under review

திருத்தக்க தேவர்

From Tamil Wiki

திருத்தக்க தேவர்(திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர்) (பொ.யு.ஒன்பதாம் நூற்றாண்டு) ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை இயற்றிய சமணப் புலவர். இவர் நரிவிருத்தம் என்னும் நூலையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருத்தக்க தேவர் சோழர் குலத்தில் தோன்றியவர். அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர். வடமொழிப் புலமை பெற்றவர். இளமையிலேயே துறவு பூண்டார். தம் நல்லாசிரியருடன் பாண்டி நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர்.

சீவக சிந்தாமணியில்‌ “முந்நீர்‌ வலம்புரி” என்று தொடங்கும்‌ பாடலுக்கான உரையில் நச்சினார்க்கினியர்‌, இப்பாடல்‌, திருத்தக்க தேவரின்‌ ஆசிரியர்‌ பாடிய பாடல்‌ என்றும்‌, 'முந்தீர்‌ வலம்புரி' என்னும்‌ தொடர்‌, சோழ குலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி என்னும்‌ பொருளில்‌ திருத்தக்க தேவரைக்‌ குறிக்கும்‌ என்றும்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

இலக்கிய வாழ்க்கை

திருத்தக்க தேவர் மதுரையில் தன் ஆசிரியருடன் வாழ்ந்து வந்தார். சங்கப் புலவர்களுடன் ஏற்பட்ட விவாதம் ஒன்றில், புலவர் ஒருவர் ‘சமணர்களுக்குத் துறவை மட்டுமே பாடத் தெரியும்; காமச் சுவைபட இலக்கியம் படைக்க அவர்கள் அறியார்” என்று இழித்துப் பேசினார். அதற்கு திருத்தக்க தேவர் ‘சமணர்கள் காமத்தை வெறுத்தனரேயன்றிப் பாடத் தெரியாதவர்கள் அல்லர்’ என்றார். ‘அப்படி என்றால் காமச் சுவைபட ஒரு நூல் இயற்றுக’ என்றார் புலவர். இதனைத் தேவர் தன் ஆசிரியரிடம் கூற, அவர் தம் மாணாக்கரின் புலமைத் திறத்தை அனைவருக்கும் உணர்த்த, எதிரே ஓடிய நரி ஒன்றைக் காட்டி ‘இது பற்றிப் பாடுக’ என்றார். அவ்வாறே நரிவிருத்தம் என்ற நூலைப் பாடினார் திருத்தக்க தேவர்.

தொடர்ந்து ஆசிரியரின் வேண்டுகோளின்படி சீவகனின் வரலற்றை ‘சீவக சிந்தாமணி’ என்ற நூலாக இயற்றினார். தேவர் அப் பெருங்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி வழங்கும்படி ஆசிரியரை வேண்ட அவரும் ‘செம்பொன் வரைமேற் பசும்பொன்‘ என்று தொடங்கும் பாட்டைப் பாடித் தந்தார். தேவரின் "மூவா முதலா உலகம்" என்னும் கடவுள் வாழ்த்து தம் பாடலைவிட சிறப்பாக் இருந்ததைக் கண்ட ஆசிரியர், அதையே முதற் செய்யுளாக அமைத்துக்கொள்ளும்படி பணித்தார். ஆசிரியரின் பாடல் இரண்டாவதாக இடம்பெற்றது . சீவகசிந்தாமணியில் காமச்சுவை மிக அதிகமாக இருந்தது. சிற்றின்ப அனுபவம் இல்லாத ஒருவரால் இந்த அளவுக்குச் சிற்றின்பத்தைப் பாடமுடியாது என்று புலவர்கள் கருதினர். திருத்தக்க தேவரின் துறவு நெறியின் மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதனை அறிந்த திருத்தக்கத் தேவர், “நான் உண்மையான துறவி என்றால் இந்தப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு என்னைச் சுடாதிருக்கட்டும்” என்று கூறி, பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலைத் தன் கைகளில் தாங்கினார். அதனால் அவருக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படவில்லை. தேவரின் பெருமையை அறிந்த பிற புலவர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டினர். திருத்தக்க தேவரும் அவர்களை மன்னித்தார் என்று தொன்மக்கதையொன்று கூறுகிறது.

சிறப்புகள்/இலக்கிய இடம்

"திருத்தக்கத்தேவர் தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்." என்று வீரமாமுனிவர் குறிப்பிட்டுள்ளார். "சீவகசிந்தாமணி இப்பொழுதுள்ள தலைசிறந்த தமிழிலக்கியச் சின்னமாகும்; தமிழ்ப்பொருள் காதற் காப்பியம் ; உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று." என்று டாக்டர் ஜி. யூ. போப் குறிப்பிட்டார்.

