second review completed

சௌரி

From Tamil Wiki
Revision as of 04:38, 26 October 2024 by Jayashree (talk | contribs)

சௌரி (ர. சௌரிராஜன்; ஆர். சௌரிராஜன்; ஆர். சௌரி) (டிசம்பர் 11, 1927 - 2020) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். தமிழிலிருந்து ஹிந்திக்கும் ஹிந்தியிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தார். உத்திரப்பிரதேச அரசின் இலக்கியப் பரிசினை இரண்டுமுறை பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

சௌரிராஜன் என்னும் இயற்பெயரை உடைய சௌரி, டிசம்பர் 11, 1927-ல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காரப்பங்காட்டில் பிறந்தார். ஒரு வயதிலேயே தந்தையை இழந்தார். அன்னையால் வளர்க்கப்பட்டார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், தமிழிலும்,. ஹிந்தியிலும் வித்துவான் பட்டம் பெற்றார். சம்ஸ்கிருதத்தில் 'நியாய சிரோமணி' பட்டம் பெற்றார். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம், குஜராத்தி, வங்காளி, ரஷ்ய மொழிகளில் புலமை பெற்றார். சென்னை தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபாவில் அலுவலராகவும், நூலகராகவும் பணியாற்றினார். மணமானவர்.

சௌரி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

சௌரியின் முதல் சிறுகதை ‘சௌபாக்கியவதி’ 1964-ல் வெளியானது. இரண்டாவது சிறுகதை ‘நாழிக்கிணறு’. தொடர்ந்து சுதேசமித்திரன், கல்கி, காவேரி, மஞ்சரி போன்ற இதழ்களில் ’சௌரி’ என்ற பெயரில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை எழுதினார். சௌரியின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘பாரதநாட்டுப் பழங்கதைகள்’ என்ற தலைப்பில் 1965-ல் வெளியானது. தொடர்ந்து பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார்.

மொழிபெயர்ப்பு

சௌரி, மலையாளத்திலிருந்தும், ஹிந்தியிலிருந்தும் பல படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்தார். தமிழிலிருந்து பல சிறுகதைகளையும், 'காமராஜர் வரலாறு' நூலையும் ஹிந்தியில் மொழி பெயர்த்தார். ஹிந்தி இதழ்களில் தமிழ் மொழி பற்றிப் பல கட்டுரைகளை எழுதினார். பிரேம்சந்த், சரத்சந்திரர், தாராசங்கர் வந்த்யோபாத்யாய போன்றவர்களின் சிறுகதைகளையும் நாடகங்களையும் நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். குருநானக்கின் பாடல்கள் சிலவற்றைத் தமிழில் தந்தார். லால்பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழாக்கம் செய்தார். ‘தமிழர் பண்பாடு’, ‘திராவிடப் பண்பாட்டின் ஒருமைப்பாடு’ ஆகிய தமிழ் நூல்களை ஹிந்தியில் மொழிபெயர்த்தார்.

சௌரியின் மொழிபெயர்ப்பில் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'ராஜஸ்தானி ராணிவாஸ்' என்ற நூலின் மொழிபெயர்ப்பான ’ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்’ குறிப்பிடத்தகுந்தது. எஸ்.கே.பொற்றெக்காட் மலையாளத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘சங்கமம்’ நூலும் முக்கியமான நூலாக அறியப்படுகிறது. கு. சின்னப்ப பாரதியின் நூல்கள் சிலவற்றை ஹிந்தியில் மொழிபெயர்த்தார்.

இதழியல்

சௌரி, ‘சாகித்ய விபாக்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகள்

  • சௌரி, தனது ஹிந்தி இலக்கிய முயற்சிகளுக்காக உத்திரப்பிரதேச அரசின் இலக்கியப் பரிசினை இரண்டுமுறை பெற்றார்.
  • கு. சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை விருது - 2012

மறைவு

கு. சின்னப்பபாரதி, 2020-ல் காலமானார்.

மதிப்பீடு

சௌரி, ஹிந்தி மற்றும் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த படைப்புகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. தன் வாழ்நாள் இறுதி வரை மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவராகவும், தமிழின் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவராகவும் சௌரி அறியப்படுகிறார்.

நூல்கள்

கதை நூல்கள்
  • சௌபாக்கியவதி
  • பாரத நாட்டு கலாச்சாரக் கதைகள்
  • பாரத நாட்டுப் பழங்கதைகள்
  • இந்தியாவின் கலையும் கலாசாரமும்
  • இந்திய மாநிலச் சிறுகதைகள்
  • ராமாநுஜர் கதைகள்
  • அறிவுக்கதைகள்
  • புத்தர் கதைகள்
  • பண்பாட்டுக் கதைகள்
  • ஆன்றோர் கதைகள் (இரண்டு பாகங்கள்)
மொழியெர்ப்பு
  • ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (மூலம்: ஹிந்தி - ராகுல் சாங்கிருத்யாயன்)
  • ஏழாவது குதிரை (மூலம்: ஹிந்தி - தர்ம வீர் பாரதி)
  • சுபதா (மூலம்: சரத் சந்திர சட்டர்ஜி)
  • கீதா மாதுர்யம் (மூலம்: ஹிந்தி - சுவாமி ராம்சுகதாஸ்)
  • அக்னிநதி - (மூலம்: ஹிந்தி - குர் அதுல் ஐன் ஹைதர்)
  • குருநானக் அருள்வாக்கு (ஹிந்தி மூலம் - டாக்டர் ஹரிபஜன் சிங்)
  • சங்கமம் (மூலம்: மலையாளம் - எஸ்.கே.பொற்றெக்காட்)
  • சுந்தரிகளும் சுந்தரன்மார்களும் (மூலம்: மலையாளம் - பி. ஸி. குட்டிகிருஷ்ணன்
  • கூட்டுப் பண்ணை (மலையாள நாடகம்)
  • மங்கல வளையல்
  • ஜெயகாந்தன் கஹானியா
  • பாரதத்தின் புராதன சரித்திரம்
  • துணை
  • பன்மொழிச் சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
  • இந்திய நாட்டுப் பண்பாடு
  • மிருகாநந்தன்
  • ஜெய ஜெய பவானி - இரண்டு பாகங்கள்
  • கண்ணன் தமிழ் வழி இந்தி

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.