under review

திருவள்ளுவர்

From Tamil Wiki
Revision as of 14:44, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
திருவள்ளுவர்

திருவள்ளுவர், பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர். பொ.மு. 31- ஐ திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

வாழ்க்கை குறிப்பு

திருவள்ளுவரைப் பற்றிய நம்பகப்பூர்வமான தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன. இவரது இயற்பெயரையோ அவர் இயற்றிய நூலான திருக்குறளின் உண்மைப் பெயரையோ இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. திருக்குறள் கூட அதன் ஆசிரியரின் பெயரையோ அவரைப் பற்றிய விவரங்களையோ எங்கும் குறிப்பிடுவதில்லை. திருக்குறளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய நூலான திருவள்ளுவமாலை நூலில்தான் முதன்முறையாக திருவள்ளுவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில் கூட வள்ளுவரின் பிறப்பு, குடும்பம், பின்புலம் போன்ற எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. வள்ளுவரின் வாழ்வைப் பற்றிக் கூறப்படும் செய்திகள் யாவையும் நிரூபிக்கும்படி பண்டைய நூல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் அச்சகங்கள் தோன்றிய பின்னர் திருவள்ளுவரைப் பற்றிய பல செவிவழிச் செய்திகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கதைகளாக அச்சிடப்பட்டன.

திருவள்ளுவர் சிலை

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தோன்றிய நூல்களில் திருவள்ளுவரைப் பற்றிப் பழங்கால ஏடுகளிலிருந்தும் மரபுவழியும் கிடைக்கப்பெற்றதும் திருவள்ளுவரது நூலிலிருந்தே அறியப்பட்டதுமான பலதரப்பட்ட தகவல்கள் காணப்படுகின்றன. திருவள்ளுவர் குறித்து மரபுவழி வந்த தகவல்கள் அவர் பறையர் குலத்து நெசவாளர் என்றும், அவர் உழவினைப் போற்றியதால் விவசாயத் தொழில் புரிந்த குலத்தவர் என்றும், அவர் ஒரு பறையர்குலத் தாய்க்கும் அந்தணர்குலத் தந்தைக்கும் பிறந்தவர் என்றும் பலவாறு உரைக்கின்றன. மு. இராகவய்யங்காரது கருத்துப்படி "வள்ளுவர்" என்ற பெயர் "வல்லபா" என்ற ஓர் அரச அலுவலரது பதவியைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். எஸ். வையாபுரிப்பிள்ளை தனது கருத்தாக "வள்ளுவன்" என்பது அரசவையில் பறை முழங்குவோரைக் குறிக்கும் சொல் என்றும் அதனால் அவர் அரசனின் படையில் முரசு கொட்டுபவராகப் பணிபுரிந்தவர் என்றும் உரைக்கிறார். மரபுவழி வந்த தகவல்கள் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணாகவும் சில நம்பகத் தன்மையற்றவையாகவும் விளங்குகின்றன. திருவள்ளுவரது பிறப்பு பற்றிய பலதரப்பட்ட செய்திகளுள் ஒன்றில் திருவள்ளுவர் ஒரு மலைக்குப் பயணமாகச் சென்று அகத்தியரையும் இன்னபிற முனிவர்களையும் சந்தித்ததாகவும் கூறுகின்றன. அவர்களைச் சந்தித்துத் திரும்பி