கலைமகள் பிள்ளைத்தமிழ்
- கலைமகள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலைமகள் (பெயர் பட்டியல்)
- பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பிள்ளைத்தமிழ் (பெயர் பட்டியல்)
கலைமகள் பிள்ளைத்தமிழ் (இருபதாம் நூற்றாண்டு) சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. கலைமகள் மீது பாடப்பட்டது. இந்நூலை இயற்றியவர் கி. வேங்கடசாமி ரெட்டியார். இந்நூலை ஆர். பிரபாகரன், ஆய்வு செய்து 1992-ல் வெளியிட்டார்.
பதிப்பு
பூதூர் வித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியாரால் இயற்றப்பட்ட நூல், கலைமகள் பிள்ளைத்தமிழ். இந்நூலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த நிதி உதவியுடன் ஆய்வு செய்து பேராசிரியர் இரா. பிரபாகரன், டிசம்பர் 1992-ல் பதிப்பித்து வெளியிட்டார்.
நூல் அமைப்பு
கலைமகள் பிள்ளைத்தமிழின் தோற்றம், அதன் சிறப்பு, நூலாசிரியர் வரலாறு ஆகியனவற்றுடன் கலைமகள் பிள்ளைத்தமிழ் நூலந்தொடங்குகிறது. முதல் பருவமாகிய காப்புப் பருவத்தின் முன் அமைக்கப்பட்ட 'பழிச்சினபரவல்' என்னும் பகுதி ஆசிரியரின் வைணவப் பற்றினைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்த காப்புப் பருவத்தில் திருமால், சிவன் முதலிய தெய்வங்களுக்குரிய பாடல்கள் இடம்பெற்றன.
பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கேற்ற வகையில் காப்புப்பருவம், செங்கீரைப்பருவம், தாலப்பருவம், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம், வாராணைப்பருவம், அம்புலிப்பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், பொன் ஊசற் பருவம் எனப் பத்துப் பருவங்களும் இடம்பெற்றன.
ஒவ்வொரு பருவத்திலும் பத்துப்பாடல்களும் வாரானைப் பருவத்தில் மட்டும் பதினொன்று பாடல்களும் உள்ளன. காப்புச் செய்யுள் ஒன்றும் பழிச்சினர்பரவலில் ஒன்பது பாடல்களும் உள்ளன. ஆக மொத்தம் 111 பாடல்கள் கலைமகள் பிள்ளைத்தமிழ் நூலில் இடம்பெற்றன.
நூல் தோற்றம்
கலைமகள் வழிபாட்டில் ஆர்வமுடைய கி. வேங்கடசாமி ரெட்டியார், சரஸ்வதி பூசை நன்னாளில் பிறந்த தன் குழந்தைக்கு 'சரசுவதி' என்று பெயரிட்டு வளர்த்தார். அக்குழந்தை நோய்வாய்ப் பட்டதால், தன் மகளின் நோயினை நீக்கியருளும்படி கலைமகளை வேண்டி, ஒரு நாளைக்கு ஒரு பருவம் வீதம் பத்துப் பருவங்களாகப் பிள்ளைத்தமிழ் பாடினார். அதுவே கலைமகள் பிள்ளைத்தமிழ்.
உள்ளடக்கம்
கலைமகள் பிள்ளைத்தமிழ் நூல், கம்பரின் 'சரஸ்வதி அந்தாதி', குமரகுருபரரின் 'சகலகலாவல்லி மாலை' ஆகிய நூல்களைப் பின்பற்றிப் பாடப்பட்டது. இந்நூலில் கலைமகளின் சிறப்பும் பெருமையும் போற்றப்பட்டுள்ளன. ஆழ்வார்கள், ஆசாரியர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. சமய புராணச் செய்திகளும் ஆங்காங்கு இடம் பெற்றன.
கம்பர், குமரகுருபரர் முதலிய புலவர்களின் வரலாறு, தமிழ் நூல்களின் சிறப்பு, கம்பராமாயணத்தின் சிறப்பு, ஆழ்வார்கள் உணர்த்திய மெய்யுணர்வுப் பொருள்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றன.
கலைமகள் பிள்ளைத்தமிழில் அமைந்த பாடல்கள் அனைத்தும் தமிழுக்குச் சிறப்பாக உரிய ஓசை சந்த இன்பம், தன்மை, உவமை, உருவகம், சிலேடை முதலிய அணிகள், இயற்கை வருணனைகள் கொண்டதாய்ப் பாடப்பட்டுள்ளன.
பாடல் நடை
காப்புப் பருவம்: திருமகள் துதி
திரைபாற் கடலை மதித்திடுநாள்
தேவர் தமதாருயிர் வழங்கும்
சீரர் அமுத கும்பமொடும்
சீத முறுவெண் மதியினொடும்
கரைப்பாற்கண்டுகளி கொண்ட
கமல நாபி யம்பகவன்
கவினார் அகலத் தகலாத
கருணை வடிவை மிகத்துதிப்பாம்
முத்தப் பருவம்
விளம்பும் மற்றை முத்தமெலாம்.
மெலிந்து மிகவும் கடைப்படுமே!
கலைஆர் அமுதே! அவை எல்லாம்
கருதேம் முத்தம் தருகவே
நீராடற் பருவம்
சாதியொடு சமயமும் செல்வமும் என உலகு
சாற்றவரும் இம்மூன்றனால்
தமதுறு வழக்கமும் மேனியும் பெருமையும்
தான் அறியலாகும் என்றே
தரின் உரைத்தபிடி வாதரின் மயக்கினில்
அகப்பட்டு மெய் உணர்விழந்து
அவர் செயும் கொடுமையால் துன்புற்றகீழ்சாதி
அன்னிய மதம் ஏழ்மை என்று
ஓதும் இப்பிரிவினால் துன்புறூ உம் இந்நிலை
யுணர்ந்துணர்ந்துள்ளம் அமிந்தே
உற்ற இத்துயரும் துயர்க் காரணங்களும்
ஒழிவதென் றென்று நைந்தே
மேதையர் விடுத்த கண்ணீரின் உண்ணீர்மைபெற
வெள்ளநீ ராடி யருளே
மதிப்பீடு
'கலைமகள் பிள்ளைத்தமிழ்' இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும், பிணி நீங்க, கலைமகளை வேண்டித் துதித்துப் பாடப்பட்ட இலக்கிய நூலாகவும் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2025, 09:49:12 IST