under review

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்

From Tamil Wiki
Revision as of 07:25, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அப்துற் றஹீம்
நூற்றாண்டு கருத்தரங்கம்

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் (எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம்) (ஏப்ரல் 27, 1922- நவம்பர் 10, 1993) தமிழக எழுத்தாளர். தமிழின் தொடக்ககால சுய முன்னேற்ற நூல்களை எழுதியவர். இஸ்லாமிய அறிஞர். இஸ்லாம் சார்ந்து பல நூல்களை எழுதினார். இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார்.

பிறப்பு, கல்வி

முன்னோர்

அப்துற் றகீமின் மூதாதையர்கள் திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆறாம்பண்ணை என்ற சிற்றூரிலிருந்து தொண்டியில் வந்து குடியேறியவர்கள். மிஃராஜ் மாலை' எழுதிய ஆலிப் புலவரின் பரம்பரையில் வந்தவர் அப்துற் றகீமின் முகம்மது காசிம்

பிறப்பு

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் ஏப்ரல் 27, 1922 அன்று, எம்.ஆர்.எம். முஹம்மது காசீம்-எம்.ஆர்.பி. கதீஜா பீவி இணையருக்குப் பிறந்தார்.

கல்வி

அப்துற் றகீம் தொண்டியில் ஆரம்பக்கல்வி கற்றார். காரைக்குடி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வர் வித்தியாசலையில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். புதுமுக வகுப்பை புதுக்கோட்டை அரசினர் கல்லூரியில் கற்றார். இளங்கலைக் கல்வியை சென்னை அரசினர் முஹம்மதியா கல்லூரில் நிறைவு செய்தார். தமிழ், ஆங்கிலம், அரபு, உருது மொழிகள் அறிந்தவர்.

தனி வாழ்க்கை

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், எழுத்தையே தனது தொழிலாகக் கொண்டார். முழு நேர எழுத்தாளராகப் பணியாற்றினார். மனைவி: எம்.ஆர்.பி. சைனப் ருகையா பீவி. மகள்கள்: கதீஜா பீவி, பாத்திமா பீவி.

எம்.ஆர்.எம். அப்துற்றஹீம் புத்தகங்கள்
இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்

இலக்கிய வாழ்க்கை

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் சென்னையில் ஒரு தனியார் நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது The Lord of Arabia என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்தார். வெ. சாமிநாத சர்மாவின் முன்னுரை யுடன் 1943-ம் ஆண்டு சென்னை சக்தி காரியாலயம் வெளியிட்டது.

அப்துற் றஹீம் 35 சுயமுன்னேற்ற நூல்கள் 9 வரலாற்று நூல்கள், 8 மொழிபெயர்ப்பு நூல்கள், மற்றும் 5 நாவல்களை எழுதியுள்ளார்.

சுயமுன்னேற்றம்

1948-ல் அப்துற் றஹீம் எழுதிய ’வாழ்க்கையில் வெற்றி’ தமிழில் வெளியான முதல் சுய முன்னேற்ற நூலாகக் கருதப்படுகிறது. முப்பத்திரண்டு சுயமுன்னேற்ற நூல்களை எழுதியுள்ளார்.

இஸ்லாமிய நூல்கள்

அப்துற் றஹீம் எழுதிய இஸ்லாமிய மதநூல்களும் வரலாற்று நூல்களும் இஸ்லாமிய இலக்கியத்தில் முதன்மைப்பங்கு வகிப்பவை. நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்து "பெருமானாரின் பொன் மொழிப்பேழை' என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளையும், "நபிமார்கள் வரலாறு' என்ற தலைப்பில் நபி ஆதம்(அலை) தொடங்கி முகமது நபி வரை 24 நபிமார்களின் வரலாற்றைத் தொகுத்து இரண்டு பாகங்களாகவும், எழுதினார். நபிகள் நாயகம் வரலாற்றை ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். விளக்க அடிக்குறிப்புகளுடன் 800 பக்கங்கள் கொண்ட இந்த நூலை கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் தமிழில் மொழிöபயர்த்துள்ளார்.

இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், 3600 பக்கங்கள் கொண்ட இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார். இது குறித்து ஜெயமோகன், “இஸ்லாமியப் பண்பாட்டை விரிவாக அறிய உதவும் மாபெரும் ஆக்கம், 1977ல் ‘அப்துற் றகீம் ‘ அவர்களால் தொகுக்கப்பட்ட இஸ்லாமிய கலைக்களஞ்சியம். நான்கு தொகுதிகள் வெளி வந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப்படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்றுவிட்டது. [1]” என்கிறார்.