வரும் வழியில் திருவள்ளுவர் ஒரு மரத்தடியில் அமர அவரது நிழலானது அவர் மீது ஒரு நாள் முழுவதும் அசையாமல் நிலைகொண்டது என்றும் அங்கு அவர் ஓர் அரக்கனைக் கொன்றார் என்றும் பலதரப்பட்ட புராணத் தகவல்களும் காணப்படுகின்றன. இவற்றிற்கு வரலாற்றுப் பதிவுகள் கிடையாது என்றும் இவையாவும் இந்திய மற்றும் உலகப் புராண இலக்கியங்களில் காணப்படுவதைப் போன்ற புனையப்பட்ட கதைகளாகும் என்றும் அறிஞர்கள் உரைக்கின்றனர். திருவள்ளுவரைப் பற்றிய குல வரலாறுகளும் நம்பகத்தன்மையற்றவை என்றே அவர்களால் கருதப்படுகிறது. திருவள்ளுவருக்கு வாசுகி என்ற மனைவியும், ஏலேலசிங்கன் என்ற பெயரில் ஒருவர் உற்ற நண்பனாகவும் சீடனாகவும் இருந்தார் என்றும் கருதப்படுகிறது. திருவள்ளுவர் தனது திருக்குறள் நூலினைப் பொதுப்படையாகவும் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமலும் இயற்றியுள்ளதால், அதனை பல விதங்களில் பொருள்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் விளைவாக திருக்குறளானது பண்டைய இந்திய சமயங்களால் தங்கள் வழிநூலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. திருவள்ளுவரைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளைப் போல் அவரது சமயத்தைப் பற்றியும் பலதரப்பட்ட செய்திகள் வரலாற்றுச் சான்றுகளின்றி விரவிக்கிடக்கின்றன. ஆங்கிலேயப் படையெடுப்புக்குப் பின்னர் கிறிஸ்துவ சமயமும் திருக்குறளை தனது வழித் தோன்றலாகக் கருத முயன்றதைக் காணமுடிகிறது. உதாரணமாக, 19- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்துவ போதகரான ஜி. யு. போப் தனது நூலில் வள்ளுவர் 9- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் அலெக்ஸாண்டிரியவைச் சேர்ந்த கிறிஸ்துவ போதகரான பான்டேனசுடன் தொடர்பிலிருந்தவர் என்றும் அதன் மூலம் அலெக்ஸாண்டிரிய கிறிஸ்துவ அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இயேசுநாதரின் மலைப் பிரசங்கத்தின் சாரமாகத் தனது "அழகிய திருக்குறளை" படைத்தாரென்றும் தனது திருக்குறள மொழிபெயர்ப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜி.யு. போப்பின் இக்கூற்றுகள் யாவும் தவறானவை, ஆதாரமற்றவை என்று அறிஞர்களால் விலக்கப்பட்டன. வள்ளுவர் கூறும் அறங்கள் யாவும் கிறிஸ்துவ அறநெறிகளல்ல என்று கமில் வாச்லவ் சுவெலபில் (Kamil Vaclav Zvelebil) நிறுவுகிறார். "கால மதிப்பீட்டில் குறளானது ஏனைய இந்திய இலக்கியங்களைப் போலவே சரியாக வரையறுக்கப்பட முடியாததாகவே உள்ளது" என்றும், குறிப்பாக "சிறந்த கருத்துகளைக் கொண்ட இலக்கியங்கள் யாவும் கிறிஸ்துவ மத போதகர்களால் அவற்றின் காலமதிப்பீட்டினை கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிந்தையதாக்கும் நோக்குடன் பலவாறு சிதைக்கப்பட்டுள்ளது" என்றும் ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer) தனது நூலில் குறிப்பிடுகிறார்.

