under review

கம்பர்

From Tamil Wiki
கம்பர்
கம்பர்

கம்பர் (பொ.யு. 12-ம் நூற்றாண்டு) (பொ.யு. 1180-1250) தமிழ்க்கவிஞர். வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி தமிழில் ராமாவதாரம் எழுதினார். இது கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

கம்பர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூரில்(தேரழுந்தூர்) ஆதித்தன் என்பவருக்கு மகனாக பொ.யு. 12-ம் நூற்றாண்டில் பிறந்ததாக நம்பப்படுகிறது. கம்பரை இளமைக் காலத்தில் திரிகார்த்த நாட்டின் சிற்றரசரான சடையப்ப வள்ளல் ஆதரித்தார். அவரின் துணை கொண்டு தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றார். பின்னர் சோழமன்னர் கம்பரை ஆதரித்து கம்பநாடு என்ற பகுதியை அவருக்கு அளித்தார்.

கம்பர் கதைகள்

கம்பர் பற்றிய பல்வேறு கதைகள் அபிதான சிந்தாமணி என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அம்பிகாபதி

கம்பரின் தந்தை ஆதித்தன். மகன் அம்பிகாபதி. அம்பிகாபதி கவிஞன். சோழ மன்னனின் மகள் அமராவதியும் அம்பிகாபதியும் காதலித்ததால் அம்பிகாபதி மன்னனால் கொல்லப்பட்டதாகக் கதை உள்ளது. மகனின் பிரிவால் கம்பர் பெருந்துயர் அடைந்தார். இந்தத் துயரமே இராமனைப் பிரிந்த தயரதன் துயராகவும், இந்திரஜித்தைப் பிரிந்த இராவணன் துயராகவும் கம்ப இராமாயணத்தில் வெளிப்படுவதாகக் கூறுவர்.

சடையப்ப வள்ளல்

வெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைக் கம்பர் பத்து இடங்களில் இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இடங்களில் வள்ளலின் கொடை, பண்பு, புகழ், பெருமை முதலியவற்றை நன்றியோடு பாராட்டினார். இராமாயணத்தில் இராமன் முடிசூடும் சடங்கு நிகழ்கிறது. "முடியினை வசிட்டன் புனைந்தான்" என்று கூறாமல், "வெண்ணெய் நல்லூர்ச் சடையன் வழி முன்னோன் எடுத்துக் கொடுக்க வசிட்டன் முடி சூட்டினான்'"என்று கம்பர் பாடினார்.

சோழமன்னன்

சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் மனவேறுபாடு இருந்தது என்பதைப் பல்வேறு கதைகள் உள்ளன. சோழ மன்னனை வெறுத்துக் கம்பர் அந்த நாட்டை விட்டு நீங்கும்போது பாடியதாக தனிப்பாடல் ஒன்று உள்ளது. இதேபோல் சோழ அரசவைப் புலவர் ஒட்டக் கூத்தருக்கும் கம்பருக்கும் போட்டியும் பூசலும் இருந்தமை பற்றிய செய்தியும் உண்டு.

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு

ராமாயண அரங்கேற்றம்

கம்பர் ராமகாதையை அரங்கேற்ற திருவரங்கம் சென்று வேண்டினார். ஆனால் அவர்கள் தில்லைத் தீட்சிதர்கள் இதற்கு ஒப்புக் கொண்டால் அரங்கேற்றம் செய்யலாம் என்று கூறியதால் கம்பர் தில்லைக்குச் சென்றார். ஆனால் தில்லைத் தீட்சிதர்கள் மூவாயிரம் பேரை ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் கூட்டி ஒப்புதல் வாங்குவது இயலாமல் இருந்தது. ஒரு சமயம் குழந்தை ஒன்று பாம்பு தீண்டி இறந்து போனது. இதற்காகத் தீட்சிதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி இருந்தனர். அங்குச் சென்ற கம்பர் தமது இராமாயணத்தில் நாகபாசப் படலம் என்ற பகுதியில் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடினார். உடனே குழந்தை பிழைத்து எழுந்தது. இதனைக் கண்ட தீட்சிதர்கள் மகிழ்ந்து இராமாயணத்தை அரங்கேற்ற ஒப்புதல் அளித்தனர். கம்பர் மீண்டும் திருவரங்கம் சென்று அரங்கேற்றம் செய்ய முனைந்தார். திருவரங்கத்தார் வேண்டுகோளுக்கு இணங்கச் சடகோபர் அந்தாதி பாடி, இரணிய வதைப் படலத்தை விரிவாக விளக்கிக் கூறியபின் இராமாயண அரங்கேற்றம் நிகழ்ந்தது.

பெயர்க்காரணம்

  • கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்ததால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர்.
  • கம்பர் குலம் என்று அழைக்கப்படும் உவச்சர்கள் (பூசாரி) குலத்தில் பிறந்ததால் இப்பெயர் பெற்றார் என்பர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் உவச்சர்கள் என அழைக்கப்பட்டனர்.
  • கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர்.
  • தேவாரப் பதிகங்களில் 'கம்பர்' என்று சுட்டப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பனின் பெயர் இவருக்கு இடப்பட்டது என்பர்.

