under review

மதுரை நாயக்கர்கள்

From Tamil Wiki
Revision as of 19:02, 17 June 2024 by Logamadevi (talk | contribs)
மதுரை நாயக்கர்கள்

மதுரை நாயக்கர்கள் (பொ.யு. 15-18-ம் நூற்றாண்டு) என்பவர்கள் மதுரை பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் டெல்லி சுல்தானிய ஆட்சியின் கீழ் இருந்த மதுரையைக் கைப்பற்றிய இரண்டாம் கம்பணருக்குப்பின் அரசாண்ட விஜயநகர் நாயக்க வம்ச மன்னர்கள். மதுரை நாயக்கர்களே தமிழகத்தில் பிற நாயக்கர்களை(செஞ்சி, தஞ்சை) விட நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். மதுரை நாயக்கர்களில் திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர், ராணி மங்கம்மாள் ஆகியோர் புகழ்பெற்ற ஆட்சியாளர்களாக இருந்தனர்.

பெயர்க்காரணம்

நாயக்கர் என்ற சொல் தலைவன் அல்லது படைத்தளபதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. விஜயநகரப் பேரரசின் அரசப் பிரதிநிதியைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இது சாதிப்பெயராக மாறியது. நாயக்கர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

வரலாறு

விஜய நகரப் பேரரசு

மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் டெல்லி சுல்தானிய ஆட்சி ஏற்பட்டது. விஜயநகர நாயக்கராட்சி காலத்தில் இரண்டாம் கம்பணர் என்ற நாயக்க அரசர் மதுரையின் மீது படையெடுத்து வந்து சுல்தானியர்களிடமிருந்து அதைக் கைப்பற்றினார். கம்பணருக்குப் பின் இரண்டாம் ஹரிஹரர் காலத்தில்(1377-1404) மதுரையில் முஸ்லீம் ஆட்சி முழுவதுமாக இல்லாமலாகி நாயக்கர் ஆட்சி நிலைத்தது. கம்பணர் காலத்தில் ஆட்சி தொடங்கியது எனினும் விஜய நகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி வலுப்பெற்றது. பொ.யு. 1529-ல் விஸ்வநாத நாயக்கர் காலம் முதல் பாளையப்பட்டு ஆட்சிமுறையின் மூலம் மதுரையில் நாயக்கர் ஆட்சி வளம் பெற்றது. அதன்பிறகு ஆண்டவர்களில் புகழ்பெற்ற ஆட்சியாளர்கள் திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர், ராணி மங்கம்மாள்

அரசாட்சி

  • பாளையப்பட்டு ஆட்சி முறையில் கிராமசபை மறைந்தது. கிராம மணியக்காரர், கணக்கர், தலையாரி, ஆகியோரைக் கொண்ட ஆயக்காரர் நிர்வாகம் தோற்றுவிக்கபப்ட்டது.
  • கள்ளர், மறவர் சாதிகள் இருந்த ஊரில் வரிவசூல் செய்தவர்கள் அம்பலக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்தவர்கள் மணியக்காரர்கள் எனப்பட்டனர். இவர்கள் வரிப்பணத்தை மாகாண அதிகாரிகளிடம் செலுத்த அதனை அவ்வதிகாரிகள் பிரதானியிடம் செலுத்தினர்.
  • வண்ணார், தட்டர், தச்சர், கருமார் போன்ற கிராமத்தொழிலாளர்களுக்கு அரசு மானியம் வழங்கியது.
தலைநகர்

நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகராக இருந்தது. பொ.யு. 1616-ல் தஞ்சை நாயக்கர்களுடன் போர்புரிவதற்கு வசதியாக முத்து வீரப்ப நாயக்கர் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார். பொ.யு. 1630-ல் திருமலை நாயக்கர் மீண்டும் தலைநகரை மதுரைக்கே மாற்றினார். பொ.யு 1665-ல் சொக்கநாத நாயக்கர் மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார். அப்படி மாற்றும்போது திருமலை நாயக்கர் மகாலின் பெரும்பகுதி சிற்பங்களை இடித்து திருச்சிக்கு எடுத்து வந்தார். ஆனால் அதைக்கொண்டு புதிதாக எதுவும் கட்டவில்லை.

