கரந்தை ரத்தினம் பிள்ளை
To read the article in English: Karanthai Rathinam Pillai.
கரந்தை ரத்தினம் பிள்ளை (மார்ச் 29, 1884 - 1956) தவில் இசைக் கலைஞர்.
இளமை, கல்வி
ரத்தினம் பிள்ளை நாச்சியார்கோவில் அருகே திருநறையூரில் மார்ச் 29, 1884 அன்று நாதஸ்வரக் கலைஞர் ஆறுமுகம் பிள்ளை - அம்புஜத்தம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.
நீடாமங்கலம் கோவிந்தப் பிள்ளையிடம் ரத்தினம் பிள்ளை தவில் பயின்றார்.
தனிவாழ்க்கை
ரத்தினம் பிள்ளைக்கும் முன் பிறந்த சகோதரர் இளமையிலேயே காலமானார். வேணுகோபால் என்று ஒரு தம்பி ரத்தினம் பிள்ளைக்கு இருந்தார்.
ரத்தினம் பிள்ளை நாச்சியார்கோவில் அமிர்த நாதஸ்வரக்காரரின் மகள் கௌரியம்மாள் என்பவரை முதலில் மணந்தார். இவருக்கு மீனாக்ஷியம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருமெய்ஞானம் நாராயணஸ்வாமி பிள்ளை), கரந்தை ஷண்முகம் பிள்ளை ஆகியோர் பிறந்தனர். ரத்தினம் பிள்ளையின் இரண்டாவது மனைவி தனம்மாள், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.
இசைப்பணி
நெடுங்காலம் மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளையுடன் தவில் வாசித்த ரத்தினம் பிள்ளை, பொன்னுச்சாமிப் பிள்ளையுடன் அவரது இசைத்தட்டுக்களிலும் வாசித்திருக்கிறார். ரத்தினம் பிள்ளை மைசூர் மன்னரிடம் இருந்து தங்கத் தவிற்சீலையும், பதக்கங்களும், ராமநாதபுர அரசரிடம் இருந்து தங்கத் தவிற்கம்பும், சிங்கம்பட்டி ஜமீனில் வெள்ளித் தவிற்கம்பும், சேத்தூர் ஜமீனிலும் காரைக்குடி நகரத்தாரிடம் தங்கத்தவிற்சீலையும் பரிசாகப் பெற்றார்.
பரோடா மன்னருக்கு தஞ்சை அரச குடும்பத்து பெண்ணைத் திருமணம் செய்த போது, தஞ்சாவூர் கிருஷ்ணன் என்ற கலைஞரோடு ரத்தினம் பிள்ளை தவில் வாசித்து பரோடா மன்னரிடம் இருந்து வைரமிழைத்த தங்கப் பதக்கம் பரிசாகப் பெற்றார்.
உடன் வாசித்த கலைஞர்கள்
கரந்தை ரத்தினம் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்கு வாசித்திருக்கிறார்:
- தஞ்சை கன்னையா ரெட்டியார்
- மதுரை சௌந்தரபாண்டிய பிள்ளை
- மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை
- நாகூர் சுப்பய்யா பிள்ளை
- திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
- மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை
மாணவர்கள்
கரந்தை ரத்தினம் பிள்ளையிடம் கற்ற முக்கியமான மாணவர்கள்:
- திருவனந்தபுரம் அனந்தம்
- தஞ்சாவூர் சின்ன ரத்தினம் பிள்ளை
மறைவு
கரந்தை ரத்தினம் பிள்ளை மார்ச் 29, 1956 அன்று தஞ்சாவூரில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:31 IST