under review

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது

From Tamil Wiki
Revision as of 22:05, 19 April 2024 by ASN (talk | contribs) (Para Added and Edited: Image Added; Link Created: Proof Checked.)
டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது (1972), தூது இலக்கிய வகை நூல்களுள் ஒன்று. மு. கருணாநிதியின் மீது காதல் கொண்ட தலைவி, தோழியைத் தூதாக அனுப்புவதாக இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் புலவர் ஆனை, நரசிங்கப்பெருமாள்.

பதிப்பு, வெளியீடு

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது நூல், முதன் முதலில் 1972-ல் வெளியானது. புலவர் செந்தமிழ்க் கல்லூரி இந்நூலை வெளியிட்டது. புலவர் ஆனை, நரசிங்கப்பெருமாள் இந்நூலை இயற்றினார். தொடர்ந்து சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி 5-ல், தூது இலக்கியங்கள் தொகுப்பில், 44-வது நூலாக டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது நூல் இடம் பெற்றது. ச.வே. சுப்பிரமணியனால் தொகுக்கப்பட்ட இந்நூலை மெய்யப்பன் பதிப்பகம், ஏப்ரல் 2023-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது நூலை இயற்றியவர், புலவர் ஆனை, நரசிங்கப்பெருமாள். இவர், சென்னை புலவர் செந்தமிழ்க் கல்லூரியின் மாலை வகுப்பு முதல்வராகப் பணியாற்றினார். இலக்கண, இலக்கியங்களில் தேர்ந்த இவர் ’ஐந்திலக்கண வித்தகர்’ என்று போற்றப்பட்டார்.

நூல் அமைப்பு

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது நூலின் தொடக்கத்தில் அஞ்சுகம் வாழ்த்து, முத்துவேலர் வாழ்த்து, அண்ணா வாழ்த்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து கருணாநிதியின் வாழ்க்கை 586 அடிக் கண்ணிகளில் கூறப்பட்டுள்ளது. தலைவி, கருணாநிதியை பிரம்மனாகவும், திருமாலாகவும், சிவனாகவும் எண்ணுகிறாள். முக்கனியாக உருவகிக்கிறாள். வள்ளுவரே அண்ணாவாகப் பிறந்ததாகவும், தமிழன்னையின் ஆணையால் கம்பர், இளங்கோ, ராஜராஜசோழனின் ஒருங்கிணைந்த திருவுருவே கருணாநிதியாகப் பிறந்ததாகவும் இந்நூல் கூறுகிறது.

பாடல்கள்

கருணாநிதியின் பிறப்பு

முத்தமிழ்த் தாயவட்கு மூண்ட பெருவிருப்பால்
முத்துவேலர் அஞ்சுகத்தின் முத்தெனவே - இத்தரையில்

மூவர் ஒருவனாகி முத்தமிழ்க் காவலனாய்
நாவலனாய்ச் சொல்லாரும் நாற்றிசைக்கோர் - பாவலனாய்க்

கண்ணுலகில் தோன்றிக் கருணா நிதியெனப்
பண்ணாரும் பேர்பெற்றார் பண்பினால்

கருணாநிதி பிறப்பின் சிறப்பு

செந்தமிழில் வல்லவன் சீர்சால் கலைஞனவன்
வந்தோர்க்கு வாழ்வளிக்கும் வள்ளலே - வெந்திங்கே

நொந்தனர் ஏழையர் நோய்தீர் மருந்தவன்
இந்நாள் எழுத்துலக ஏந்தலே - செந்தமிழ்ப்

பாட்டுக்கோர் பாவலன் பாட்டுக்குள் வாழ்பவன்
நாட்டின் நலங்கருதும் நாவலனே - நாட்டின்

அறியாமை போக்கும் அறிவுலகச் செம்மல்
வறுமை அழிக்கின்ற மன்னன் - செறிந்த

உறவுக்குக் கைகொடுக்கும் ஒப்பற்றோன் நாட்டின்
செறியுரிமை கேட்கின்ற சிங்கம் - மறவாமல்

தன்னாட்சி கேட்கும் தமிழ்வீரன் செந்தமிழால்
பொன்னாட்சி காணும் புலவனே - என்றுமெங்கும்

ஏழைச் சிரிப்பில் இறைவனைக் காண்பவன்
ஆழிசூழ் பாருக்(கு) அறிஞனே - ஏழைகள்

வாழப் பெரிதுழைக்கும் வள்ளற் பெரியோனே
வீழுமோர் ஆலின் விழுதொப்போன் - தாழாத

வீரத்தில் என்றுமவன் வேங்கையே
எக்காலும் மாரி கொடைக்கென்பர் மாநிலத்தில்

தலைவியின் தூது

காதலித் தேன்மறந்தேன் கண்போலும் தோழியே!
தூதாகிச் சென்றுவா தூயனிடம் – காதினில்

ஏறுமாறு சொல்லுவாய் என்காதல் என்துயரைக்
கூறி அழைத்துவா கொற்றவனை - ஆறு

பெருக்கெடுத் தோடல்போல் அன்போடும் நெஞ்சில்
உருவோடு நிற்பான் உயர்ந்தோன் - திருவளர்

கண்திறந்தால் நீங்குவான் காவலன் என்றெண்ணிக்
கண்மூடி வாழ்கின்றேன் காவளர் - பண்கிளியே

அன்னவனை நான்காண அன்போ டழைத்துவா
மன்னவன் வந்தால் மகிழ்ந்திருப்பேன் - இன்றேல்

அவனணிந்த மாலையை ஐயமின்றி வாங்கித்
துவளுமுன் வாராய் தொடர்ந்து...

மதிப்பீடு

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது நூல், மு. கருணாநிதியின் பிறப்பு தொடங்கி பிறப்பின் பெருமை, ஆட்சித் திறன், நிர்வாகச் சீர்த்திருத்தங்கள், அறப்பணிகள் போன்றவற்றை விதந்தோதி எழுதப்பட்டுள்ளது. காந்தி, ராஜாஜி தொடங்கி காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனப் பல அரசியல்வாதிகளைப் பற்றிப் பல சிற்றிலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மு. கருணாநிதியைப் பற்றி எழுதப்பட்டகுறிப்பிடத்தகுந்த ஒரு சிற்றிலக்கிய நூலாக டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தோழி விடு தூது, புலவர் ஆனை, நரசிங்கப்பெருமாள், புலவர் செந்தமிழ்க் கல்லூரி வெளியீடு, முதல் பதிப்பு: 1970
  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.