பாளையப்பட்டு

பாளையப்பட்டு ஆட்சிமுறையின் கீழ் தமிழகம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பாளையத்துக்கும் பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டு ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுக்கு ஒதுக்கி, இரண்டாம் பகுதியை படைவீரர்களுக்கும் மூன்றாம் பகுதியை மன்னருக்கும் அளிக்கும்படி ஆணையிடப்பட்டனர். மதுரை அரசுக்கு வேண்டும்போது படையுதவியும் அளிக்க வேண்டியதிருந்தது.

சமயம்

நாயக்கர்கள் வழிவழியாக வைணவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் சமயப் பொறையுடையவர்களாக இருந்தனர். மதுரை நாயக்கர் காலத்தில் வடகலை, தென்கலை வைணவர்களுக்குள் தொடர்ந்த சண்டை நிலவியது. மதுரை வீரன் வழிபாடு தோன்றியது. திருமலை நாயக்கருக்குப் பின்பு சக்தி வழிபாடு சிறப்பு பெற்றதால் மீனாட்சி கோயிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மதுரையிலும் திருச்சியிலும் இருந்த இஸ்லாமியர்கள் அமைதியாக வாழ்ந்தனர். கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்திற்கும் தடைகள் இல்லாமல் இருந்தது. பொ.யு 1592-ல் ராபர்ட்-டி-நொபிலி பாதிரியார் மன்னரின் இசைவு பெற்று முதல் மாதா கோயிலைக் கட்டினார். பொ.யு. 1630-ல் அதிக அளவில் இந்துக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். மதுரை மறவர் சீமையில் இதனால் ஏற்பட்ட கலவரத்தை மன்னர் தலையிட்டு தீர்த்தார்.

திருவிழாக்கள்

நாயக்கர் காலத்தில் மதுரை திருவிழாக்களின் நகரமாக ஆனது. திருமலை நாயக்கர் காலத்தில் மாசி மாதத்தில் நிகழ்ந்து வந்த திருக்கல்யாண விழாவையும் தேரோட்டத்தையும் மக்கள் கலந்து கொள்ள வசதியாக சித்திரையில் மாற்றினார். இத்திருவிழாவின் எட்டாம் நாளில் மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டு அவரிடமிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் சடங்கு நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது. வைகாசி மாதத்தில் வசந்தவிழா நடைபெற்றது. ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் சிவனின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது.

