under review

ஆ. சிவலிங்கனார்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பேராசிரியர் ஆ. சிவலிங்கனார்

ஆ. சிவலிங்கனார் (நவம்பர் 30, 1922 - நவம்பர் 03, 2014) தமிழறிஞர், புலவர், ஆய்வாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், எழுத்தாளர். உரை நூல்கள், திறனாய்வு நூல்கள், இலக்கண, இலக்கிய நூல்கள் எனப் பல நூல்களை எழுதிப் பதிப்பித்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அவரது தொல்காப்பிய உரை வள நூல்கள் தொகுதி தமிழின் குறிப்பிடத்தகுந்த ஆவண முயற்சியாக அறியப்படுகிறது. தொல்காப்பியச் செம்மல் உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஆ. சிவலிங்கனார், நவம்பர் 30, 1922 அன்று, கடலூருக்கு அருகிலுள்ள புது வண்டிப்பாளையம் கரையேற விட்டக் குப்பம் என்ற ஊரில், ஆறுமுக முதலியார் - பொன்னம்மாள் இணையருக்குப் பிறந்தார். கடலூர் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மேற்கல்வியை திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியாரடிகள் திருமடத்தில் படித்தார். 1940-ல், திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று தமிழில் வித்வான் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஆ. சிவலிங்கனார், மணமானவர். மனைவி மங்களம்மாள். இவர்களுக்கு ஆறு மகன்கள்; இரண்டு மகள்கள்.

கல்விப் பணிகள்

ஆ. சிவலிங்கனார், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 1941-42-ல் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1942 முதல் 1972 வரை மயிலம் சிவஞான பாலயசுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின் 1973-ல் சேலம் மோகனூர் சுப்பிரமணியம் தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.

ஆ. சிவலிங்கனார் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ஆ. சிவலிங்கனார், செந்தமிழ், தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, வீரசைவ முரசு, தமிழ் மாருதம், மக்கள் சிந்தனை போன்ற திங்கள் இதழ்களில் 200-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவை வெளியிட்ட இதழ்களில் இலக்கண, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். குறிப்பாக, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்குகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இலக்கண ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

உரை நூல்கள் - 36, கவிதை நூல்கள் - 8, ஆய்வு நூல்கள் - 8, திறனாய்வு நூல்கள் - 7, இலக்கண நூல்கள் - 2, இலக்கண உரைநடை நூல்கள் - 27 என 90-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

ஆசிரியப்பணி

ஆ.சிவலிங்கனார் தமிழாசிரியராக சிறந்து விளங்கினார். ஆ. சிவலிங்கனாரிடம் தமிழ் பயின்றவர்களுள் மயிலம் 19-வது பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார், முனைவர் வை. இரத்தினசபாபதி, முனைவர் த.பெரியாண்டவன், தெ.முருகசாமி உள்ளிட்ட அறிஞர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

பதிப்பு

ஆ. சிவலிங்கனார், 1979-87-ல் 'தொல்காப்பிய உரைவளம்' நூல் வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தொல்காப்பியச் சிறப்புப் பாயிர உரைவளம் (27 பகுதிகள்) தொடங்கிப் பல்வேறு நூல்களைப் பதிப்பித்தார்.

தொல்காப்பியப் பதிப்பின் சிறப்பு

ஆ. சிவலிங்கனாரின் தொல்காப்பியப் பதிப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது. தொல்காப்பியத்தின் 27 இயல்களுக்கும் தனித்தனியே 27 நூல்களை எழுதினார். ஒவ்வொரு தொல்காப்பிய நூற்பாவின் கீழும் பிற்கால இலக்கண நூல்களில் இடம்பெற்ற நூற்பாக்களை அளித்தார். தொல்காப்பியப் பாயிரம் மற்றும் எழுத்ததிகாரம் நூன்மரபு ஆகிய இரண்டு நூல்கள் தவிர்த்த பிற அதிகார இயல் நூல்களின் நூற்பாக்களின் கீழே, சி. இலக்குவனார், கமில் சுவலபில் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பை அளித்தார். பழைய, புதிய உரையாசிரியர்களின் உரைகளைப் பொருந்தும் வகையில் முறைப்படுத்தினார். நூலின் இறுதியில் ஆ.சிவலிங்கனாரின் கருத்துக்களும், பிறர் எழுதிய கட்டுரைகளிலும் ஆய்வு நூல்களிலும் காணப்படும் கருத்துகளும் தேவைக்கேற்ப இடம்பெற்றுள்ளன.

பொறுப்புகள்

  • சென்னைப் பல்கலைக் கழகத்தின் கல்விக்குழு உறுப்பினர்
  • சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்
  • தமிழக அரசு அமைத்த தமிழ் இலக்கண நூல் மீண்டும் உருவாக்கும் வல்லுநர் குழு உறுப்பினர்
  • தமிழக புலவர் குழு உறுப்பினர்
  • திருப்பத்தூர் தமிழ்ச்சங்க உறுப்பினர்
  • மயிலம் பொம்மபுர ஆதினப் புலவர்

விருதுகள்

  • இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் வழங்கிய 'முதுபேராளர்' விருது
  • ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது
  • மதுரை ஆதீனம் அளித்த சிவநெறிப்புலவர் பட்டம்
  • சிறந்த இலக்கிய ஆய்வாளர் விருது
  • சிறந்த தமிழறிஞர் விருது
  • சென்னை வீரசைவ முரசு திருவாசகன் விருது
  • கற்பனைக் களஞ்சிய நம்பி
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்கிய தொல்காப்பியச் செம்மல் பட்டம்

மறைவு

ஆ.சிவலிங்கனார், நவம்பர் 09, 2014 அன்று, தனது 93-ஆம் வயதில் காலமானார்.