சீவகசிந்தாமணி பற்றி ஜெயமோகன், “ காவியச்சுவை என்பது சுருக்கமாகச் சொன்னால் ஒரு மொழியின் அழகின் அனைத்து முகங்களும் வெளிப்படும் நிலையே. ஆகவே ஒரு காவியம் என்பது ஒரு வாசகனால் வாழ்நாள் முழுக்க வாசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். அவ்வகையில் பார்த்தால் தமிழில் கம்பராமாயணமும் சீவகசிந்தாமணியும் மட்டுமே அந்தத் தகுதி கொண்ட மாபெரும் காப்பியங்கள்." என்று குறிப்பிடுகிறார்

முதன்முதலில் தாழிசை, துறை, விருத்தம்‌ போன்ற் இனப்பாக்களில்‌ மூவாயிரத்துக்கும்‌ மேற்பட்ட செய்யுட்‌களைக்‌ கொண்ட்‌ காப்பியம்‌ பாடியவர்‌ திருத்தக்கதேவரே. சீவகசிந்தாமணியில்‌ கலிவிருத்தம்‌, ஆசிரியவிருத்தம்‌, கலித்துறை; வஞ்சித்துறை; ஆசிரியத்துறை முதலான இனப்‌ பாக்கள்‌ வந்துள்ளன. திருத்தக்கதேதவர்‌, கொச்சக ஒருபோகு, தேவபாணிக்‌ கொச்சக ஒரு போகு மூதலிய பா வகைகளையும்‌ அமைத்தார்.

சீவகசிந்தாமணி சிற்றின்பத்தைப் பாடும் இலக்கியமாகக் கருதப்பட்டாலும் அதன் குறிக்கோள்‌ முற்றத்துறத்தலே. ஏனைய இலம்பகங்களில்‌ காணப்பெறும்‌ காமவின்பம்‌, முத்தியின்‌ சிறப்பினை எடுத்துக்‌ -காட்டுவதற்கு அமைக்கப்‌ பெற்ற முரண்‌ நிலையே எனவும் தொடக்கமுதல்‌ விரித்துக்‌ கூறப்பெற்ற காமச்‌சுவையெல்லாம்‌ துறவறத்தின்‌ சிறப்பினைக்‌ காட்டப்‌ பாடப்‌ பெற்றனவே. என அறிஞர்களால் கருதப்படுகிறது.

பாடல் நடை

கொடியின் நீர்மையாள்

கலம்புரி அகல்‌அல்குல்‌: தாயர்‌ தவ்வையர்‌
சிலம்புரி திருந்தடி பரவச்‌ செல்பவள்‌:
வலம்புரி சலஞ்சலம்‌ வளைஇய தொத்தனள்‌
குலம்புரிந்‌ தனையதோர்‌ கொடியின்‌ நீர்மையாள்‌” (184)

விசயை தன்‌ தந்தையின்‌ அரண்மனையில்‌ ஐவகைத்‌ தாயரும்‌ அவர்களின்‌ மக்களும்‌ போற்ற வளர்ந்தாள்‌. ஐவகைத்‌ தாயரும்‌ அவர்களின்‌ மக்களும்‌ சூழ்ந்து வரச்‌ செல்லும்‌ காட்சி, ஆயிரம்‌ வலம்புரிச்‌ சங்குகளால்‌ சூழப்பெறும்‌ சலஞ்சலம்‌ என்னும்‌ உயர்ந்த சங்குபோல்‌ தோன்றியது.

சமணத்தின் மும்மணிகள்

மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை இன்றித் தேறல் காட்சிஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் ஒழுக்க மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியு மென்றான்

ஞானம் என்பது உண்மையை அறிதல்; காட்சி என்பது அவ்வாறு அறிந்த பொருள்களைப் பற்றிய தெளிவை அடைதல்; ஒழுக்கம் என்பது ஐம்பொறிகளையும் அவற்றின் போக்கில் செல்லவிடாமல் தடுத்து, உயிர் உய்யும் வகையில் அவற்றை நடத்தல்.இம்மும்மணியும் நிறைந்தபோதே இருவினையும் கெடும்.

உத்தமமானவை

உத்தம தானம் ஈந்தே ஒள்பொருள் உவந்து நல்ல
உத்தமர்க்(கு) உவந்து முன்னே உத்தம் தானம் ஈந்தே
உத்தம நெறிநின்றார்க்(கு) உவமை ஒன்று இல்லை ஆகும்
உத்தம குருவும்[*] புத்தேள் உலகமும் உடையார் அன்றே

உத்தமமான தானங்கள் செய்து உத்தம நெறி நின்றி, உத்தம குருக்களுக்கு உவந்தவை செய்து உத்தம் நெறி நின்றவர்க்கு ஈடு இணையில்லை, அவர்கள் வானுலகையும், உத்தம குருவான இறைவனையும் அடைவர்

படைப்புகள்

  • சீவக சிந்தாமணி
  • நரி விருத்தம்

உசாத்துணை

திருத்தக்க தேவர்-பேரா.கரு. இராமநாத செட்டியார், தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page