second review completed

மள்ளனார்

From Tamil Wiki
Revision as of 08:15, 13 November 2025 by Jayashree (talk | contribs)

மள்ளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

மள்ளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மள்ளனார் என்று வேறு இரு புலவர்கள் இருந்தாலும் இவர் வேறு என்று கருதுகிறார்கள்.

இலக்கிய வாழ்க்கை

மள்ளனார் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 72-வது பாடலாகவும் நற்றிணையில் 204-வது பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய இருபாடல்களும் குறிஞ்சித் திணையில் அமைந்தவை. குறுந்தொகை பாடலில் தலைவியை கண்டதனால் தனக்குள் ஏற்பட்ட இனிமையை தலைவன் தன் தோழனிடம் சொல்கிறான். நற்றிணை பாடலில் தலைவியை கூடி பிரிந்த தலைவன் அவள் வீட்டிற்கு செல்வதை ஏக்கத்துடன் பார்த்து தோழியிடம் தனது தவிப்பை கூறுகிறான்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை - 72
  • மலைகள் சூழப்பெற்ற தினை வயலில் இடையிடையே பருத்திச் செடியை விதைத்து பயிராக்குவார்கள்.
  • இளமகளிர் தினைப்புனத்தை காவல் காக்கும் பணியாற்றுவர்
  • உவமை: தலைவியின் இயல்பும் தோற்றமும் பூவை ஒத்து இருந்ததாக உவமிக்கப்பட்டுள்ளது.
நற்றிணை - 204
  • இளமகளிர் தினைப்புனத்திற்கு காவல் இருப்பர். தினைப்புனத்தை சுற்றியிருக்கும் மலையில் அருவிகள் நிரம்பி வழியும். அருவி கரையோரம் இயற்கையான குளங்கள் இருக்கும். அவற்றின் குவளை மலர்கள் காணப்படும். இளமகளிர் தழையால் செய்யப்பட்ட ஆடையை அணிந்திருப்பர்.
  • காதல் கொள்ளும் ஆடவரும் இளமகளிரும் அருவி கரை குளத்தில் நீராடி கூடி மகிழ்ந்து மலர்சூடி இனிமையில் ஆழ்வர்.
  • மலைக்காட்டில் ஆண் மானுடன் கூடி முடித்த பெண் மானானது தனித்து விலகி மூங்கில் காடுகளுக்கு அப்பால் செல்லும்.
  • உவமை: தலைவனுடன் மகிழ்ந்திருந்த தலைவி தனது ஊருக்கு திரும்பி செல்வது பெண்மானின் செயலை ஒத்திருந்தது.

பாடல் நடை

குறுந்தொகை - 72

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது

பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே

நற்றிணை - 204

  • திணை: குறிஞ்சி
  • கூற்று:பின்னின்றதலைமகன்ஆற்றானாய்,தோழிகேட்பத்தன்நெஞ்சிற்குச்சொல்லியது.

தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?
இன் சொல் மேவலைப் பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.