காமராஜர் (இந்தியத் தலைவர்)
- காமராஜர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காமராஜர் (பெயர் பட்டியல்)
காமராஜர் (கு. காமராஜர், காமராசர்) (காமாட்சி) (K. Kamaraj) (ஜூலை 15, 1903 - அக்டோபர் 2, 1975) விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். மத்திய அரசிலும், மாநில அரசிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் 'கிங் மேக்கர்' என அறியப்பட்டார். கட்சியில் இளம் தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் 'கே பிளானை' அறிமுகப்படுத்தியவர். தமிழகத்தின் பள்ளிக்கல்வி, தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியப்பங்காற்றியவர். இவர் செயல்படுத்திய மதிய உணவுத்திட்டம் இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனம் பெற்ற திட்டமாக இருந்தது. இந்திய அரசின் மிக உயரிய பாரத் ரத்னா விருது இவரது மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
காமராஜரின் இயற்பெயர் காமாட்சி. காமராஜர் விருதுநகர்(விருதுப்பட்டி) மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி அம்மாள் இணையருக்கு ஜூலை 15, 1903-ல் பிறந்தார். தங்கை நாகம்மாள். விருதுநகரில் தொடக்கக் கல்வி பயின்றார். பன்னிரெண்டு வயதில் தந்தை காலமானார். அதன்பின் பள்ளிப் படிப்பு தடைபட்டது. தனது தாய் மாமா நடத்திக் கொண்டிருந்த துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் திருவனந்தபுரம் நகரிலுள்ள மற்றொரு மாமாவுக்குச் சொந்தமான மரக் கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்.
காமராஜர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அரசியல் வாழ்க்கை-விடுதலைக்கு முன்
- தன் பதினாறு வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தபின் காங்கிரஸ் தலைமையில் நடத்தப்பட்ட பல்வேறு விடுதலைப் போராட்ட நிகழ்வுகளில் பங்கேற்றார்.
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நகரக் காங்கிரஸ் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காங்கிரசின் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.
- 1930-ல் உப்பு சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக வேதாரண்யம் கடற்கரையில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காமராஜர் கலந்து கொண்ட போது முதன்முறையாக கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931-ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான போது விடுவிக்கப்பட்டார்.
- சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ராஜாஜி மற்றும் சத்தியமூர்த்தி தலைமையில் இரண்டாகப் பிளவுபட்டபோது சத்தியமூர்த்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் இருந்தார். சத்தியமூர்த்தி காமராசரின் அரசியல் வழிகாட்டியாக அமைந்தார். காமராஜர் சத்தியமூர்த்தியின் நம்பகமான உதவியாளரானார். 1931-ல் காங்கிரசின் பிராந்திய தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு சத்தியமூர்த்தி வெற்றிபெற காமராஜர் உதவி செய்தார்.
- 1931-ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- 1932-ல், காமராசர் மீண்டும் தேசத்துரோகம் மற்றும் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். திருச்சிராப்பள்ளி சிறையில் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஜெய்தேவ் கபூர் மற்றும் கமல்நாத் திவாரி போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொண்டார். 1933-34-ல் காமராஜர் வங்காள ஆளுநர் ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கொலை செய்வதற்கான ஆயுதங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர் 1934-ல் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
- 1936-ல் சென்னை மாகாண காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
- 1937-ல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1940-ல் காமராஜர் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், சத்தியமூர்த்தி பொதுச் செயலாளராக இருந்தார். சென்னை மாகாண ஆளுநர் ஆத்தர் ஹோப் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு நிதியளிக்க நன்கொடைகளை சேகரித்த போது, அதற்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தினார்.
- டிசம்பர் 1, 1940-ல் போர்நிதிக்கு நன்கொடை அளிப்பதை எதிர்த்துப் பேசியதற்காக இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருக்கும் போதே 1941-ல் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று பதவி ஏற்றவுடன் உடனடியாக பதவியை விட்டு விலகினார்.
- 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.
- 1946-ல் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையைப் பெற்றது. த. பிரகாசம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே காமராஜருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராமசாமி மாற்றப்பட்டு குமாரசுவாமி ராஜா 1949-ல் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். இக்காலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜர் கட்சி விவகாரங்களில் கணிசமான ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.
தேர்தல் அரசியல்
1933-ல் விருதுநகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட காமராஜர் எதிர்கட்சியால் கடத்தப்பட்டபோது முத்துராமலிங்கத் தேவர் முயற்சியால் மீட்கப்பட்டார். தேர்தலில் வரி செலுத்துவோர் மட்டுமே நிற்க முடியும் என்ற விதி இருந்த சூழலில் காமராஜர் பெயரில் ஓர் ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கி வரி கட்டி அவரைத் தேர்தலில் நிற்கும்படி செய்தார்.
