under review

ஜி. வரதராஜன்

From Tamil Wiki
Revision as of 17:35, 20 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:இதழாசிரியர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜி. வரதராஜன் (லால்குடி ஜி. வரதராஜன்; திருக்குறள்வேள் ஜி. வரதராஜன்) (ஜனவரி 19, 1911 - ஏப்ரல் 19, 1976) எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர். 'திருக்குறள்வேள்' என்று போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

ஜி. வரதராஜன் என்னும் லால்குடி ஜி. வரதராஜன், ஜனவரி 19, 1911-ல், லால்குடியில் உள்ள கூகூரில், எல்.என்.குருநமசிவாயப் பிள்ளை - ருக்மணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருச்சி தேசியக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். அ. நடேச முதலியார், ஆர். பஞ்சநதம் பிள்ளை, முத்து சு. மாணிக்கவாசக முதலியார், சி. அருணை வடிவேல் முதலியார், சிவயோகி மா. இரத்தின சபாபதி பிள்ளை போன்ற சைவப் பேரறிஞர்களை வீட்டுக்கு வரவழைத்தும், தாமே நேரில் சென்றும் பன்னிரு திருமுறைகளையும், பதினான்கு சாத்திரங்களையும் கற்றார்.

தனி வாழ்க்கை

ஜி. வரதராஜன், திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிச் செயலாளராக நாற்பது ஆண்டுகள் பணியாற்றினார். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.

ஜி. வரதராஜன்

இலக்கிய வாழ்க்கை

ஜி. வரதராஜன் தொடக்கத்தில் திருக்குறள் மேல் ஈடுபாடு கொண்டு அதற்கு உரை எழுதினார். திருக்குறள் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார். தொடர்ந்து திருவாசகம் தொடங்கி திருமந்திரம் வரை பல நூல்களுக்கு உரை எழுதினார். வங்கியில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்குத் தக்க தமிழ் கலைச்சொற்களை உருவாக்கி வெளியிட்டார்

இதழியல்

ஜி. வரதராஜன், திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றி மட்டுமே கட்டுரைகள் வெளியிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் 'திருவள்ளுவர்' என்ற மாத இதழை 1950-ல் வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் நடத்தினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

ஜி. வரதராஜன், திருச்சி மாவட்டத்தில் 'திருக்குறள் கழகம்' என்ற அமைப்பை நிறுவி மாவட்டம் தோறும் திருக்குறள் பரவ ஏற்பாடு செய்தார். 1966-ல் திருச்சியில் சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டு விழாவைப் பொறுப்பேற்று நடத்தினார். 1970-களில் பத்தாண்டுகள், லால்குடியில் ஆண்டுதோறும் 15 நாள் சைவ சித்தாந்த சாத்திர வகுப்புகளை நடத்தினார். தான் படித்த தேசியக் கல்லூரியில் சைவ சித்தாந்தத் துறை நிறுவ பத்தாயிரம் ரூபாயும், தன் நூலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சைவ நூல்களையும் வழங்கினார். தேசியக் கல்லூரியில் சைவ சித்தாந்தம் பாடத்திட்டத்தில் இடம்பெறக் காரணமானார்.

பெண்ணாகடத்தில் உள்ள மெய்கண்டார் கோயில் திருப்பணி செய்யவும், ஆண்டு முழுவதும் பூஜை நடத்தவும் நிதி வழங்கினார். திருவானைக்கா ஆலய அறங்காவலர் குழுத் தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்றி ஜூலை 5, 1970 அன்று குடமுழுக்கு நடத்தினார். அதனையொட்டி திருவானைக்காப் புராணத்திற்கு உரை எழுதி வெளியிட்டார்.

பொறுப்பு

  • திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்
  • திருவானைக்கா ஆலய அறங்காவலர் குழுத் தலைவர்

விருதுகள்

தருமை ஆதினம் 25-வது குருமகா சந்நிதானம் வழங்கிய 'திருக்குறள் வேள்' விருது

மறைவு

ஜி. வரதராஜன், ஏப்ரல் 19, 1976 அன்று காலமானார்.

நினைவு

லால்குடி பெரும்புலவர் ப. அரங்கசாமி, 1977-ல் 'திருக்குறள்வேள் வரதராசர் தமிழ்விடு தூது' என்ற நூலை இயற்றினார்.

மதிப்பீடு

ஜி. வரதராஜன் திருக்குறளுக்கு மட்டுமல்லாமல், சிவஞானபோதத்துக்கும், திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களுக்கும் உரை எழுதியவர். "உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றும் 'பிரஸ்தானத் திரயம்' என்று வேதாந்த உலகில் வழங்கப்பெறும். தமிழில், சைவத்தில் இதுபோன்ற அமைப்பு இல்லை. எனினும் வள்ளலார் ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் ஆகிய மூன்றையும் வள்ளலார் பிரஸ்தான நூல்களாக, பிரமாண நூல்களாக எடுத்துக் கொண்டுள்ளார். இம்மூன்று நூல்களுக்குமே உரைகண்ட பெருமைக்குரியவர், சிறப்புக்குரியவர் லால்குடி பெரியவர் குரு வரதராஜப்பிள்ளை அவர்கள் என்று ஊரன் அடிகள் குறிப்பிட்டார்.

"இவ்வாசிரியர் வெளியிட்டிருக்கும் திருமந்திர உரை தனிச்சிறப்போடு மிளர்கிறது. மற்ற சில உரைகளைப் படித்துவிட்டு இவ்வாசிரியர் எழுதிய உரையைப் படிக்கும்போது, இருட்டுக்குள்ளிருந்து வெளிச்சத்துக்கு வந்தது போன்ற தெளிவும், நன்றியுணர்வும் நமக்கு ஏற்படுகின்றன என்றார் நீதியரசர் எஸ். மகராஜன்.

நூல்கள்

  • திருக்குறள் உரை விளக்கம்
  • திருவாசகம் விரிவுரை
  • திருமந்திரம் உரை
  • சிவஞானபோதம் உரை
  • திருமந்திர நெறி
  • திருவானைக்கா புராண உரை

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2025, 13:58:17 IST