சமயம்

வள்ளுவர் சமண சமயத்தையோ இந்து சமயத்தையோ சார்ந்தவராக இருந்திருப்பார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விரு சமயங்களின் பிரதான தர்மமான அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற அறத்தை வள்ளுவர் தனது நூலின் மைய அறமாகக் கொண்டு மற்ற அறங்களைக் கையாண்டிருப்பதிலிருந்து இது புலனாகிறது. வள்ளுவர் இந்துவா சமணரா என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று தனது 1819-ஆம் ஆண்டு குறள் மொழிபெயர்ப்பு நூலில் எல்லீசன் (பிரான்ஸிஸ் வயிட் எல்லீஸ் Francis Whyte Ellis (1777 - 1819) குறிப்பிடுகிறார். வள்ளுவரது தார்மீக சைவம் மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களைப் பற்றிய அதிகாரங்கள் சமண மதச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன என்று கூறும் கமில் வாச்லவ் சுவெலபில், கடவுளுக்கு திருவள்ளுவர் தரும் அடைமொழிகளும் அருள்சார்ந்த அறங்களுக்கு அவர் தரும் முக்கியத்துவமும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன என்று விளக்குகிறார். திருவள்ளுவர் தமக்கு முந்தைய தமிழ், வடமொழி ஆகிய இரு இலக்கிய அறிவினையும் சாலப்பெற்ற "சிறந்தவற்றை மட்டும் தேரும் சிந்தையுள்ள ஒரு கற்றறிந்த சமண அறிஞராகவே" இருந்திருக்கக்கூடும் என்பது கமில் வாச்லவ் சுவெலபில்லின் கருத்து. ஜைன மரபானது திருக்குறளைத் தமிழ் நிலத்தில் ஏலாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பொ.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பொ.யு. முதல் நூற்றாண்டின் முந்தைய பாதியிலும் வாழ்ந்த தென் பாடலிப்புத்திர திராவிட சங்கத்தின் தலைவரும் ஜைன ஆச்சாரியருமான குந்தகுந்த ஆச்சாரியருடன் தொடர்புபடுத்துகிறது என்று ஏ. சக்ரவர்த்தி கூறுகிறார். எனினும், பண்டைய திகம்பர சமண நூல்களிலோ சுவேதம்பர சமண நூல்களிலோ திருவள்ளுவரைப் பற்றியோ திருக்குறளைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பினையும் காணமுடிவதில்லை. இந்து சமய பக்தி இலக்கியங்களில் சுமார் 8- ஆம் நூற்றாண்டு வாக்கில் வள்ளுவரும் திருக்குறளும் குறிப்பிடப்பட்டிருக்கையில் சமண நூல்களில் வள்ளுவர் முதன்முதலாகக் குறிப்பிடப்படுவது 16-ஆம் நூற்றாண்டில்தான். வள்ளுவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே சம அளவில் இருந்து வருகிறது. திருக்குறளில் காணப்படும் போதனைகள் பலவும் இந்து தர்ம நூல்களில் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுகின்றனர். அறம், பொருள், இன்பம் என்ற வீடு பேற்றினை நோக்கிய திருக்குறளின் பகுப்புமுறைகள் முறையே இந்து தர்ம புருஷார்த்த பகுப்பு முறையின் முதல் மூன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதும், அகிம்சையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குறள் பொருட்பாலில் இந்து தர்ம நூல்களில் ஒன்றான அர்த்த சாஸ்திரத்தினை ஒத்ததாய் அரசியல் மற்றும் போர்முறைகளைக் கூறியிருப்பதும் அவர்கள் காட்டும் சான்றுகளில் சில. தனிமனிதனாகத் தன் அன்றாட வாழ்வில் கொல்லாமையைக் கடைப்பிடித்த பின்னரே ஒருவனுக்குப் படைவீரனாகப் போரில் கொல்லும் விதிவிலக்கு அளிக்கப்படுவதும் மன்னனாக ஒருவன் அரியணையில் அமர்ந்த பின்னரே குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் உரிமை அவனுக்கு வழங்கப்படுவதும் இந்து தர்ம முறையினை வலியுறுத்துகிறது. திருவள்ளுவர் 610 மற்றும் 1103- குறட்பாக்களில் திருமாலைக் குறிப்பிடுவதும் குறட்பாக்கள் 167, 408, 519, 565, 568, 616, மற்றும் 617-களில் இலட்சுமியைக் குறிப்பிடுவதும் வைணவ தத்துவங்களைக் குறிக்கின்றன. இந்து சமயத்திலிருந்து தோன்றிய சுமார் 24 வெவ்வேறு தொடர்களை திருக்குறள் முழுவதும் குறைந்தபட்சம் 29 இடங்களில் திருவள்ளுவர் எடுத்தாண்டிருப்பதை பி.ரா. நடராசன் பட்டியலிடுகிறார். தருக்க ரீதியான முறையில் திருக்குறளை அலசினால் திருவள்ளுவர் இந்து என்பதும் அவர் சமணரல்லர் என்பதும் புலப்படும் என்று பிராமணீய மறுப்பு அறிஞரான பூர்ணலிங்கம் பிள்ளை கூறுகிறார்.

காலம்

திருவள்ளுவரின் காலத்தை திருக்குறளின் காலத்தை கணிப்பதன் மூலம் கண்டறிய முயன்றுள்ளார்கள். திருக்குறளின் காலம் பொ.மு. 300 முதல் பொ.யு. 450 வரை என்று பலவாறு கருதப்படுகிறது. தமிழ் மரபின் வாயிலாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி நூலாக அறியப்படுகிறது. சோமசுந்தர பாரதியார், மா. இராசமாணிக்கனார் முதலானோர் இக்கருத்தை நிறுவி, திருக்குறளின் காலம் பொ.மு. 300 என்று உரைக்கின்றனர். வரலாற்று அறிஞர் கே.கே. பிள்ளை திருக்குறளின் காலம் பொ.மு. முதலாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். செக் நாட்டுத் தமிழ் ஆய்வாளர் கமில் வாச்லவ் சுவெலபில் இவற்றை ஏற்க மறுக்கிறார். அவரது கணிப்பின்படி வள்ளுவரது காலம் சங்கப் புலவர்களுக்குப் பின்னரும் பக்திப் புலவர்களுக்கு முன்னருமான பொ.யு. 2- ஆம் நூற்றாண்டுக்கும் பொ.யு. 5- ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். நூலின் நடை, இலக்கணம், சொல்லமைப்பு போன்றவை பொ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் பொ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இல்லாதிருப்பதும், வள்ளுவரது சொல்லாடலில் காணப்படும் வடமொழிச் சொற்களின் பயன்பாடும், தம் காலத்திற்கு முந்தைய நூல்களிலிருந்து வள்ளுவர் எடுத்தாண்டுள்ளதையும் கமில் வாச்லவ் சுவெலபில் தனது கணிப்பிற்கு காரணமாகச் சுட்டுகிறார்.

