under review

இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்

From Tamil Wiki

இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம் (2000), நபிகள் நாயகத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பிய நூல். இந்நூல் ஐந்து காண்டங்களைக் கொண்டது. 35 படலங்களும் 2649 பாடல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இதனை இயற்றியவர் கவிஞர் துரை. மாலிறையன். நபிகள் நாயகத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு தமிழில் வெளிவரும் ஒன்பதாவது காப்பிய நூல் இது.

பதிப்பு, வெளியீடு

இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம் நூலை, 2000-ம் ஆண்டில், புதுச்சேரியில் உள்ள நாயகம் பதிப்பகம் வெளியிட்டது. இதன் ஆசிரியர் துரை. மாலிறையன்.

ஆசிரியர் குறிப்பு

இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியத்தை இயற்றியவர் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் துரை. மாலிறையன். இவர் ஆகஸ்டு 29, 1942-ல், புதுச்சேரியில், துரைசாமி-கோவிந்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இயற்பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றால் பிற்காலத்தில் தன் பெயரை மாலிறையன் என்று மாற்றிக் கொண்டார். தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற இவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

துரை. மாலிறையன் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் அருள்நிறை மரியம்மை காவியம், அருள் ஒளி அன்னை தெரேசா காவியம், 'அம்பேத்கார் காப்பியம்' போன்ற காப்பிய நூல்களும் அடக்கம்.

நூல் அமைப்பு

இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம் புவிபுகல் காண்டம், ஒளிபெறல் காண்டம், புலம் பெயர் காண்டம், களம் புகல் காண்டம், வான் புகல் காண்டம் என ஐந்து காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 35 படலங்களும் 2649 பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

புவிபுகல் காண்டம்

புவிபுகல் காண்டத்தில் ஏழு படலங்கள் அமைந்துள்ளன. அவை,

  • பெருமானார் பிறப்புப் படலம்
  • வளர்ப்புப் படலம்
  • முத்திரை இட்ட படலம்
  • வணிகம் புக்க படலம்
  • புதுமைகள் தொடங்கிய படலம்
  • கதீசா பிராட்டியார் கனவு கண்ட படலம்
  • திருமணம் புரிந்த படலம்

இப்படலத்தில் மொத்தம் 558 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஒளிபெறல் காண்டம்

ஒளிபெறல் காண்டத்தில், எட்டு படலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

  • நபிப்பட்டம் பெற்ற படலம்
  • தீன்நிலை கண்ட படலம்
  • உமறு நன்னெறி உணர்ந்த படலம்
  • கபீபு மன்னர் பேசிய படலம்
  • கபீபு மன்னர் உண்மை உணர்ந்த படலம்
  • கபீபு மன்னர் பரிசு அளித்த படலம்
  • அண்ணல் அரும்புதுமை நிகழ்த்திய படலம்
  • கதீசா பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்

இப்படலத்தில் மொத்தம் 610 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

புலம் பெயர் காண்டம்

புலம் பெயர் காண்டத்தில், ஆறு படலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

  • மதீனா மக்கள் மனம்மாறிய படலம்
  • மக்கமா நகர் நீங்கு படலம்
  • மதீனா நகர் புக்க படலம்
  • கபுகாபு கண்டு கண்குளிர்ந்த படலம்
  • இறையில்லம் நோக்கித் தொழுகை நடத்திய படலம்
  • பாத்திமா திருமணப் படலம்

இப்படலத்தில் மொத்தம் 380 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

களம்புகல் காண்டம்

களம்புகல் காண்டத்தில், ஏழு படலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

  • பதுறுப் போர்ப் படலம்
  • ஆயிசா பிராட்டியார் திருமணப் படலம்
  • உகுதுப் போர்ப் படலம்
  • உம்மு சல்மா திருமணப் படலம்
  • இரு கூறாய்த் தொழுத படலம்
  • முறைசீக்குப் போர்ப் படலம்
  • அகழ்ப் போர்ப் படலம்

. இப்படலத்தில் மொத்தம் 474 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வான் புகல் காண்டம்