திருமலை நாயக்கர் சிலை
கட்டிடக்கலை
  • திருமலை நாயக்கர் காலத்தில் திருமலை நாயக்கர் மகால் கட்டப்பட்டது. இது இத்தாலியச் சிற்பியால் வடிவமைக்கப்பட்டது. இதில் நான்கில் ஒருபகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. இங்கு தான் அரசர் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார். சித்திரை விழாவின் போது இங்கு மீனாட்சி கையிலிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் சடங்கு நிகழ்த்தப்பட்டது. பொ.யு 1868-ல் நேப்பியர் பிரபு இம்மகாலை புனரமைத்தார்.
  • கோயில் மண்டபங்கள், துவார பாலகர் சிலைகள், கொடிக்கம்பங்கள், பலிபீடங்கள் ஆகியவை திருமலை மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டன. இவர் காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தை அவரே எடுத்து நடத்தினார். சிற்பங்களும், ஓவியங்களும் வளம் பெற்றன.
  • ஸ்ரீரங்கம் கோயிலில் திருமலை நாயக்கர், சொக்க நாத நாயக்கர், ராணி மங்கம்மாள், விஜயரங்க சொக்க நாதர் ஆகியோர் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டன.
  • திருமலை நாயக்கர் காலத்தில் 64 கோயில்களில் கோயில் கோபுரங்கள் அமைக்க ஏற்பாடு செய்து கைவிட்டார். ராயகோபுரம் அவற்றில் ஒன்று.
மாற்றங்கள்
  • ஊர்: கோட்டை, மங்கலம், சமுத்திரம், புரம், குளம் போன்ற பின்னொட்டு கொண்ட ஊர்ப் பெயர்கள் உருவாகின.
  • கல்வி: திண்ணைப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சேர்ந்து படிக்கும் வழக்கம் வந்தது. பிராமணர்கள் வேதபாடசாலையில் கற்றனர். இவர்களுக்குரிய செலவை அரசு ஏற்றிருந்ததாக நொபிலி பாதரியார் குறிப்பில் உள்ளது. பெண்கல்வி மிகுதியாக இல்லை.
  • பலதார மணம்: ஆண்கள் பல மகளிரை மணக்கும் வழக்கம் இருந்தது. மறவர் நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியர் இருந்தனர்.
  • தேவதாசியருக்கு பொட்டு கட்டும் வழக்கம் இருந்தது. கோவில் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இவர்களை செல்வந்தர்கள் உடல்தேவைக்கு பயன்படுத்தினர். உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.
  • நாயக்கர் காலத்தில் செளராஷ்டிரப் பகுதியிலிருந்து செளராஷ்டிரர்கள் வந்து குடியேறினர். மங்கம்மாள் காலத்தில் இவர்கள் பிராமணர்களைப் போல தாங்களும் பூணூல் அணியும் உரிமையை வேண்டிப் பெற்றனர்.
  • சாதி: வலங்கை, இடங்கைச் சாதிகள் உருவாகி பூசலிட்டுக் கொண்டன. கம்மவார், ரெட்டியார், நாயக்கர், தேவாங்கர், கோமுட்டி, சாலியர், நாவிதர், சக்கிலியர், வண்ணார், ஒட்டார், பிராமணர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்து இங்கு குடியேறினர்.
  • இலக்கியம்: சிற்றிலக்கியம் வளர்ந்தது. குமரகுருபரர், அதிவீரராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர், திருக்குருகைப் பெருமாள் கவிராயர், ராபர்ட் டி நொபிலி, பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், சுப்பிரதீபக் கவிராயர், வீரமாமுனிவர், உமறுப்புலவர், திரிகூடராசப்பக் கவிராயர் ஆகிய புலவர்கள் இக்காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆண்டாளின் வரலாற்றை கிருஷ்ணதேவராயர் 'அமுக்தமால்யதா' என்ற தெலுங்கு நூலாகப் படைத்தார்.

காலக்கோடு

ஆட்சிக் காலம் மதுரை நாயக்கர்
பொ.யு. 1529-1564 விஸ்வநாத நாயக்கர்
பொ.யு. 1564-1572 கிருஷ்ணப்ப நாயக்கர் I
பொ.யு.1572-1595 வீரப்ப நாயக்கர்
பொ.யு. 1595-1601 கிருஷ்ணப்ப நாயக்கர் II
பொ.யு. 1601-1609 முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கிருஷ்ணப்ப நாயக்கர் II-ன் சகோதரர் விஸ்வப்ப நாயக்கரின் மனைவி)
பொ.யு. 1609-1623 முத்து வீரப்ப நாயக்கர் I (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்தமகன்)
பொ.யு. 1623-1659 திருமலை நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இளையமகன்)
பொ.யு. 1659 முத்து வீரப்ப நாயக்கர் II
பொ.யு. 1659- 1682 சொக்கநாத நாயக்கர்
பொ.யு. 1682-1689 முத்து வீரப்ப நாயக்கர் III
பொ.யு. 1689-1706 ராணி மங்கம்மாள் (சொக்கநாதரின் மனைவி)
பொ.யு. 1706-1732 விஜயரங்க சொக்கநாதர்
பொ.யு. 1732-1736 மீனாட்சி (விஜயரங்க சொக்கநாதரின் மனைவி)

உசாத்துணை


✅Finalised Page