under review

வெள்ளைக்குடி நாகனார்

From Tamil Wiki
Revision as of 16:01, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வெள்ளைக்குடி நாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கத்தொகை நூல்களான நற்றிணை, புறநானூறு ஆகியவற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளைக்குடி நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சோழ நாட்டைச் சேர்ந்தவர். வெள்ளைக்குடியில் பிறந்தார். நாகனார் என்பது பெயர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் காலத்தில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

வெள்ளைக்குடி நாகனார் பாடிய மூன்று பாடல்கள் நற்றிணை (158, 196); புறநானூறு (35) ஆகிய சங்கத்தொகை நூல்களில் உள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

நற்றிணை 158
  • குறிஞ்சித் திணைப் பாடல்
  • ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது
  • மலைநாடன் வரும் வழியிலுள்ள இடர்கள்: கற்கள் செறிந்த பாதை, மிகுந்த இருட்டு, குகையில் இருக்கும் புலி யானையைத் தாக்கி அதன் குருதியைப் பருகிவிட்டுத் தன் வாயை வேங்கை மரத்தில் துடைக்கும்.
  • தலைவன் வரும் வழியிலுள்ள இடர்பாடுகளை நினைத்து வருந்தி தலைவி தோழிக்குச் சொல்லியது.
நற்றிணை 196
  • நெய்தல் திணைப் பாடல்
  • நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.
  • உவமை: பளிங்குக் கற்கள் செறிந்து கிடப்பது போல வானத்தில் ஒளி வீசும் விண்மீன்களுக்கு இடையிடையே பாலை மொண்டு வைத்திருப்பது போல் ஈர வெள்ளை நிற நிலவொளி
  • தலைவனின் பிரிவால் தலைவியின் தோள் சிறுத்தது.
புறநானூறு 35
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது
  • அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள் இதில் உள்ளன.
  • ”பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது” என இப்பாடலைக் குறிப்பர்.
  • உவமை: மழை விரும்பும்போது மழையைப் பெற்றது போல மக்கள் மன்னனிடம் வேண்டும் போது கொடை பெறுவது.
  • மழை பொய்த்தாலும் வருவாய் குறைந்தாலும் இயற்கை அல்லாத செயற்கை தோன்றினாலும் உலகம் அதனைக் காக்கும் அரசனைத்தான் பழிக்கும்.
  • கிள்ளிவளவனின் நாட்டில் சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் குடிக்மக்கள் வரி செலுத்தவில்லை. அவர்களுடைய வரிக்கடன்களை விலக்கி அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு இப்பாடலில் வெள்ளைக்குடி நாகனார் அறிவுரை கூறுகிறார்.

பாடல் நடை

  • நற்றிணை 158 (குறிஞ்சி)

அம்ம வாழி தோழி நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே

  • நற்றிணை 196 (நெய்தல்)

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே

  • புறநானூறு 35 (திணை: பாடாண்; துறை: செவியறிவுறூஉ)

நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!

அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்

நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல்: எனவ கேண்மதி!
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.

உசாத்துணை

  • சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
  • வெள்ளைக்குடி நாகனார்: tamilvu



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 23:04:10 IST