first review completed

சந்ரு

From Tamil Wiki
Revision as of 05:06, 17 April 2024 by Tamizhkalai (talk | contribs)
ஓவியர் சந்ரு
ஓவியர் சந்ரு

சந்ரு (ஓவியர் சந்ரு)(சந்திரசேகரன் குருசாமி) (G. Chandrasekaran) (பிறப்பு: மே 4, 1951) தமிழ் நவீன ஓவியக்கலைஞர்களில் ஒருவர். கோட்டோவியங்களில் பங்களிப்பாற்றினார். ஓவியக்கலை ஆசிரியர், சிற்பக்கலைஞர், கவிஞர், எழுத்தாளர், செயல்பாட்டாளர். குருவனம் என்ற திறந்தவெளி அருங்காட்சியகம், ஓவியப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர். தமிழகத்தின் பல முக்கியமான இடங்களில் இவர் படைத்த சிற்பங்கள் வைக்கப்படுள்ளன. தொடர்ந்து கலை சார்ந்த உரையாடலில் ஈடுபடுபவர். கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் செயற்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

சந்ருவின் இயற்பெயர் சந்திரசேகரன் குருசாமி. சந்ரு விருதுநகர் மாவட்டத்தில் குருசாமி, மாரியம்மாள் இணையருக்கு மே 4, 1951-ல் பிறந்தார். தந்தை குருசாமியின் முதல் மனைவி வழியாக ஒரு அண்ணன், அக்காள். இரண்டாவது மனைவியான மாரியம்மாள் வழியாக இரண்டு அக்காள். சந்ரு கடைசி மகன். ஆரம்பக்கல்வியை ரோசல்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் பயின்றார். சுப்பையா நாடார் பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை பயின்றார்.

சென்னை கவின்கலை கல்லூரியில் ஐந்து வருடங்கள் வண்ணக்கலை(Painting) துறையில் இளங்கவின்கலை(B.F.A) பட்டம் பெற்றார். ஆலையக சுடுமண் வடிவமைப்பு (Industrial Design in Ceramic) துறையில் முதுகவின்கலை (M.F.A) பட்டம் பெற்றார். 'Indian-Italian Fresco Painting' -ல் சான்றிதழ் படிப்பு பயின்றார்.

பணி

சந்ரு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றினார். சித்தன்னவாசல், தஞ்சை பெரிய கோவில், காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றம், திருமலை நாயக்கர் மகால் ஆகியவற்றில் ஓவியங்களை நகலெடுத்தல் மற்றும் அருங்காட்சியகப் பணிகள் செய்தார்.

1977 முதல் சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஆலையக சுடுமண் வடிவமைப்பு துறையின் ஆசிரியராகப் பணியாற்றினார். பிற துறைகளுக்கும் ஆசிரியராக வகுப்பெடுத்தார். முதல்வராக இருந்து பணிஓய்வு பெற்றார்.

தனிவாழ்க்கை

சந்ரு மனைவி முத்துலட்சுமியுடன்

சந்ரு தன் மாமன் மகளான கோவில்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமியை செப்டம்பர் 3, 1976-ல் திருமணம் செய்து கொண்டார். மகள்கள் பொற்கொடி, ரமா, உமா. ஒரு மகன் செவகுமார். திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் மனைவியுடன் வசிக்கிறார்.

அமைப்புப் பணிகள்

ஓவியப் பயிற்சிக் கல்லூரி

சந்ரு ஆரம்பகாலத்தில் பல பயிற்சிப் பட்டறைகள் மூலம் மாணவர்களுக்கு ஓவியக்கலைப்பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். 2015-ல் திருநெல்வேலியில் ஓவியப் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். இது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் கல்லூரி. இக்கல்லூரியில் சிற்பக்கலை இரண்டாண்டு படிப்பாக உள்ளது. படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கூடுதலாகப் படிக்க ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளது.

“இது பத்தாவது முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லாமல் போன மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் திட்டம். அதைக்கடந்து உண்மையிலேயே கலையின் மீது இயற்கையான ஆர்வம் கொண்டவர்களுக்கான கல்லூரியாக இது இருக்கும். இதில் படிப்பென்பது குறைவாகவும் செயல்வழி கற்றல் அதிகமாகவும் இருக்கும்.” என சந்ரு குறிப்பிடுகிறார்.

