திருமயிலை சண்முகம் பிள்ளை
- சண்முகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சண்முகம் (பெயர் பட்டியல்)
- திருமயிலை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருமயிலை (பெயர் பட்டியல்)
மகாவித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளை (1858 -1905) தமிழறிஞர், தமிழ்ப் பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையின் மூலத்தையும் கம்ப ராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தையும் முதன்முதலில் அச்சிட்டு வெளியிட்டார். சென்னையின் பௌராணிகர் என்று சொல்லத்தக்க அளவு சென்னையை ஒட்டிய ஆலயங்களைப் பற்றிய சிற்றிலக்கியங்களையும் புராணங்களையும் பாடியிருக்கிறார். மயிலை சீனி.வேங்கடசாமியும் பேராசிரியர் க. நமச்சிவாய முதலியாரும் இவரது மாணவர்கள்.
பிறப்பு, கல்வி
1858-ல் சென்னை குயப்பேட்டையில் சண்முகம் பிள்ளை பிறந்தார். சண்முகம் பிள்ளையின் தந்தையாருக்கு மனைவியர் இருவர். மூத்த மனைவியின் மகன் சண்முகம் பிள்ளை. சண்முகம் பிள்ளையின் தந்தையார் வைணவ சமயத்தவராயினும் முருகன் மேலுள்ள பக்தியால் தன் மகனுக்கு சண்முகம் என்று பெயரிட்டார்.
சிவஞான சுவாமிகள், திருத்தணிகை கச்சியப்ப முனிவர், அஷ்டாவதானம் சபாபதி முதலியார், திருமயிலை சண்முகம் பிள்ளை ஆகியோர் ஆசிரியர்- மாணவர் வரிசையில் அமைந்தவர்கள் என மயிலை சீனி.வேங்கடசாமி அவருடைய ’தமிழாசிரிய மாணவ வழிமுறை விளக்கம்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் சிறிது நாள் கல்வி பயின்ற சண்முகம் பிள்ளை அஷ்டாவதாதனம் சபாபதி முதலியாரிடம் மாணவராகி தமிழ் கற்றார். சென்னை கோமளேசுரன் பேட்டையில் வாழ்ந்த இராசகோபால பிள்ளை என்பவரிடம் இலக்கணம் கற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் மகாவித்துவான் என்னும் பட்டம் சூட்டப் பெற்றார். இராசகோபால பிள்ளை இவர் பெயரை சீனிவாச சண்முகம் பிள்ளை என்று மாற்றினார் ஆனால் பின்னாளில் திருமயிலையில் வந்து தங்கியபின் தன் பெயரை திருமயிலை சண்முகம்பிள்ளை என்று வைத்துக்கொண்டார்.
தனிவாழ்க்கை
திருமயிலை சண்முகம் பிள்ளை தொண்டமண்டலம் துளுவவேளாளர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். புனித பால் உயர்நிலைப் பள்ளி, சாந்தோம் புனித தோமையர் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழாசிரியராக இருந்து ஓய்வுபெற்றார். தமிழறிஞர் கா. நமச்சிவாய முதலியார் இவருடைய மாணவர். இவரிடம் மயிலை சீனி. வேங்கடசாமி தமிழ் கற்றார். சென்னை மயிலாப்பூர், காரணீஸ்வரர் கோயில் தெருவில் வாழ்ந்தார். இவருக்கு வாரிசுகள் இல்லை.
அமைதியான சுபாவமுள்ள திருமயிலை சண்முகம் பிள்ளை தனது மாணவர்களின் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். மாணவர்களும் இவரைத் தந்தைக்கு நிகராகக் கருதினார்கள். சண்முகம் பிள்ளை மறைந்தபின் இவரது மனைவியை இவரது மாணவர்களில் ஒருவரான பேராசிரியர் கா. ர. நமச்சிவாய முதலியார் கடைசிவரை பாதுகாத்தார்.
இலக்கியப்பணி
மயிலை சண்முகம்பிள்ளை தமிழ் பதிப்பு முன்னோடிகளில் ஒருவர். விவேகசிந்தாமணி, ஞானபோதினி இதழ்களில் எழுதியுள்ளார் என வீ.அரசு குறிப்பிடுகிறார்.
பதிப்புப்பணி
திருமயிலை சண்முகம் பிள்ளை 1894-ல் முதன்முதலில் மணிமேகலை மூலத்தை மட்டும் ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார். இத்தகவல் உ.வே.சாமிநாத அய்யரின் 'என் சரித்திரம்' நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவை, மச்சபுராணம் ஆகிய நூல்களையும் பதிப்பித்தார். கம்பராமாயணத்திற்கு ஏதும் உரைகள் இல்லாத காலத்தில் முதன் முதலாக அயோத்தியா காண்டத்திற்கு உரை எழுதி வெளியிட்டார்.
உரைகள்
மயிலை சண்முகம்பிள்ளை கந்தபுராணம் உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதியிருக்கிறார். பொன்வண்ணத்தந்தாதி, கைலாய ஞான உலா ஆகிய நூல்களின் உரையாசிரியராகப் பணிபுரிந்தார்.
இயற்றிய நூல்கள்
மயிலை சண்முகம் பிள்ளை வடதிருமுல்லைவாயிற் புராணம் என்னும் 23 படலங்களில் 1,458 பாடல்கள் கொண்ட தலபுராணக் காவியத்தை இயற்றினார். திருமயிலை யமக அந்தாதி, வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் போன்ற நூல்களை எழுதினார் எனக் கூறப்படுகிறது.