வான் புகல் காண்டகாண்டத்தில், ஏழு படலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

  • முதல் புனிதப் பயணப் படலம்
  • உடன்படிக்கை எழுதிய படலம்
  • அபா சுபியான் தூது சென்ற படலம்
  • இறுதிப் போர் புரிந்த படலம்
  • இறைவன் பேரொளி அருள் பரவிய படலம்
  • வானகம் மீண்ட படலம்
  • இறைபுகழ் மணிமாலைப் படலம்

இப்படலத்தில் மொத்தம் 627 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடல்கள்

நபியின் பிறப்பு

அறத்தொடு நண்பும் அகம்தொடும் அன்பும் அரும்புவி மீதினில் பாய
மறத்தொடு வன்பும் மலிந்திடு துன்பும் மனைதொறும் நீங்கியே வீயத்
திறத்தொடு வாழ்வு திருவொடும் துலங்கத் தீமைகள் யாவையும் மாய
வரத்தொடு வந்த வானகத் தூதர் முகம்மது நபிபிறந் தனரே!


வாய்மையும் நெஞ்சத் தூய்மையும் மலர வரும் ஒளிக் கதிரினைப் போலத்
தாய்மையின் பரிவும் தலைமையின் தகவும் தாங்கிய புவிஒளி பெறவே
ஆய்மயில் ஆன ஆமினா வயிற்றில் ஆண்டவன் ஆணையின் படியே
தூயவர் தோன்றல் தூதராய் மண்ணில் தோன்றினர் முகம்மது நபியே!

நபி, மக்கா நகரின் பஞ்சம் நீக்கியது

பொற்பாத முகம்மதுவை அழைத்துப் போய் ஓர்
புகழ்மிக்க மக்காவின் அருகில் உள்ள
கற்பாறை மீதமர்ந்து கைகள் நீட்டிக்
கடவுள்தன் புகழொன்றே நினைவில் தோன்ற
நற்பாதை காட்டுகெனக் கூறி மக்கா
நலம்பெறவே வேண்டுமெனத் தொழுகை செய்தார்
சொற்பட்ட உடனேவான் முகிலும் சூழ்ந்து
தொடர்மழையால் மக்காஊர் பொலிந்தது அந்நாள்

ஒளி தோன்றுதல்

வாய்மையொடும் அன்புநலம் மிகுந்த வர்கள்
வளர்க்கின்ற குறைசிஎனும் குலத்துச் செம்மல்
தூய்மையொடும் திகழ்கின்ற முப்பத் தெட்டுத்
தொடராண்டு நிறைவுற்ற பருவத் தாராய்த்

தாய்மனத்துக் கடவுளவன் தகைமை எண்ணித்
தம்மனத்தை நேர்நிறுத்தி வாழும் நாளில்
சேய்மைளி ஒன்றவரை நோக்கி நோக்கிச்
செல்வதுமாய் மறைவதுமாய்ப் பொலியக் கண்டார்

இறை வாழ்த்து

ஆவியினை ஆங்காங்கே அரிதாக
அடைத்துவைக்கும் பொருள்வரைந்த
ஓவியனை ஒப்பில்லா ஒளியவனை
இனியவனை நபிப்பெம்மானை
நோய்வினைகள் இல்லாமல் உலகினையே
புரந்தளிக்க அனுப்பி யோனை
நாவினையால் நெஞ்சதனால் நலம்கூறி
நாம்வணங்கி வாழ்த்துவோமே!

மதிப்பீடு

நபிகளின் பிறப்பு முதலான வாழ்க்கை வரலாற்றை எளிய தமிழில் சொல்லும் காப்பியம், இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம். சீறாப்புராணத்திற்குப் பிறகு, நபிகளின் வாழ்க்கையைக் கூறும் விரிவான காப்பியம் இது. மரபு நெறி மாறாமல் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்ட இஸ்லாமியக் காப்ப்பியம் என்ற வகையிலும், இருபத்தோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதல் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் என்ற வகையிலும் தமிழின் முக்கியமானதொரு காப்பிய நூலாக, இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page