குருவனம்

சந்ரு தன் பணி ஓய்வுக்குப் பின் 2019-ல் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் குருவனம் என்ற திறந்தவெளி அருங்காட்சியகத்தை ஏற்படுத்தினார். முதலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களின் சிலைகளைச் செய்யலாம் என நினைத்தார். முதல்கட்டமாக வ.உ.சி, பாண்டித்துரைத்தேவர், ஆபிரகாம் பண்டிதர், உமறுப்புலவர், தேவநேயப்பாவணர், விளாத்திகுளம் சுவாமிகள், புதுமைப்பித்தன் ஆகியோரின் சிலைகளைச் செய்தார். தமிழ் மொழி, சமூகத்துக்கு பாடுபட்டவர்களின் அறுநூறு சிலைகள் செய்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். ஓவியம், நாடகம், இசை சார்ந்த மாணவர்கள் வந்து தங்கிச் செல்ல ஏதுவான ஒரு தங்கும் விடுதியையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.

கலை வாழ்க்கை

2023-ல் காட்சிக்கு வைக்கப்பட்ட சந்ரு-வின் ஓவியங்களில் ஒன்று
ஓவியம்

சந்ரு சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைந்தார். தன்னைத் தொந்தரவு செய்யும் அனைத்தையுமே ஓவியமாகத் தீட்டுபவர். அரசியலையும் கலையும் பிரிக்க இயலாது எனும் கருத்தைக் கொண்டிருப்பவர். முதன்முதலாக தன் ஓவியங்களை 1996-ல் மைலாப்பூரில் 'கலைக்கு எதிராக கலை' என்ற தலைப்பில் தனிக்கண்காட்சியாக வைத்தார். அதன்பின் 2023-ல் தான் அவரின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வந்தன. நவீன கலைக்கூடங்கள், கலை விற்பனர்கள், கலை விமர்சகர்கள் ஆகியோரின் லாபம் நோக்கின் மீது சந்ரு விமர்சனப்போக்கு கொண்டிருந்ததே இத்தகைய இடைவெளிக்குக் காரணம். சந்ரு கோட்டோவியங்களை வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்டவர். 2023 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கலை-அரசியல் (ART-POLITICS) என்ற தலைப்பில் சரண்ராஜ் நிர்வாகிப்பாளர்/காப்பாளராக இருந்து தக்ஷிண்சித்ராவில் சந்ருவின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது தவிரவும் குழுக்கண்காட்சிகளிலும் சந்ருவின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பார்க்க: ART-POLITICS கண்காட்சி: தக்‌ஷினசித்ரா அருங்காட்சியகம்

சிற்பம்

சென்னை நகரின் சாலை ரவுண்டானாக்களில் வைக்க புலியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மரப்பாச்சி, தெருக்கூத்து, தொழிலாளர் பிரச்சினை ஆகிய சிலைகள் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி பகவதியின் மார்பளவு சிலை, சித்தா ஆராய்ச்சி மையத்திலுள்ள அயோத்திதாச பண்டிதரின் மார்பளவு சிலை, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலுள்ள டாக்டர் ரமணன் மார்பளவு சிலை, சென்னை -அம்பேத்கார், மதுரை உயர்நீதிமன்றத்திலுள்ள காந்தி முழு உருவம், திருநெல்வேலியில் உள்ள லெனின் சிலை, டிரேட் செண்டர் பாம்படம், வரையாடு - பொரு நை பசர்க் ஆகியவை இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள். தான் ஏற்படுத்திய குருவனத்தில் அறுநூறு சிலைகள் செய்வது என இலக்கு கொண்டு செயல்பட்டு வருகிறார். இதில் அரசியல், கலை, பண்பாடு ஆகிய தளங்களில் பங்களித்த தலைவர்களை சிலையாகச் செய்யும் பணியில் உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

சந்ரு சிறுகதைகள், கவிதைகள், கலை குறித்த விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். தஞ்சை மாநாட்டில் புத்தகம் வெளியிடுவதற்கான ஆலோசகராக செயல்பட்டார். சந்ருவின் முதல் சிறுகதை 'ஊடாக' 1995-ல் கணையாழியில் வெளியானது. தன்னுடைய கனவுகளை கவிதைகளாக எழுதுபவர். இவருடைய கவிதைகள் கணையாழியில் வெளிவந்தது. 'சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள்', 'சந்ருவின் கவிதை' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தனையும் ஒளவையாரையும் தன் ஆதர்சமாகக் குறிப்பிடுகிறார்.

