under review

குமரகுருபரர்

From Tamil Wiki
Revision as of 08:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Swami-kumaragurubarar.jpg

To read the article in English: Kumaraguruparar. ‎


குமரகுருபரர் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடைய துறவி. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை போன்ற நூல்களை இயற்றினார். காசி மடத்தை உருவாக்கினார்,

பிறப்பு, கல்வி

குமரகுருபரர் தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர், சிவகாம சுந்தரி இணையருக்குப் பிறந்தார். குமரகுருபரர் ஐந்து வயது வரை பேசும் திறனின்றி இருந்தார் என்றும் இவரின் பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபட்ட பிறகு பேசும் திறன் பெற்றார் என்றும் தொன்மம் கூறுகிறது. சிறு வயதிலேயே திருச்செந்தூர் முருகனைப் போற்றி கந்தர் கலிவெண்பா இயற்றினார்.

ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை =

மதுரையில்
LLRfK36cW5gVzoET sakalakalavalli-maalai.jpg

குமரகுருபரர் ஆன்மிகத் தேடலால் தனது இளம் வயதிலேயே வீட்டை விட்டுச் சென்றார். மதுரை நகருக்கு வந்தபோது திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கிணங்க மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார்.

குமரகுருபரர் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் இயற்றிய முடித்தபோது, மீனாட்சியம்மை திருமலை நாயக்க மன்னர் கனவில் தோன்றி, குமரகுருபரரை அழைத்து வந்து பிள்ளைத்தமிழை அரங்கேற்றுமாறு கூறினார். குமரகுருபரர் நாள்தோறும் ஒவ்வொரு பருவமாக விரித்துரைத்து அரங்கேற்றினார். வருகைப்பருவத்தை விரிவுரையாற்றும்போது மீனாட்சியம்மை அர்ச்சகரின் பெண்குழந்தை வடிவில் வந்து திருமலை நாயக்கர் மடியில் அமர்ந்து கதை கேட்டாள். "தொடுக்கும் கடவுள்" என்ற பாடலுக்கு பொருளுரைத்தபோது மீண்டும் வாசித்துப் பொருள் சொல்லுமாறு கூறினாள். "காலத்தொடு கற்பனை கடந்த" என்ற பாடலுக்கு பொருள் உரைக்கும் போது குமரகுருபரரின் கழுத்தில் முத்துமாலை ஒன்றை அணிவித்து மறைந்தாள் என்று தொன்மக்கதை கூறுகிறது..

அம்மையைப் பாடியதுபோல அப்பனையும் பாடும்படி மன்னர் வேண்டிக்கொள்ள மதுரைக் கலம்பகம் பாடினார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூலை இயற்றினார்.

துறவு
Kumaraguruparar-1.jpg

குமரகுருபரர் தருமபுரத்தில் திருக்கயிலாய பரம்பரை எனப்ப்டும் தருமபுர ஆதீனத்தின் தலைவரான மாசிலாமணி தேசிகரை அணுகி தன்னை மாண்வனாக ஏற்குமாறு வேண்டினார். குமரகுருபரர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தேசிகர் குருவாக இருக்க ஒப்புக் கொண்டார்.காசிக்குச் சென்று வருவதற்கு நெடுங்காலம் ஆகுமென்று தயங்கிய குமரகுருபரரை சில காலம் சிதம்பரத்தில் இருந்துவரும்படி தேசிகர் கூறினார்.

சிதம்பரத்துக்குச் செல்லும் வழியில் வைத்தீசுவரன் கோயிலில் முருகனைப் போற்றி முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் இயற்றினார். சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு சிலகாலம் தங்கினர். அக்காலத்தில் சிதம்பர மும்மணிக்கோவையை இயற்றினார். அதில் முதற் செய்யுளில் காசிக்குச் செல்வதில் உள்ள துன்பங்களையும் சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம் செய்யும் எளிமையையும் "காசியினிறத்த னோக்கி" எனக் குறிப்பிடுகிறார்.

"யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் பெரும்பாலும் சமண சமயச் சார்புடையனவாக இருப்பதால் இலக்கணங்களுக்கு உதாரணப் பாடல்களாக சைவம் தொடர்பான செய்யுள்களை இயற்றித்தர வேண்டும்" என்று சிலர் கோரியதற்கிணங்க சிதம்பர செய்யுட்கோவை நூலை இயற்றினார்.

நீதிநெறி விளக்கம் என்னும் நீதிநூலில் சிதம்பரம் நடராஜப் பெருமானது வாழ்த்து இடம்பெற்றிருப்பதால் சிதம்பரத்தில் இருந்த காலத்திலேயே இந்நூல் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது.

சிதம்பரத்திலிருந்து திரும்பிய குமரகுருபரர், குரு மாசிலாமணி தேசிகரிடம் துறவறம் அளிக்க வேண்டினார். தேசிகர் இவருக்கு ஞானம் உபதேசித்து துறவியாக்கினார். தன் குரு மாசிலாமணி தேசிகரைப் போற்றி பண்டார மும்மணிக் கோவை இயற்றினர்.

காசி நகரில்
குமாரசுவாமி மடம்,காசி
காசி கேதாரீஸ்வரர் கோயில்

குருவின் ஆணையை ஏற்று காசிக்குச் சென்றார் குமரகுருபரர். காசியில் மடம் அமைப்பதற்கு அனுமதி வேண்டி இவர் முகலாய மன்னர் தாரா ஷூகோவை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. மன்னர் அவரைச் சந்திக்க மறுத்து, தன் மொழியான ஹிந்துஸ்தானியில் பேசி, மதிப்புடன் வந்தால் பேசலாம் எனக் கூறியதாகவும், அத்தருணத்தில் நாவன்மை வேண்டி கலைமகள் மீது சகலகலாவல்லி மாலை பாடி, கலைமகள் அருளால் ஹிந்தி மொழியை அறிந்து, அவள் தந்த சிங்கத்தின் மேல் அமர்ந்து தாராவுடன் உரையாடியதாகத் தொன்மக்கதை கூறுகிறது. கேதாரநாதர் கோவிலை மீளமைக்க அனுமதி பெற்றதோடு அங்கு சைவம் வளர்க்க மடம் அமைப்பதற்கு நிலமும் பெற்றார்.