காவியம்

நபிகள் நாயகக் காவியம் என்னும் செய்யுள் வடிவ வரலாற்றுக் காவியத்தை எழுதினார்

பதிப்பு

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், தனது நூல்களைப் பதிப்பிதற்காக, 1948-ல் சென்னை மண்ணடியில் ’யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ்’ என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் தனது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அவரது மருமகன் எஸ்.எம்.ஷாஜஹான் இந்தப் பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதழியல்

அப்துற் றஹீம் ‘சுதந்திர நாடு’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக சிறிதுகாலம் பணி யாற்றினார்.

விருதுகள்

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காக் போன்ற நாடுகளுக்கு அழைக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார்.

மறைவு

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், நவம்பர் 10, 1993-ல் காலமானார்.

இலக்கிய இடம்

எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், தமிழின் முதல் சுய முன்னேற்ற நூலை எழுதியவராக மதிப்பிடப்படுகிறார். இஸ்லாமிய நெறிநூல்களான ஹதீஸ்களை மொழியாக்கம் செய்தார். இஸ்லாமிய ஞானிகள் மற்றும் ஆளுமைகளின் வரலாற்றை எழுதினார். இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்தை நான்கு பாகங்களாகத் தொகுத்திருப்பது எம்.ஆர்.எம். அப்துற் றஹீமின் மிக முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது.

நூல்கள்

வாழ்க்கை வரலாறுகள்
  • அரேபியாவின் அதிபதி
  • அமெரிக்க ஜனாதிபதி ஐஸனோவர்
  • உலக மேதைகள்
  • குணத்தின் குன்று
  • கோடீஸ்வரக் கொடை வள்ளல்
  • சரவிளக்கு
  • நகரத் தலைவர்
  • ரஷ்யஞானி லியோ டால்ஸ்டாய்
இஸ்லாமிய நூல்கள்
  • அல் ஹதீஸ் பாகம் - 1
  • அல் ஹதீஸ் பாகம் - 2
  • அல் ஹதீஸ் பாகம் - 3
  • நபிகள் நாயகம்
  • நபிமார்கள் வரலாறு -இரண்டு பாகங்கள்
  • நபி ஸலவாத்தின் நற்பலன்கள்
  • இஸ்முல் அஃலம்
  • முஸ்லிம் சமுதாயச் சிற்பிகள்
  • முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்
  • முஸ்லிம் பெரியார்கள் மூவர்
  • வலிமார்கள் வரலாறு முதல் பாகம்
  • வலிமார்கள் வரலாறு இரண்டாம் பாகம்
  • வலிமார்கள் வரலாறு மூன்றாம் பாகம்
  • வலிமார்கள் வரலாறு நான்காம் பாகம்
  • வலிமார்கள் வரலாறு ஐந்தாம் பாகம்
  • விடுதலை வீரர் மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர்
  • இஸ்லாமிய கலைக்களஞ்சியம்-நான்கு தொகுதிகள்
காவியம்
  • நபிகள் நாயகக் காவியம்
சுயமுன்னேற்றம்
  • நினைவாற்றல், அறிவிற்கு ஓர் அணி
  • நெடுங்காலம் வாழ்க!
  • படியுங்கள்!! சிந்தியுங்கள்!!
  • படியுங்கள்!! சிரியுங்கள்!!
  • படியுங்கள்!! சுவையுங்கள்!!
  • பூங்குழலி
  • மகனே! கேள்!
  • மன ஒருமை, வெற்றியின் இரகசியம்
  • மனதை வெல்லுவாய்! மனிதனாகுவாய்!!
  • மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்
  • மருத்துவ மன்னர்கள்
  • சுபிட்சமாய் வாழ்க!
  • வாழ்க்கையில் வெற்றி
  • வாழ்வது ஒரு கலை!
  • வாழ்வரசி
  • வாழ்வின் ஒளிப்பாதை
  • வாழ்வின் வழித்துணை
  • வழிகாட்டும் ஒளிவிளக்கு
  • வழுக்கலில் ஊன்று கோல்
  • வள வாழ்விற்கு வழி
  • வாழ்வைத் துவங்கு!
  • விடா முயற்சி, வெற்றிக்கு வழி!
  • வியாபாரம் செய்வது எப்படி?
  • விளக்கேற்றும் விளக்கு
  • வெற்றியும் மகிழ்ச்சியும்
  • முன்னேறுவது எப்படி?
  • அன்பு வாழ்வோ! அருள் வாழ்வோ!
  • அன்புள்ள தம்பி!
  • இல்லறம்
  • இளமையும் கடமையும்
  • உன்னை வெல்க!
  • எண்ணமே வாழ்வு!
  • ஒழுக்கம் பேணுவீர்!
  • கவலைப் படாதே!
ஆங்கிலம்
  • Muhammad The Prophet

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page