கலை

கலைவிமர்சனம் சார்ந்த நூல்கள் எழுதினார். இவரின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு 'நேர்காணலும் நிறைகாணலும்' நூலாக வெளியானது. இவர் எழுதிய 'திருத்தப்பட்ட பதிப்பு' என்னும் நூல் அவருடைய ஓவியங்களைப் பற்றிய உதிரிக் கருத்துக்களும் ஓவியத்துக்கான முன்குறிப்புகளும் கொண்டது. ”விண்வெளியில்” என்ற நூல் நிர்வாண வரைபடங்களைப் பற்றியது. 'செப்பாடி தப்பாடி' என்பது தற்கால கலை குறித்த விமர்சன புத்தகம். 'ஓவியம் என்றொரு மொழி' ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய நூல்.

மதிப்பீடு

சந்ரு ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் முதன்மையாக ஈடுபட்டு வருபவர். கலை பற்றி அடுத்த தலைமுறையினரிடம் தொடர் உரையாடலில் இருப்பவர்.

”ஓவியர் சந்துருவின் 'திருத்தப்பட்ட பதிப்பு' என்னும் நூல் ஓவியங்களின் இடைவெளியை நிரப்புவது. அவருடைய ஓவியங்களை புரிந்துகொள்வதற்கான ஒரு மேலதிக துணை. அந்நூலில் அவர் போகிற போக்கில் பல குறிப்புகளை எழுதிச் செல்கிறார். எல்லாமே கிறுக்கல்கள். ஓவியக் கிறுக்கல்கள். மொழிக் கிறுக்கல்கள். அவருடைய உள்ளம் செயல்படுவதை காட்டுவது இந்நூல். அவருடைய ஆழுளம் பதிவானது. இந்த நூலுக்கு இணையான நூல்களை டாவின்சி போன்றவர்கள் வரைந்துள்ளனர். அதில் ஏராளமான ஓவியக்கிறுக்கல்கள் உள்ளன. அவர் எண்ணிய ஓவியங்கள், பின்னர் வரைந்த ஓவியங்கள், அவருடைய கனவுகள். குழந்தைத்தனமாக வெளிப்படும் அவருடைய ஆழ்மனத்தின் சிதைவும் சிதறலும். ஓவியம் வரைந்த பின் ஓவியர் தூங்கும்போது உளறுவதுபோன்ற நூல். அதைப்போன்ற ஒன்று சந்துருவின் நூல்.” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

விருதுகள்

  • 1993-ல் கலாமேளாவில் சிறந்த மேடை வடிவமைப்புக்கான தேசிய அளவிலான விருது
  • 1996-ல் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பனி சிற்ப திருவிழாவில் இரண்டாம் பரிசு
  • 1997-ல் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா மற்றும் வர்த்தக விழாவில் முதல் பரிசு
  • 2008-ல் மக்கள் தொலைக்காட்சியின் “தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்”

கண்காட்சிகள்

  • கலைக்கு எதிராக கலை (1996, மயிலாப்பூர் கலைக்கூடம்)
  • கலை-அரசியல் (ART-POLITICS) (2023, தக்சின்சித்ரா)

நூல் பட்டியல்

கலை
  • திருத்தப்பட்ட பதிப்பு (ஓவியம்)
  • செப்பாடி தப்பாடி (தற்கால கலை குறித்த விமர்சன புத்தகம்)
  • உருவெளியில் (நிர்வாண வரைபடங்களைப் பற்றிய புத்தகம்)
  • ஓவியம் என்றொரு மொழி (ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்)
  • நேர்காணலும் நிறைகாணலும் (காவ்யா வெளியீடு)
  • சாதி கெட்ட கலை (படிக வெளியீடு)
கவிதைத் தொகுப்பு
  • சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள் (வம்சி பதிப்பகம்)
  • சந்ருவின் கவிதை
சிறுகதைத் தொகுப்பு
  • அவன், இவன், வுவன்

உசாத்துணை

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.