விவாதம்
மயிலை சண்முகம் பிள்ளை அருட்பா மருட்பா விவாதத்தில் கலந்துகொண்டு 1868-ல் 'திருவருட்பா தூஷண பரிகாரம்' என்னும் நூலை வெளியிட்டார். முனைவர் ப.சரவணன் தொகுத்துள்ள 'அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு' எனும் நூலில் இவரின் கண்டனமும் இடம்பெற்றுள்ளது.
இலக்கிய இடம்
மணிமேகலையைப் பதிப்பித்தவர் என்னும் வகையில் பதிப்பியக்க முன்னோடியாக திருமயிலை சண்முகம் பிள்ளை கருதப்படுகிறார். சென்னையின் புராணிகர் என்றே சொல்லத்தக்க சண்முகம் பிள்ளை சென்னையை ஒட்டியிருக்கும் ஆலயங்களை பற்றிய புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் எழுதியிருக்கிறார். வடதிருமுல்லைவாயிற் புராணம் திருமயிலை சண்முகம் பிள்ளை எழுதியதாகக் கருதப்படும் நீண்ட தலபுராண காவியம்.
சந்த ஒழுங்குடன் கூடிய பாடல்கள் இவர் பெயரில் வழங்குகின்றன
ஆலம் அடங்கும் களத்தன், எம்மான், அருளாளன், அன்பர்
சீலம் அறிந்து உதவும் வடமுல்லைத் திருநகரான் -
பால் அமரும் தெய்வ ஆரமுதே! நின்பரங்கருணைக்
கோலம் இறைஞ்ச அருள்வாய்! கொடியிடைக் கோமளமே!
(வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள்)
இறப்பு
திருமயிலை சண்முகம் பிள்ளை 1905-ம் ஆண்டு மறைந்தார். பேராசிரியர் கா. ர. நமச்சிவாய முதலியார் சண்முகம் பிள்ளையின் மறைவிற்காக பாடிய இரங்கற்பா
அரிந்தமன்சீர் எடுத்துரைக்கும் காப்பியத்தின்
அரிவரிதாய் அகத்தில் உற்ற,
விரிந்தபொருள் எவ்வெவரும் இறும்பூது
கொளப்புகம் மேகக் கோயே,
பரிந்தமனத் தன்னையினும் இனிதாகப்
பன்னிலூம் படிற னேற்குத்
தெரிந்திடச்சொற் றெனையாண்ட சண்முகநற்
பெயர்குரிய சீரி யோயே
நூல்கள்
பதிப்பு
- மணிமேகலை
- நன்னூல் விருத்தியுரை
- தஞ்சைவாணன் கோவை
- மச்சபுராணம்
- சிவவாக்கியர் பாடல்
- மாயப்பிரலாபம்
- பிக்ஷாடனநவமணிமாலை
- குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
உரை
- கந்தபுராண வசனம்
- கந்தரநுபூதி உரை
- அயோத்தியா காண்டம்
- பொன்வண்ணத்தந்தாதி
- திருக்கைலாய ஞானஉலா
- திருவாரூர் மும்மணிக் கோவை
- பிச்சாடன நவமணி மாலை
இயற்றியவை
- திருமயிலை யமக அந்தாதி
- வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள்
- வடதிருமுல்லைவாயிற் புராணம்
- திருக்குருகூர்ச் சித்த மான்மியம்
- வடதிருமுல்லைப் பதிற்றுப்பத் தந்தாதி
- திருப்போரூர் ஆண்டவன் பதிற்றுப்பத் தந்தாதி
- சென்னை விநாயகர் பதிற்றுப்பத் தந்தாதி
- கூவம் திரிபுரசுந்தரி பதிற்றுப்பத் தந்தாதி
- கழுகாசல சதகம்
- வேதகிரீசர் வண்ணம்
- சந்தானகுரவர் நான்மணிமாலை
- பழநி மும்மணிக்கோவை
- கந்தகோட்ட மாலை
- விநாயகர் இரட்டைமணிமாலை
- திருத்தணிகை மாலை
- இராச ராசேசுவரி மாலை
- வடிவுடையம்மை மாலை
- மாசிலாமணி மாலை
- சென்னைக் கந்தர்மாலை
- சிற்றிலக்கண வினாவிடை
- திருமயிலை உலா
- சிற்றம்பல நாடிகள் சாத்திரக்கொத்து
- கந்தசாமி தோத்திரம்
- மாணிக்கவாசக சுவாமிகள் மாலை
- கபாலீசர் பஞ்சரத்திநம்
- திருத்தொண்டர் கீர்த்தனம்
- கற்பகவல்லி மாலை
- நவமணிமாலை
- உயிர்வருக்கக் கோவை
- புவனாம்பிகை சோடசயாகோத்தவமாலை
- விண்ணப்பமாலை
- சவுந்தரநாயகி மாலை
- ஆளுடைய அரசு தோத்திரமாலை
உசாத்துணை
- மயிலை சீனி வேங்கடசாமி. வீ.அரசு. சாகித்ய அக்காதமி
- தமிழாசிரிய மாணவ வழிமுறை விளக்கம் மயிலை சீனி.வேங்கடசாமி
- திருமயிலை யமக அந்தாதி இணைய நூலகம்
- அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு : தொகுப்பு: ப.சரவணன்
- வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் இணையநூலகம்
- தமிழ்ப் புலவர் வரிசை சு . அ . இராமசாமிப் புலவர்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Dec-2022, 09:48:25 IST