எஸ். வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வின் முடிவாகத் திருக்குறள் பொ.யு. 6- ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததோ அல்லது அதற்குப் பிற்பட்டதோவாகும் என்று 1959- ஆம் ஆண்டு குறிப்பிட்டார். திருக்குறளில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதையும், நூலில் திருவள்ளுவர் சுட்டும் வடமொழி நூல்கள் பொ.யு. முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட நூல்களாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும், அதற்கு முன்புவரை இல்லாத இலக்கணங்களைக் திருக்குறளில் திருவள்ளுவர் பயன்படுத்தியிருப்பதையும் எஸ். வையாபுரிப்பிள்ளை தனது கருத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். இதன் ஒரு பகுதியாகக் திருக்குறளில் காணப்படும் 137 வடமொழிச் சொற்களின் பட்டியலையும் அவர் பதிப்பித்தார். பின்னர் வந்த தாமஸ் பரோ, முர்ரே பார்ன்ஸன் எமீனோ உள்ளிட்ட அறிஞர்கள் இப்பட்டியலிலுள்ள சொற்களில் 35, வடமொழிச் சொற்களல்ல என்று கருதினர். இவற்றில், மேலும் சில சொற்களின் தோற்ற வரலாறு சரியாகத் தெரியவில்லையென்றும் வரவிருக்கும் ஆய்வுமுடிவுகள் இவற்றில் சில தமிழ்ச் சொற்கள் என்றே நிறுவ வாய்ப்புள்ளது என்றும் சுவெலபில் கருதுகிறார். ஆயினும் மீதமுள்ள 102 வடமொழிச் சொற்களை ஒதுக்கிவிட முடியாதென்றும் வள்ளுவர் கூறும் கருத்துகளில் சில ஐயப்பாடின்றி அர்த்தசாஸ்திரம், மனுதர்ம சாஸ்திரம் முதலிய வடமொழி இலக்கியங்களிலிருந்து வந்தவையே என்றும் சுவெலபில் கூறுகிறார்.

திருக்குறள் சங்ககாலத்தைச் சேர்ந்தன்று, அதன் காலம் பொ.யு. 450 முதல் பொ.யு. 500 வரை இருக்கலாம் என்றும் 1974-இல் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய தனது ஆய்வில் கமில் வாச்லவ் சுவெலபில் நிறுவுகிறார். நூலின் மொழியமைப்பையும், அதில் வரும் முந்தைய நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், வடமொழி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட சில கருத்துகளையும் தனது கூற்றுக்குச் சான்றாக அவர் காட்டுகிறார். திருக்குறளில், திருவள்ளுவர் சங்கநூல்களில் காணப்படாத பல புதிய இலக்கண நடைகளைப் படைத்துள்ளார் என்று குறிப்பிடும் கமில் வாச்லவ் சுவெலபில், திருக்குறள் இதர பண்டைய தமிழ் நூல்களைவிட அதிகமாக வடமொழிச் சொற்பயன்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார். திருக்குறளின் தத்துவங்கள் பண்டைய இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட மெய்யியலின் ஒரு பகுதி என்பதைச் சுட்டும் கமில் வாச்லவ் சுவெலபில், வள்ளுவர் தமிழ் இலக்கிய மரபுடன் மட்டும் தொடர்புடையவர் அல்லர் என்றும் அவர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் வியாபித்திருந்த ஒருங்கிணைந்த பண்டைய இந்திய அறநெறி மரபையும் சார்ந்தவர் என்றும் நிறுவுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் சில ஐரோப்பிய அறிஞர்களும் கிறிஸ்தவ மதபோதகர்களும் திருக்குறளின் காலத்தை பொ.யு. 400-இல் தொடங்கிக் பொ.யு. 1000 வரை பலவாறு வரையறை செய்தனர். தற்காலத்தைய அறிஞர்கள் குறளின் காலம் என்று ஒருமித்தமாக ஏற்பது சுமார் பொ.யு. 5- ஆம் நூற்றாண்டு என்றே பிளாக்பர்ன் கருதுகிறார். இந்த வாதங்களுக்கிடையில் 1921-ஆம் ஆண்டு தமிழக அரசு மறைமலையடிகள் செய்த ஆராய்ச்சியினை ஏற்று பொ.மு. 31- ஆம் ஆண்டினை வள்ளுவர் பிறந்த ஆண்டாக அறிவித்தது. இதன் விளைவாக அன்று தொடங்கி தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்கத் திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழக நாள்காட்டிகளில் ஜனவரி 18, 1935 அன்று முதல் வள்ளுவர் ஆண்டு சேர்க்கப்பட்டது.

