under review

செந்தமிழ்ச் செல்வி

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
செந்தமிழ்ச்செல்வி 1924

செந்தமிழ்ச் செல்வி (1923) தமிழ் இலக்கிய மாத இதழ். பழந்தமிழ் ஆய்வுக்காக வெளிவருவது. திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் தொடங்கப்பட்டது.

வெளியீடு

செந்தமிழ்ச்செல்வி 1923-ல் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நிறுவனத்தின் தலைவர் வ.சுப்பையா பிள்ளை யால் தொடங்கப்பட்டது. முதலில் திருநெல்வேலியில் இருந்தும் பின்னர் சென்னையில் இருந்தும் வெளிவந்தது.

மதுரையில் பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய நான்காம் தமிழ்ச்சங்கம் 1902 முதல் செந்தமிழ் (இதழ்) வெளியிட்டு வந்தது. அதன் ஆசிரியராக இருந்த மு. இராகவையங்கார் இதழின் நோக்கத்தை கைவிட்டு பொதுவான செய்திகளை வெளியிடுவதாகவும், தனித்தமிழ் இயக்கச் சிந்தனைகளை வெளியிட மறுப்பதாகவும் கா.சுப்ரமணிய பிள்ளை, தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட அறிஞர்கள் குறைப்பட்டதனர். அக்குறை நீங்க செந்தமிழ்ச்செல்வி தொடங்கப்பட்டது.

ஆசிரியர்கள்

செந்தமிழ்ச்செல்வி 1952

செந்தமிழ்ச் செல்வி முதன்மையாக மறைமலையடிகளின் வழிகாட்டுதலின்படி நடந்த இதழ். மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் இதன் நெறியாளர்களில் ஒருவர். செந்தமிழ்ச் செல்வி தொடக்கம் முதல் ஆலோசகர்களின் குழு ஒன்றை வைத்திருந்தது. கா. சுப்பிரமணிய பிள்ளை, எஸ். சச்சிதானந்தம் பிள்ளை , ந.மு. வேங்கடசாமி நாட்டார், துடிசைக் கிழார், வித்துவான் மு. கதிரேசன் செட்டியார் ஆகியோர் 1925 ஆண்டில் ஆசிரியர் குழுவாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மணி திருநாவுக்கரசு இதன் ஆசிரியப்பொறுப்பில் இருந்துள்ளார். இறுதியாக வ.சுப்பையா பிள்ளையின் மருமகன் இரா.முத்துக்குமாரசுவாமி செந்தமிழ்ச் செல்வியின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.

உள்ளடக்கம்

செந்தமிழ்ச்செல்வி பழந்தமிழ் ஆய்வுக்கான இதழாகவே வெளிவந்தது. ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள தமிழ்ப் புலவர் வரலாறு இவ்விதழில் தொடராக 1926 முதல் வெளிவந்தது. தனித்தமிழியக்கம், தமிழிலக்கிய காலவரையறை ஆகியவை பற்றிய விவாதங்கள் வெளியிடப்பட்டன. சட்டம், தமிழிசை ஆகியவை சார்ந்த கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. தேவநேயப் பாவாணர், மதுரை இரா. இளங்குமரனார், க.ப. அறவாணன், இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், பி.எல் சாமி போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இவ்விதழில் எழுதிவந்துள்ளனர்.செந்தமிழ்ச்செல்வி உறுதியான தனித்தமிழ்க் கொள்கை கொண்டது. எல்லா கட்டுரைகளையும் தனித்தமிழில் வெளியிட்டது. ஆசிரியர் பெயர்கள், ஊர்ப்பெயர்கள்கூட தனித்தமிழிலேயே அளிக்கப்பட்டன.

செந்தமிழ் செல்வியின் பெரும்பாலான இதழ்கள் தமிழ் இணைய நூலகச் சேமிப்பில் உள்ளன[1]

ஆய்வு

அ.மரிய தனபால் செந்தமிழ்ச்செல்வி இதழின் தமிழ்ப்பணி பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்[2].

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page