செப்டம்பர் 21, 1933-ல் விருதுநகரில் உள்ள தபால் நிலையம் மற்றும் காவல் நிலையகளில் குண்டுவெடித்தது. உள்ளூர் காவல் ஆய்வாளரின் எதிர்ப்பையும் மீறி காமராஜர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் காமராஜர் சார்பில் வரதராஜுலு நாயுடு மற்றும் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் வாதிட்டு, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிருபித்தனர். வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் காமராஜர் இந்த வழக்கின் செலவுக்காக வீட்டைத் தவிர தனது குடும்பச் சொத்துக்களில் பெரும்பாலானவற்றை விற்க நேர்ந்தது. 1934 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் காங்கிரஸ் கட்சிக்கான பிரச்சாரத்தை வடிவமைத்தார்.
ராஜாஜியுடனான பிணக்கு
1946-ல் காமராஜர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ராஜாஜி கட்சியில் இருந்து விலகியதாலும், சத்யமூர்த்தி காலமானதாலும் காங்கிரஸ் கணிசமாக பலவீனமடைந்திருந்ததை கண்டார். சர்தார் படேலின் ஆலோசனையின் பேரில், பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. 1946-ல் காந்தியின் சென்னை வருகைக்குப் பிறகு, ராஜாஜி கட்சியின் சிறந்த தலைவர் என்றும், அவருக்கு எதிராகச் சிலர் செயல்படுகிறார்கள் என்றும் காந்தி எழுதினார். இது மறைமுகமாகக் தன்னைக் குறிப்பிட்டு எழுதியதாகக் கருதிய காமராஜர் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விலகினார். காந்தி பின்னர் சமாதானப்படுத்த முயற்சி செய்த போதிலும், காமராஜர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற மறுத்துவிட்டார். ராஜாஜி அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றார்.
விடுதலைக்குப் பின்
- ஆகஸ்ட் 15, 1947-ல் காமராஜர் இந்திய தேசியக் கொடியை சென்னையில் சத்தியமூர்த்தியின் வீட்டில் ஏற்றினார்.
- 1951–52 இந்தியப் பொதுத் தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று 1952 முதல் 1954 வரை மக்களவையில் உறுப்பினராகப் பணியாற்றினார்.
- 1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க காமராஜர் விரும்பவில்லை. ஆனால் நேருவின் ஆலோசனைப்படி ராஜாஜி ஆட்சி அமைத்ததால் காமராஜர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். 1953-ல் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
முதலமைச்சர்
1953-ல் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் அதிருப்தி கிளம்பியது. ராஜாஜி பதவியிலிருந்து விலகி சி.சுப்ரமணியத்தை முதலமைச்சராக முன் வைத்தார். ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் காமராஜர் பெரும்பான்மை வாக்குகள் பெற்று 1953-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பின் அவரே முன் மொழிந்த காமராஜர் திட்டத்தின் படி பதவி விலகிய அக்டோபர் 2, 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராக இருந்தார்.
1967 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காமராஜர் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் என்பவரால் 1,285 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
காமராஜர் திட்டம்
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளைத் துறந்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்ற திட்டத்தை அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் பரிந்துரைத்தார். இது 'காமராஜர் திட்டம்' அல்லது 'கே பிளான்' என்று அறியப்பட்டது. காங்கிரசின் ஆறு மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆறு மாநில முதலமைச்சர்கள் இதைத் தொடர்ந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். காமராஜரும் தன் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். இதைத் தொடர்ந்து காமராஜர் காங்கிரசின் தேசியத் தலைவராக அக்டோபர் 9, 1963-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிங்மேக்கர்
1964-ல் நேருவின் அகால மரணத்திற்குப் பிறகு 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அடுத்த பிரதமராக வருவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை மறுத்து 1964-ல் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் 1966-ல் நேருவின் மகள் இந்திரா காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களை ஆட்சிக்குக் கொண்டுவர முக்கியப் பங்காற்றினார். இதனால் 1960-களில் 'கிங்மேக்கர்' (அரசர்களை உருவாக்குபவர்) என்று பரவலாகப் பாராட்டப்பட்டார்.
இந்திரா காந்தி மிசா சட்டத்தின்கீழ் நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நிர்வாகம்
- காமராஜர் குறைந்த எண்ணிக்கை கொண்ட அமைச்சரவையைக் கொண்டு ஆட்சி அமைத்தார். அறிவு மற்றும் திறனின் அடிப்படையில் தனது அமைச்சர்களைத் தேர்வு செய்ததார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் மற்றும் அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே திறனின் அடிப்படையில் அமைச்சரவையில் சேர்த்தார்.
- அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய மாநில வளர்ச்சிக் குழுக்களை உருவாக்கினார். அவை வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தன.