கம்பன் காலம்

  • இராமாயணத்தின் தொடக்கத்தில் 'கம்பர் தனியன்கள்' என்ற தலைப்பில் 17 பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு பாடலில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் இராமாயணம் எழுதப்பட்ட காலத்தை உணர்த்துவதாக உள்ளது. இப்பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய காலம் பொ.யு. 885 என்று அறிஞர்கள் கூறுவர். ஆனால் இத்தனியன்கள் கம்பர் காலத்திற்கும் பின்னால் 16-ம் நூற்றாண்டில் யாரோ சிலர் எழுதி இடைச் செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும் என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறிப்பிட்டார்.
  • 'ஆவின் கொடைச் சகரர்' என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பரின் காலம் பொ.யு. 978 என்று சிலர் விளக்கி உள்ளனர். இது முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம். இந்தக் காலத்தையும் சில சான்றுகள் கொண்டு அறிஞர்கள் மறுத்து உள்ளனர்.
  • கம்பருடைய காலம் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் பொ.யு. 12-ம் நூற்றாண்டு என்று அறிஞர் பலரும் கூறி உள்ளனர். பொ.யு. 1376-ல் பொறிக்கப்பட்ட ஒரு கன்னடக் கல்வெட்டில் அந்தக் கல்வெட்டு தோன்றிய காலத்திற்கு முன்பு இரண்டு தலை முறை காலமாகக் கம்பராமாயணம் கன்னட நாட்டில் வழங்கி வந்ததைத் கூறுவதால் பொ.யு. 1325-க்கு முன்பே கம்பர் காவியம் தோன்றி இருக்க வேண்டும் என மா.இராசமாணிக்கனார் கருதினார்.
  • கம்பர், சீவக சிந்தாமணி இயற்றிய திருத்தக்க தேவருக்குப் பிற்பட்டவர் என்பது அறிஞர் பலரும் ஒப்புக் கொண்ட உண்மை. கம்பர் சோழ மன்னனோடு மாறுபட்டு ஆந்திர நாட்டில் சில காலம் தங்கினார். அவர் தங்கி இருந்த நாடு ஓரங்கல்(இன்றைய வாரங்கல்). அந்த நாட்டின் அரசன் பிரதாபருத்திரன். அவன் காலம் பொ.யு. 1162 - 1197. இதே கால கட்டத்தில் சோழப் பேரரசனாக இருந்தமூன்றாம் குலோத்துங்கனின் காலம் பொ.யு. 1178 - 1208. எனவே கம்பர் வாழ்ந்த காலம் பொ.யு. 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும் கூறலாம்.

இலக்கிய வாழ்க்கை

கம்பர் வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை இராமகாதையாகத் தமிழில் எழுதினார். பிற்காலத்தில் அது கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது. சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, மும்மணிக்கோவை போன்ற நூல்களையும் எழுதினார். தனிப்பாடல்கள் பல பாடினார்.

இலக்கிய இடம்

  • பழமொழி: கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்; கல்வியிற் பெரியன் கம்பன்
  • பாரதியார்: “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு”
  • கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை: “அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி”
  • வெ. இராமலிங்கம் பிள்ளை: “தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே”
  • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்: ”விருத்தமென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன்”

மறைவு

கம்பர் பொ.யு 13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலமானதாக நம்பப்படுகிறது.

கம்பன் கழகம்

  • சா. கணேசன் காரைக்குடியில் ஏப்ரல் 2,1939-ல் இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாருடன் இணைந்து கம்பன் கழகத்தைத் தொடங்கினார். கம்பராமாயணத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
  • எஸ்.வையாபுரிப்பிள்ளை டி.கே.சிதம்பரநாத முதலியாருடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். மீ.ப.சோமு, நீதிபதி மு.மு.இஸ்மாயில், பேரா.அ.சீனிவாசராகவன், பக்ஷிராஜ ஐயங்கார் போன்றவர்கள் அதில் ஈடுபட்டனர். மர்ரே ராஜம் நிறுவனம் பதிப்பித்த கம்பராமாயண நூலை இவ்வமைப்பு பிழைதிருத்தி, பாடபேதம் நோக்கி வெளியிட்டது.
  • சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களிலும் கம்பன் கழகம் தொடங்கப்பட்டது.

நினைவிடம்

  • சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கம்பர் நினைவிடம் உள்ளது. இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது.
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சா. கணேசனின் முயற்சியில் 'கம்பன் மணிமண்டபம்' அமைக்கப்பட்டது. இந்த வளாகத்திலேயே தமிழ்த்தாய் கோயிலும் அமைந்துள்ளது.
  • தேரழந்தூரில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

நூல்கள்

  • கம்பராமாயணம் (இராமகாவியம்)
  • சிலையெழுபது
  • சடகோபர் அந்தாதி (நம்மாழ்வார்)
  • சரசுவதி அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • ஏரெழுபது
  • மும்மணிக்கோவை
  • கம்பர் தனிப்பாடல்கள்

உசாத்துணை


✅Finalised Page