பாரதி வள்ளிப்பாட்டு விவாதம்
பாரதி வள்ளிப்பாட்டு விவாதம் ( ) பாரதியார் எழுதிய வள்ளிப்பாட்டு என்னும் பாடல் வெறும் உடற்காமத்தை முன்வைக்கும் மலினமான படைப்பு என்று புதுமைப்பித்தன் எழுதியதற்கு கு.ப.ராஜகோபாலன் மறுமொழி உரைக்க உருவான விவாதம்.
புதுமைப்பித்தன் கருத்து
15 நவம்பர் 1937 ல் மணிக்கொடி இதழில் யாத்ரா மார்க்கம் பகுதியில் புதுமைப்பித்தன் எழுதிய புத்தக மதிப்புரையில் சி.சுப்ரமணிய பாரதி எழுதிய படைப்புகளை பாரதி பிரசுராலயம் வெளியிட்ட நூல்களில் உள்ள பாடபேதங்களைக் கடுமையாகக் கண்டித்து எழுதினார். பாரதி பிரசுராலயம் வெளியிட்ட நூல்களை பாரதி உயிருடனிருந்தபோது ஞானபாநு பிரசுரம் வெளியிட்ட நூல்களிலுள்ள பாடல்களுடன் ஒப்பிட்டு அடிப்படையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும், அவை உள்நோக்கம் கொண்டவையும் பாரதியின் நோக்கத்தைத் திரிப்பவையும் ஆகும் என்றும் குற்றம்சாட்டினார்.
அந்தக் கட்டுரையில் சிட்டி எழுதிய கட்டுரையை புதுமைப்பித்தன் கண்டித்தார்.
“ஸ்ரீ பெ. கோ. சு, ‘ஸ்வசரிதையும் பிற பாடல்களும்’ என்ற சமீபத்திய பாரதி பிரசுராலய பிரசுரத்தை மணிக்கொடியில் விமர்சனம் செய்யும் பொழுது ‘இந்தப் புத்தகத்தில் இரண்டு வள்ளிப் பாட்டுகளைச் சேர்த்ததற்காக நாம் நன்றி செலுத்த வேண்டும். அவையிரண்டும் பாரதியின் கற்பாைன யின் உச்ச நிலையைக் காட்டும் சின்னங்கள்’ என்கிறார். கலவியை, வெறும் சதையுணர்ச்சியை இலக்கிய மாக்க முயலும் இப்பாட்டுகளுக்கும் ‘விறலி விடு தூது, பால்ஜாக் கதைகளில் சில, லேடி சாட்டர்லியின் புருஷன் ரகத்தைச் சேர்ந்த வெறுங்காம நூல்களுக்கும் வித்தியாசமேயில்லை.
'மனோபலத்திலும் உணர்ச்சியிலும் அவையிரண்டும் ஸ்காட்லாந்து கவி ராபர்ட் பர்ன்ஸின் காதற் பாட்டுகளை நினைவூட்டுகின்றன’ என்று கூறுகிறார். வேறு என்ன சொல்வது! செளகரியமான உண்மைகளைக் காணக்கூடிய தாராள மனம் படைத்தவர்களுக்கு என்னதான் முடியாது! - இந்த வீண் பிதற்றல் விமர்சனங்களுக்கு ஒரு முடிவு கண்டால்தான், உருப்படியான வேலைக்கு வழியுண்டு'
என்று புதுமைப்பித்தன் கூறினார்.
கு.ப.ராஜகோபாலன் எதிர்ப்பு
மணிக்கொடியின் அடுத்த மாத இதழில் கு.ப. ராஜகோபாலன் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
'உங்களுடைய விமரிசனத்தையோ, அபிப் பிராயத்தையோ நான் ஒத்துக் கொள்ள வேண்டுமென்பது கிாைடயாது. உங்களுடைய அபிப்பிராயத்தை மறுக்க, நன்றாக எதிர்க்க எனக்குப் பூர்ண உரிமையுண்டு. உங்கள் அபிப்பிராயம் பிசகென்பதோடு, காரணங்கள் கூறி என் கட்சியையும் காரணங்களால் ஸ்தாபிக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் நான், ‘நீங்கள் எழுதுவது விமரிசனமல்ல. நான் எழுதுவதுதான் விமரிசனம்; நீங்கள் எழுதுவது பிதற்றல்; நான் எழுதுவது உண்மை; நீங்கள் முட்டாள், நான்தான் விஷயம் அறிந்தவன்’ என்று கூறுவது விமரிசனமாகாது. அது நியாயம் ஆகாது, முறையும் ஆகாது. அது விமரிசனமே இல்லை. அது கோபம், வசை எனத்தான் தோன்றுகிறது.' என்று கு.ப.ராஜகோபாலன் சொன்னார்.
கு.ப.ராஜகோபாலன் ‘புதுமைப்பித்தன் பாரதியின் வள்ளிப் பாட்டுகளை ‘கலவியை, வெறும் சதையுணர்ச்சியை, இலட்சியமாக்க முயலும் பாட்டுகள்' என்கிறார். எப்படியென்று தெரியவில்லை' என்று எழுதினார்.
ந.சிதம்பரசுப்ரமணியம் எதிர்ப்பு
“எனது நண்பர் புதுமைப்பித்தன் 'தர்மயுத்தம்' புரியவில்லை. வேண்டுமென்றே எதிர் விவகாரத்திற்கு வர்ணம் பூசிப் பூச்சாண்டியாக்கியிருக்கிறார்" என்று ந. சிதம்பர சுப்பிரமணியன் புதுமைப்பித்தனுக்கு மறுப்பு தெரிவித்தார்.
புதுமைப்பித்தன் எதிர்மறுப்பு
'வெறும் சதையுணர்ச்சியைப் பிரமாதப்படுத்தும் பாட்டை நமக்குப் பிரியமானவர் என்பதற்காக, சராசரித் தமிழ் வாசகனுக்குத் தெரியாத ஒரு கவிஞனுக்கு ஒப்பிட்டு அதனால்தான் அவர் பெரியவர் என நிரூபிக்க முயல்வது பிதற்றலல்லாமல் வேறென்ன’ என்று புதுமைப்பித்தன் அதற்கு அடுத்தமாத மணிக்கொடி இதழில் பதில் அளித்தார். 'அடுத்தபடியாக ‘வள்ளிப்பாட்டு’. அதில் எங்கு சதையுணர்ச்சியிருக்கிறது என்று கேட்கிறார் ஸ்ரீ கு.ப.ரா. இக்கேள்வியை நான் இவரிடம் எதிர்பார்க்கவில்லை. அதில் வேறு என்ன இருக்கிறது என்ற கேள்வியைத் திருப்பிப் போட்டுப் பேசாதிருந்து விடலாம். நான் அப்படிச்செய்யவிரும்பவில்லை.” என்று புதுமைப்பித்தன் வாதிட்டார்.