நினைவு

ஆ.சிவலிங்கனாரின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் தி. கல்பனா தேவி எழுதினார். தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்திய ஆய்வியல் துறை மலாயாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கலைஞன் பதிப்பகம், 2015-ல், இந்நூலை வெளியிட்டது.

ஆ. சிவலிங்கனார் வாழ்க்கை வரலாறு, கலைஞன் பதிப்பகம்

ஆவணம்

ஆ.சிவலிங்கனார் எழுதிய, பதிப்பித்த நூல்களில் சில தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

ஆ. சிவலிங்கனார், சமய நூல்களைப் பதிப்பிப்பதிலும், இலக்கிய, இலக்கண ஆய்வுகளில் ஈடுபடுவதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளராக விளங்கினார். சமயம், இலக்கியம், இலக்கணம் எனப் பல்வேறு நூல்களை எழுதினார். ஆ. சிவலிங்கனாரின் இலக்கணப் பணிகளில் முதன்மையானதாக தொல்காப்பியப் பதிப்புப் பணி அறியப்படுகிறது. தமிழின் தொல்காப்பியப் பதிப்பு உரையாசிரியர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக ஆ. சிவலிங்கனார் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

உரை நூல்கள்
  • சிவஞான பாலயசுவாமிகள் நெஞ்சுவிடு தூது
  • பெரியநாயகியம்மை கலித்துறை
  • திருவெங்கைக் கலம்பகம்
  • சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்
  • சிவஞான பாலய சுவாமிகள் அட்டகம்
  • சிவஞான பாலய சுவாமிகள் பஞ்சகம்
  • சிவஞான பாலய சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி
  • திருக்கூவப் புராணம்
  • சிவஞான பாலய சுவாமிகள் பதிகம்
  • ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மும்மணிக்கோவை
  • நன்னெறி வெண்பா நாற்பது
  • ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் கீர்த்தி மாலைத்திரட்டு
  • ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
கவிதை நூல்கள்
  • தமிழ்த்தாய் திருப்பள்ளி எழுச்சி
  • மயிலம் கார்த்திகைக் கதம்பம்
  • சின்னத் தச்சூர்ப் பொன்னி மாலை
  • மயிலக் களவியல் மாலை
  • மயிலத் திருவாயிரம்
  • பாலசித்தர் பாமாலை
  • பொம்மபுரப் புராணம்
  • சிவஞான பாலய தேசிகர் வாழ்த்து
  • பல தெய்வங்களின் மீது தனித்தனிப் பதிகங்களாக 15 பதிகங்கள்
ஆய்வு நூல்கள்
  • அகத்தியர்கள்
  • எட்டாந்திருமுறை
  • மூலத்தமிழ்
  • தொல்காப்பியர் கூறும் உள்ளுறையும் இறைச்சியும்
  • மணிவாசகர் சமயமும் காலமும்
  • சிவப்பிரகாசர் நூல்களில் திருக்குறள் ஆட்சி
  • நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் நூல்களில் கற்பனைகள்
  • ஸ்ரீ சிவஞான பாலய தேசிகர் பிள்ளைத்தமிழ் நூலில் தமிழ் இலக்கண உணர்வுகள்
திறனாய்வு நூல்கள்
  • பெரியபுராணப் பெண்மணிகள்
  • சிலம்பு மணிகள்
  • வள்ளுவரைப் பற்றி
  • கட்டுரைப் பூங்கா
  • பாரியைக் கொன்றவர் யார்?
  • சிவஞான போத நூற்பாச் சொற்பொழிவு
  • சிவஞான போதச் சூத்திர விரிவுரை (வீரச் சைவச் சார்பு)
இலக்கண நூல்கள்
  • தமிழ் இலக்கண உணர்வுகள்
  • இளம்பூரணர் எழுத்துரை (விளக்கமும் குறிப்பும்)
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் நூன்மரபு
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் மொழிமரபு
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் பிறப்பியல்
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் புணரியல்
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் தொகைமரபு
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் உருபியல்
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் உயிர்மயங்கியல்
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியல்
  • தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியல்
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் கிளவியாக்கம்
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் வேற்றுமையியல்
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் வேற்றுமை மயங்கியல்
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் விளிமரபு
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் பெயரியல்
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் வினையியல்
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் இடையியல்
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் உரியியல்
  • தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் எச்சவியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் அகத்திணையியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் புறத்திணையியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் களவியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் கற்பியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் பொருளியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் உவமயியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் செய்யுளியல்
  • தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் மரபியல்
  • தொல்காப்பியச் சிறப்பு பாயிர உரைவளம்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:48:04 IST