சிறப்புப் பெயர்கள்

திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:

  • தேவர்
  • நாயனார்
  • தெய்வப்புலவர்
  • செந்நாப்போதர்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர்
  • பொய்யாமொழிப் புலவர்
  • மாதானுபங்கி
  • முதற்பாவலர்

புலவர்களின் பாராட்டுகள்

பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலில் திருவள்ளுவரை விதந்தோதியுள்ளனர். மேலும், சி. சுப்பிரமணிய பாரதி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றும், பாரதிதாசன் "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" எனவும் போற்றியுள்ளனர்.

நூல்கள்

திருவள்ளுவர் இயற்றிய நூல் திருக்குறள். இந்நூல் 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்களையும் கொண்டுள்ளது. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளில் உலக மக்கள் அனைவருக்குமான வாழ்க்கை நெறிமுறைகளை உரைக்கும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளது. திருக்குறள், உலகப்பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது.( பார்க்க; திருக்குறள்)

பிற நூல்கள்
திருக்குறள் தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்கள் வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை:
  • ஞான வெட்டியான்
  • பஞ்ச ரத்னம்

இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்

"அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே
யவனிதனில் ஞானவெட்டியருள யானும்
நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத
நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே"

இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. இவை தவிர வேறு சில நூல்களின் ஆசிரியர் பெயரும் வள்ளுவர் என உள்ளது. அந்த நூல்களில் முக்கியமானது 'சுந்தர சேகரம்'. இந்நூல் ஒரு ஜோதிட நூல். இந்தியாவின் பண்டைய ஜோதிட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்கள் இந்நூலில் உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், திருக்குறளை எழுதிய திருவள்ளுவர்தான் இவற்றையும் இயற்றினார் என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

வள்ளுவரின் உருவம்

19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன. பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 1950-களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த திருவள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் மற்றும் ஓவியர் வேணுகோபால் சர்மா மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார். வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார். அப்போது காமராஜர், கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர். பிறகு இந்தப் படம், 1960- இல் கா. ந. அண்ணாதுரையால், காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பின்பு 1964-ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், வேணுகோபால் சர்மா வரைந்த, திருவள்ளுவரின் உருவப்படத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான ஜாகிர் உசேன் திறந்து வைத்தார். பிறகு, இதே படம், இந்திய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது. 1995- ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையொட்டி, இந்திய அரசால் இதே படத்தை அடிப்படையாக கொண்ட இந்திய இரண்டு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்

திருவள்ளுவர் கோயில்
திருவள்ளுவர் கோயில்

மயிலாப்பூரில், திருவள்ளுவர் பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.

அஞ்சல் தலை
திருவள்ளுவர் அஞ்சல் தலை

1960- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15- ஆம் நாள், இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

வள்ளுவர் கோட்டம்

வள்ளுவர் கோட்டம் , சென்னை நுங்கம்பாக்கத்தில் 1973- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் .27- ஆம் நாள் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976- ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.1976-ஆம் ஆண்டு ஏப்ரல் 15- ஆம் நாள் அப்போதய இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகம்மது அவர்களால் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, திருவாரூர் கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடத்தில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் சிலை
வள்ளுவர் கோட்டம்

தமிழ்நாடு அரசு, திருவள்ளுவருக்கு குமரிக் கடலில், கடலுக்குள், நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரச் சிலை அமைத்துள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி செப்டம்பர் 6,1990- அன்று தொடங்கப்பட்டு ஜனவரி 1 ,2000 அன்று, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியால் திறக்கப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page