under review

முரஞ்சியூர் முடிநாகராயர்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முரஞ்சியூர் முடிநாகராயர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

முரஞ்சியூர் முடிநாகராயர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். முரஞ்சியூர் என்னும் ஊரில் பிறந்தவர். முடிநாகனார் என்னும் பெயர் பிற்காலத்தில் ஏடு எழுதுபவர்களால் பாடபேதமாக முடிநாகராயர் என்று மாறியுள்ளது. முடிநாகராயர் என்ற சொல்லின் வழியாக தலை முடியில் நாகப்படத்தை அணிந்த நாகர் குலத்தலைவர் என அறிய முடிகிறது. இறையனார் களவியல் உரையில் இவரது பெயர் குறிக்கப்படுவதன் மூலமாக தலைச்சங்க காலத்தில் வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடல் புறநானூறில் 2-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. சேரமன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் நற்பண்புகளை வாழ்த்திப் பாடுவதாக பாடாண் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் 18 நாட்கள் உணவு அளித்த வள்ளன்மை கொண்டவன்.
  • நிலம், நீர், காற்று, தீ, வானம் என ஐம்பூதங்களின் இயல்பை ஒத்த வல்லமை உடையவன்.
  • பால் புளித்தல், பகல் பொழுது இல்லாமல் இருளாதல், நான்கு வேத நெறிகள் திரிபுறல் என இயற்கை மாறான சூழ்நிலைகள் நடந்தாலும் தன் நிலையில் மாற்றம் இல்லாத சிறப்புடையவன்.
  • உவமை: ஐம்பூதங்களின் வல்லமைகள் மன்னனின் ஆற்றலுக்கு உவமிக்கப்பட்டன.
  • காட்சி: இமய மலையிலும் பொதிய மலையிலும் மாலையில் சூரியன் மறைகையில் அந்தணர் மூன்று தீ வளர்த்து வேள்வி செய்வர். அவ்வேள்வி தீயின் ஒளிபடும் இடத்தில் மான்கள் பாதுகாப்பாக படுத்துறங்கும். அந்த மான்களை போல பெருஞ்சோற்று உதியனின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருப்பர்.

பாடல் நடை

புறநானூறு - 2

........................................................................
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 10:06:34 IST