under review

இளநாகனார்

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இளநாகனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

இளநாகனாரின் இயற்பெயர் நாகன் என்றும் நாகன் என்னும் பெயரில் வேறு புலவர்களும் உள்ளதால் இவரது இளமையை கருதி இளநாகனார் என வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

இளநாகனார் இயற்றிய மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 151, 205 மற்றும் 231- வது பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இளநாகனார், உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள்களைக் கொண்டு அகப்பொருள் கருத்தை விளக்குவதில் திறன் படைத்தவர். ஆளி என்னும் கொடும் விலங்கு, செம்முக மந்தி, எழு விண்மீன் போன்றவை இவரது பாடல்களில் பயின்று வருகின்றன.

பாடல்களால் அறியவரும் செய்திகள்

  • தன்னைக் கொல்லக்கூடிய புலியை அதன் குகைக்கே சென்று குத்திக் கொன்ற யானை, குருதி படிந்த தன் கொம்புகளை கல்லில் கொட்டும் அருவி நீரில் கழுவும்.
  • இளந் தளிர்களை உண்டுகொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் பார்த்துவிடக் கூடாது என்று அஞ்சி, மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, செம்முக மந்திக் கடுவனுக்குப் குறியிடமாகக் காட்டும்.
  • அருவி ஒலிக்கும் மலையடுக்கத்தில் ஆளி வேட்டைக்கு எழுந்து, பற்றும் நகங்களும், மேனியில் புள்ளிகளும் கொண்ட புலியைக் கொல்லும். ஆளி தன் வலிமையான நகங்களால் யானையைப் பற்றி இழுக்கும்.
  • நீலநிறக் கடல் பரப்பின் மேலே சிறிய வெள்ளைக் காக்கைகள் பறக்கும்.

பாடல் நடை

குறிஞ்சித் திணை இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது

நற்றிணை 151

நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல- தோழி!- கடுவன்,
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!

(குன்ற நாட! நீ வராமையால், இவள் நெற்றி பசந்தாலும், தோள் வாடினாலும், இரவில் நீ வரவேண்டாம்.தன்னைக் கொல்லக்கூடிய புலியை அதன் குகைக்கே சென்று குத்திக் கொன்ற யானை, குருதி படிந்த தன் கொம்புகளை கல்லில் கொட்டும் அருவி நீரில் கழுவும் வழியில் வரவேண்டாம். இளந் தளிர்களை உண்டுகொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் பார்த்துவிடக் கூடாது என்று அஞ்சி, மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, செம்முக மந்திக் கடுவனுக்குப் குறியிடமாகக் காட்டும். பின்னர் பொன்னிறத்தில் பூத்துக் கிடக்கும் வேங்கைப் பூக்களைத் தின்னச் செல்லும். அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மந்தியின் தலை முடியைத் திருத்தும் கடுவன்களுள்ள குன்றுகளை உடையவன் குன்றநாடன்.)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Feb-2023, 09:20:12 IST