபுக் கவிதையில் ஆழ்ந்த பயிற்சி பெற்றிருந்ததால் எளிய தமிழ் நடையில் பல காப்பிய நூல்களை இயற்றினார். சிறார் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு, சிறார்களைக் கவரும் நடையில் பல நூல்களைப் படைத்தார். மாலிறையனின் கவிதைகள் மரபுக்கவிதைக்குரிய பொதுவான கருக்களை, மரபில் வழங்கிவரும் மொழிநடையில் கூறுபவை. அறவுரை, மொழிப்பற்று ஆகியவற்றை முன்வைப்பவை. தமிழ்பயிலும் பொதுவாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உரியவை.

துரை. மாலிறையன் நூல்கள்

நூல்கள்

காப்பிய நூல்கள்
  • காதற்கனிகள்
  • குழந்தைகள் விரும்பும் நேரு காவியம்
  • பாவேந்தர் காப்பியம்
  • கல்வி வள்ளல் காமராசர் காவியம்
  • தீண்டாமையை ஒழித்த அம்பேத்கார் காவியம்
  • அருள்ஒளி அன்னை தெரேசா காவியம்
  • அருள்நிறை மரியம்மை காவியம்
  • இறைப்பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்
சிறார் நூல்கள்
  • இளங் குருத்துக்கள்
  • பசுமையின் கண்ணீர்
  • தேன்பூக்கள்
  • முத்தமிழ்ச் சோலை
  • மொழிப்பயிற்சிப் பாடல்கள்
  • திருக்குறள் பூங்கா
  • பாடி விளையாடு பாப்பா
  • அறிவூட்டும் கதைப்பாடல்கள்
  • ஒலிப்பயிற்சிப் பாடல்கள்
  • கணக்குப் பயிற்சிப் பாடல்கள்
  • அறிவொளியும் அறியாமை இருளும்
  • சிரிக்கும் இளம்பிறை
  • அறிவியல் விடுகதைகள்
  • அறிவியல் வானிலே
  • கதைகளில் அறிவியல் புதிர்கள்
பொது நூல்கள்
  • தமிழ் எழுச்சிக் குறள்
  • தமிழ் எழுச்சி முழக்கம்
  • தமிழ் எழுச்சி நூறு
  • தமிழ் எழுச்சி விருத்தம்
  • திருக்குறள் விளக்கவுரை
  • தமிழ் எழுச்சி ஆத்திசூடி (குறளும் பொருளும்)
  • இனிப்பும் கசப்பும் (தமிழ் உணர்வுப்பாடல்கள்)

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.