நிறுவன காங்கிரஸ்
இந்திரா காந்தி பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்தே அவருக்கும் காமராஜர் தலைமையிலான 'சிண்டிகேட்' எனப்படும் காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 1967 இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்குப் பிறகு இந்தப் பிளவு மேலும் விரிவடையத் தொடங்கியது. 1969-ல் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் விளைவாக கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. காமராசர் தலைமையில் நிறுவன காங்கிரஸ் செயல்பட்டது. இந்திரா காந்தி சிறிய பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகத் தொடர்ந்தார். 1970-ல் இந்திரா காந்தி நாடாளுமன்றக் கீழவையைக் கலைத்து புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். 1971 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அணி 352 இடங்களில் வென்றது. நிறுவன காங்கிரஸ் வெறும் 16 இடங்களை மட்டுமே பெற்றது. 1975 முதல் இறக்கும் வரை நிறுவன காங்கிரசின் ஒரு பகுதியாகவே இருந்தார் காமராஜர்.
பங்களிப்புகள்
- காமராஜர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார். இந்த முயற்சிகள் பத்தாண்டுகளில் மாநிலத்தில் பள்ளிச் சேர்க்கையில் கணிசமான முன்னேற்றம் மற்றும் கல்வியறிவு விகிதங்களின் வளர்ச்சியை ஏற்படுத்தியது. புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கல்வி முறை சீர்திருத்தப்பட்டு வேலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
- 1965-ல் உணவு நெருக்கடியின் போது, காமராஜர் அப்போதைய நிதி அமைச்சரான டி. டி. கிருஷ்ணமாச்சாரியின் உதவியோடு ரேஷன் உணவு விநியோக முறையை அறிமுகம் செய்தார்.
- 1959-ல் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை உட்பட பல புதிய உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
- குழந்தை பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கென பால மந்திர் காமராஜர் அறக்கட்டளை அமைப்பை மஞ்சுபாஷினியுடன் இணைந்து ஏற்படுத்தினார்.
நீர் பாசனத்திட்டம்
மேட்டூர் கால்வாய்த்திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்ப்பாசன திட்டங்களை ஏற்படுத்தினார்.
பள்ளிக்கல்வி
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித்திட்டம் திரும்பப் பெறப்பட்டது. பதினொன்று வயது வரையிலான குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்கள் நீண்ட தூரம் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு மூன்று கிலோமீட்டர் சுற்றளவிலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. முன்பு மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பப்பட்டன மற்றும் பன்னிரெண்டாயிரம் புதிய பள்ளிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, பொது மக்களின் உதவி மற்றும் பங்களிப்புகள் கோரப்படும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பள்ளிகளில் சாதி மற்றும் வகுப்பு அடிப்படையிலான வேறுபாடுகளைக் களைய இலவச சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும் இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார். அனைத்து பள்ளிகளிலும் ஒரு நாளைக்கு ஒரு வேலை இலவச உணவாவது வழங்க ஏற்பாடு செய்தார். இத்திட்டம் இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனம் பெற்றது. இதன் மூலம் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஏழு சதவிகிதமாக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை முப்பத்தியேழு சதவிகிதமாக ஆனது.
இத்திட்டங்களை நடமுறைப்படுத்துவதில் நெ.து. சுந்தரவடிவேலு காமராஜருக்கு உறுதுணையாக இருந்தார்.
தொழில் துறை
காமராஜர் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். உள்ளூர் வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டன. இவற்றுக்கு அரசாங்கத்தால் மின்சார உதவி வழங்கப்பட்டது. புதிய நீர் பாசனத்திட்டங்கள், மின்திட்டங்கள் வகுக்கப்பட்டன.
பெரம்பூர் ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்கு ஆலை, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, கிண்டி டெலி பிரிண்டர் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, திருச்சி பாரத மிகு மின் நிறுவனம், மணலி சுத்திகரிப்பு நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் பல நிறுவப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அமைந்தது.
விருதுகள்
- காமராஜரின் மறைவுக்குப் பின் 1976-ல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா வழங்கியது.
நினைவு
- 2004-ல் இந்திய அரசாங்கம் காமராஜரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நூறு மற்றும் ஐந்து ரூபாய் மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டது.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகியவற்றிற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.
- தமிழகத்தின் பல தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
- புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம் மற்றும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முகப்பு உட்பட பல இடங்களில் இவரின் சிலைகள் உள்ளன.
- காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.
- காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
திரைப்படம்
2004-ல் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ”காமராஜ்” என்ற பெயரில் வெளியானது. காமராஜராக ரிச்சர்ட் மதுரம் நடித்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ல் வெளியிடப்பட்டது.
மறைவு
காமராஜர் அக்டோபர் 2, 1975-ல் காலமானார். காமராஜரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது. காந்தி மண்டபதிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உசாத்துணை
- காமராஜர் - வலைதளம்
- Bala Mandir Kamaraj Trust - வலைதளம்
- MNC integrated with Bala Mandir - Kamaraj Trust
- SHRI K. KAMRAJ - INC
- What the modern, developed Tamil Nadu of today owes to K Kamaraj - Indian express
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2024, 19:13:10 IST