குமரகுருபரர் காசியில் நிறுவிய மடம் 'குமாரசாமி மடம்' என்று பெயர் பெற்றது. தமிழகத்தின் திருப்பனந்தாளிலும் இம்மடத்தின் கிளை அமைந்தது. பின்னாட்களில் திருப்பனந்தாளிலுள்ள காசி மடம் தலைமை மடமாகவும், காசியிலுள்ளது இதன் கிளை மடமாகவும் மாறின. இந்த மடங்கள் தமிழ்ப்பணியினைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றன. காசி மடத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்தியிலும் தமிழிலும் குமரகுருபரர் புராணப் பிரசங்கம் செய்தார். இராம பக்தராகிய துளசிதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்தாரென்றும் கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்தியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

குமாரசாமி மடத்துக்குச் சொந்தமான ருத்ராக்ஷக்காடுகள் இமயமலைச்சாரலில் நேபாளத்தில் இருந்தன. மோரங்கி(முகரங்கி) என்னும் இடத்திலும் காசி மடத்தைன் கிளை ஒன்று அமைந்தது. வாகீசத் தம்பிரான் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது.

கேதார கட்டத்திலுள்ள கேதாரலிங்கத்தை முகம்மதியர் மறைத்திருந்தனரென்றும் குமரகுருபர முனிவர் அம்மூர்த்தியை வெளிப்படுத்தி ஆலயத்தை கட்டி தின வழிபாட்டை நடத்தச் செய்தார். இன்றும் ஆகம விதிப்படி தமிழ்நாட்டு முறையில் சில திருவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன. இக்கோயில் காசி மடத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது.

காசித்துண்டி விநாயகர் பதிகம், காசிக் கலம்பகம் இரண்டும் குமரகுருபரர் காசியில் இருந்தபோது இயற்றப்பட்டன.

மறைவு

குமரகுருபரர் தனது குருவைச் சந்திக்க வேண்டி ஒருமுறை மதுரைக்குச் சென்றார். காசிக்குத் திரும்பி, இறுதிவரை அங்கேயே வசித்தார்.

குமரகுருபரர் மே 1668-ல் வைகாசி முழுநிலவையடுத்த மூன்றாம் நாள் மகாசமாதியடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேய்பிறை திருதியையில் குமரகுருபரரின் குருபூஜை நடபெறுகிறது.

நினைவுகூறல்

கயிலாசபுரத்தில் குமரகுருபரர் பிறந்த வீட்டுப் பகுதி குமரகுருபரர் மடமாக ஆகஸ்ட் 31, 1952-ல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 27, 2010 அன்று குமரகுருபரர் நினைவாக ஒரு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது.

பாடல் நடை

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு
   செம்பஞ்சி யின்குழம்பால்
தெள்ளமுது இறைக்கும் பசுங்குழவி வெண்திங்கள்
    செக்கர்மதி யாக்கரைபொரும்
வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை
    வாணிநதி யாச்சிவபிரான்
மகுடகோ டீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு
    மரகதக் கொம்புகதிர்கால்
மீன்ஒழுகு மாயிரு விசும்பில் செலும்கடவுள்
    வேழத்தின் மத்தகத்து
வீற்றிருக் கும்சேய் இழைக்கும் பசுங்கமுகு
     வெண்கவரி வீசும்வாசக்
கான்ஒழுகு தடமலர்க் கடிபொழில் கூடல்வளர்
     கவுரியன் மகள்வருகவே
கற்பக அடவியில் கடம்பாடு அவிப்பொலி
       கயல்கண்நா யகிவருகவே

நீதிநெறி விளக்கம்

அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல் இசையும் நாட்டும் - உறும் கவல் ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை

தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை

மறை நாறும் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப்
பிறை நாறும் சீறடி அம் பெதாய் - நறை நாறும்
நாள் கமலம் சூடேம் நறுந் துழாய் தேடேம் நின்
தாள் கமலம் சூடத் தரின்

பண்டார மும்மணிக்கோவை

என்செய லாலொன்றும் யான்செய்வ
தில்லை யெனக்கவமே
புன்செய லாம்வினைப் போகமுண்
டாவதென் போதமில்லேன்
தன்செய லாயவெல் லாமாசி
லாமணிச் சம்பந்தநின்
நன்செய லாயினு மென்செய
லாச்செய்யு நானென்பதே.

நூல்கள்

  • கந்தர் கலிவெண்பா
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  • மதுரைக் கலம்பகம்
  • நீதிநெறி விளக்கம்
  • திருவாரூர் நான்மணிமாலை
  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  • சிதம்பர மும்மணிக்கோவை
  • சிதம்பரச் செய்யுட்கோவை
  • பண்டார மும்மணிக் கோவை
  • காசிக் கலம்பகம்
  • சகலகலாவல்லி மாலை
  • மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
  • மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
  • தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
  • கயிலைக் கலம்பகம் (பிரதி கிடைக்கவில்லை)
  • காசித் துண்டி விநாயகர் பதிகம் (பிரதி கிடைக்கவில்லை)

குமரகுருபரரைப் பாடியோர்

உசாத்துணை


✅Finalised Page