under review

சதீஷ்குமார் சீனிவாசன்

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சீனிவாசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சீனிவாசன் (பெயர் பட்டியல்)
சதீஷ்குமார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சதீஷ்குமார் (பெயர் பட்டியல்)

To read the article in English: Satish kumar Srinivasan. ‎

சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசன் (பிறப்பு:பிப்ரவரி 21, 1997) தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். உயிர்மை இணைய இதழின் உதவி ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சதீஷ்குமார் சீனிவாசன் பிப்ரவரி 21, 1997-ல் சீனிவாசன், சம்பூரணம் இணையருக்கு கும்பகோணம் அருகே திருவைக்காவூர் மேலமாஞ்சேரியில் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். திருவைக்காவூர் மேலமாஞ்சேரி நடு நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். கும்பகோணம் பாபநாசம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு வரை பயின்றார். திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஆயத்தஆடை நிறுவனங்களில் பணிபுரிந்தார். சென்னை உயிர்மை இணைய இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய ஆதர்சங்களாக மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, பெருந்தேவி, நாஞ்சில் நாடன், ஜி.கார்ல் மார்க்ஸ், கோபிகிருஷ்ணன், ஆத்மாநாம், அ. மார்க்ஸ், நீட்சே, ஃபூகோ, ழாக் தெரிதா, ழான் பால் சார்த்தர் போன்றோரைக் குறிப்பிடுகிறார். நிசப்தன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவந்த சதீஷ்குமார் சீனிவாசனின் முதல் கவிதைத் தொகுப்பு 'உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்' உயிர்மை பதிப்பகம் வெளியீடாக 2021-ல் வந்தது.

விருதுகள்

2023-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது

இலக்கிய இடம்

"சதீஷ்குமார் சீனிவாசனின் இக்கவிதைகள் அனைத்திலுமே ஓர் இலையுதிர்காலத்து உளச்சித்திரத்தை அடைந்துகொண்டிருந்தேன். உயரமான கட்டிடங்களின் நிழலைத் தாளமுடியாமல் ஏந்தி நின்றிருக்கும் அசையமுடியாத இலையை அசைக்கும் காற்று போல சில சொற்கள் எழுந்து கவிதையாகின்றன." என எழுத்தாளர் ஜெயமோகன் சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளை மதிப்பிடுகிறார்.

நூல்கள் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்
  • உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்.
  • பாதி நன்மைகள்
  • நிலங்களற்ற சூரியன்

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:01 IST