under review

அ. ம. சத்தியமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 17:38, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சத்தியமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சத்தியமூர்த்தி (பெயர் பட்டியல்)
முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன் தளம்)

அ. ம. சத்தியமூர்த்தி (பிறப்பு: ஏப்ரல் 21, 1954) தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர். அரிய நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார். நாட்டார் இலக்கியங்களைத் தொகுத்தார். சதாசிவப் பண்டாரத்தார் நூற்றாண்டு விழா, மயிலை சீனி.வேங்கடசாமி நூற்றாண்டு விழா போன்ற நூற்றாண்டு விழாக்களைப் பொறுப்பேற்று நடத்தினார். பல இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

பிறப்பு, கல்வி

அ. ம. சத்தியமூர்த்தி, ஏப்ரல் 21, 1954 அன்று, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள அம்மா சத்திரத்தில் அ.மகாலிங்கப் படையாட்சியார் - அஞ்சலை அம்மாள் இணையருக்குப் பிறந்தார். அம்மாசத்திரம் ஆரம்பப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். தேப்பெருமாள் நல்லூர் நடுநிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வி படித்தார். குடந்தை சிறியமலர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியும், குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் புதுமுக வகுப்பும் பயின்றார். அதே கல்லூரியில், தமிழில், இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் முனைவர் பொற்கோ தலைமையில் 'தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றார். 'தமிழ் நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் துறையில் ஆய்வு செய்து சான்றிதழ் பெற்றார்.

தனி வாழ்க்கை

அ. ம. சத்தியமூர்த்தி மணமானவர். மனைவி: பானுமதி. இவர்களுக்கு செந்தமிழ்ச் செல்வி, அன்பரசி என இரு மகள்கள், மகேந்திரன் என்றொரு மகன்.

கல்விப் பணிகள்

அ. ம. சத்தியமூர்த்தி, இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். விழுப்புரம் அரசினர் கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தார். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு தன் பணிக் காலத்தில் முழுநேர எம்.பில் தமிழ் வகுப்பைக் கொண்டுவந்தார். முழுநேர முனைவர் பட்ட ஆய்வு மையமாகத் தமிழ்த் துறையை உயர்த்தினார். 2012 முதல் திண்டிவனம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.

அ. ம. சத்தியமூர்த்தி, வழிகாட்டலில் 10-க்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றனர். 25-க்கும் மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றனர்

அ.ம. சத்தியமூர்த்தி நூல்
அ.ம. சத்தியமூர்த்தி தொகுப்பு நூல்

இலக்கிய வாழ்க்கை

அ. ம. சத்தியமூர்த்தி ஆய்விதழ்களிலும், மலர்களிலும் இலக்கியம், நாட்டுப்புறவியல், வரலாறு தொடர்பாகப் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். முனைவர் சத்தியமூர்த்தியின் பங்களிப்பு பெரும்பாலும் தமிழறிஞர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும், ஆய்வுப்பணிகளையும் குறித்து எழுதப்பட்ட நூல்கள்தான்.

சத்தியமூர்த்தி பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார். 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 25-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி சதாசிவப் பண்டாரத்தார் நூற்றாண்டு விழா, கு.கோதண்டபாணி நூற்றாண்டு விழா, ஆதிகேசவ நாயகர் நூற்றாண்டு விழா, மயிலை சீனி.வேங்கடசாமி நூற்றாண்டு விழா, பாவாணர் நூற்றாண்டுக் கருத்தரங்கு உள்ளிட்ட பல இலக்கிய நிகழ்வுகளைப் பொறுப்பேற்று நடத்தினார். அரசு கல்லூரி ஆசிரியர் கழக உறுப்பினாரக இருந்து ஆசிரியர்களின் மேம்பாட்டுக்காக நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றார்.

பொறுப்பு

  • கவின் கலை மன்றப் பொறுப்பாசிரியர்
  • தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக உறுப்பினர்

விருதுகள்

  • கண்ணியம் இதழ் அளித்த 'நாட்டுப்புற நல்லறிஞர்' பட்டம்
  • 'கண்ணியச் செம்மல்' பட்டம்
  • தகடூரான் தமிழ் அறக்கட்டளையினர் அளித்த 'ஆய்வு வேந்தர்' விருது

ஆவணம்

முனைவர் அ. ம. சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் கோ. பவானி எழுதினார். இந்நூலை 2015-ல், கலைஞன் பதிப்பகம், தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆய்வியல் துறை, மலாயாவுடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புறவியல், பதிப்பியல் போன்ற துறைகளில் ஆர்வம்கொண்டு செயல்பட்டார். தமிழ் உலகம் மறந்து போன பல தமிழறிஞர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை மிக விரிவாக ஆவணப்படுத்தியதும், நாட்டார் இலக்கியங்களைத் தொகுத்ததும் அ.ம. சத்தியமூர்த்தியின் குறிப்பிடத்தகுந்த சாதனைப் பணியாக மதிப்பிடப்படுகிறது.

நூல்கள்

கட்டுரை/ஆய்வு நூல்கள்
  • தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்வும் பணியும் - 1992
  • தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள் - 1994
  • தியாகச் செம்மல் எல்.கிருஷ்ணசாமி பாரதியார் - 1995
  • தமிழ் நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு - 1997
  • திருப்புறம்பயத் தமிழறிஞர் இரா. கிருஷ்ணமூர்த்தி - 1997
  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் பு.ம.ஆதிகேசவ நாயகர் - 1999
  • தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு - 2000
  • தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்(விரிவாக்கப் பதிப்பு) - 2001
  • ஒடுக்கப்பட்டோர் உரிமைப்போரில் சமூகநீதிக் காவலர் - 2002
  • குடந்தைக் கல்லூரித் தமிழறிஞர்கள் - 2004
பதிப்பித்த நூல்கள்
  • ஆய்வுலகில் பண்டாரத்தார் பணிகள் - 1992
  • தி.வை.சதாசிவப் பண்டாராத்தார் ஆய்வுக்கட்டுரைகள் - 1998
  • மன்னான் சின்னாண்டிக் கதைப்பாடல் - 1999
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய அந்தாதி இலக்கியம் - ஓர் ஆய்வு (கமலாலயனுடன் இணைந்து பதிப்பித்தது) - 2024

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 12:16:57 IST