under review

பல்லடம் மாணிக்கம்

From Tamil Wiki
Revision as of 21:10, 2 February 2024 by ASN (talk | contribs) (Para Added and Edited: Images Added; Link Created: Proof Checked.)
பல்லடம் மாணிக்கம்
புலவர் பல்லடம் மாணிக்கம்

பல்லடம் மாணிக்கம் (புலவர் மாணிக்கம்; புலவர் பல்லடம் மாணிக்கம்) (பிறப்பு: நவம்பர் 23, 1936) கவிஞர், எழுத்தாளர், திரைப்பாடலாசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். வணிகத்தில் ஈடுபட்டார். தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட பற்றால், விருத்தாசலத்தில் ‘தமிழ் நூல் காப்பகம்’ என்னும் தனியார் நூலகத்தை நிறுவினார்.

பிறப்பு, கல்வி

பல்லடம் மாணிக்கம், நவம்பர் 23, 1936 அன்று, கோவை மாவட்த்தில் உள்ள பல்லடத்தில் சாமி-வள்ளியம்மை இணையருக்குப் பிறந்தார். கணக்கம்பாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். உயர்நிலைக் கல்வியை பல்லடத்தில் உள்ள கழக உயர்நிலைப் பள்ளியில் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று புலவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பல்லடம் மாணிக்கம் பதினெட்டு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின் செங்கல் சூளை வணிகத்தில் ஈடுபட்டார். மணமானவர். மனைவி: திலகவதி. மகள்கள்: முத்துச்செல்வி, கவிதா.

இலக்கிய வாழ்க்கை

பல்லடம் மாணிக்கம், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி ஆண்டு மலர்களிலும் இதழ்களிலும் கவிதை, கட்டுரைகளை எழுதினார். பல்லடம் மாணிக்கத்தின் முதல் கவிதைத் தொகுப்பு, ’ஆயிரம் பூ’ 1961-ல் வெளியானது. கா. அப்பாத்துரை அணிந்துரையும், பாரதிதாசன் சிறப்புரையும் அளித்து ஊக்குவித்தனர்.

அமைப்புச் செயல்பாடுகள்

பல்லடம் மாணிக்கம், விருத்தாசலத்தில், ‘நிறங்கள்’ என்ற இலக்கிய அமைப்பை த. பழமலய் போன்றோருடன் இணைந்து நடத்தினார்.

பல்லடம் மாணிக்கம், விருத்தாசலத்தில், ‘திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார். இந்த அமைப்பின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே திருக்குறள் சார்ந்த தலைப்புகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி உள்படப் பல போட்டிகளை நடத்தினார்.

திரை வாழ்க்கை

பல்லடம் மாணிக்கம், இயக்குநர் ஏ.கே. வேலன் இயக்கத்தில் வெளியான ‘தேவி’ திரைப்பத்திற்குப் பாடல்கள் எழுதினார். சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் மதுரை சோமு ஆகியோருக்காகச் சில பக்திப் பாடல்களை எழுதினார்.

இதழியல்

பல்லடம் மாணிக்கம் திருக்குறள் மீது கொண்ட பற்றால், 1999-ல், ‘வள்ளுவம்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.

அரசியல்

பல்லடம் மாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கட்சிப் பணியாற்றினார், பல கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார்

தமிழ் நூல் காப்பகம்

தமிழ் நூல் காப்பகம்

பல்லடம் மாணிக்கம், 1954 முதல் 1956 வரை பல்லத்தில் கிளை நூலகராகப் பணியாற்றினார். அந்த ஆர்வத்தினால் தனது வாசிப்புக்காகப் பல்வேறு நூல்களைச் சேகரிக்கத் தொடங்கினார். லட்சம் நூல்கள் சேர்ந்த பிறகு அதனைப் பாதுகாக்கும் வகையில், தனது இல்லத்தை அடுத்துள்ள பகுதியில், தமிழ் நூல் காப்பகம் என்னும் தனியார் நூலகத்தை நிர்மாணித்தார். அகராதிகள், பண்டைய இலக்கண, இலக்கிய நூல்கள், முனைவர் பட்ட ஆய்வேடுகள், இதழ்கள் என்று பல வகை நூல்களின் ஆவணமாய் தமிழ் நூல் காப்பகம் அமைந்தது.

இந்நூலகத்தில், தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் நேயர்களுக்கும் பயன்படக் கூடிய தமிழ்க் கலைக் களஞ்சியங்கள், பல்கலைக்கழகங்களின் வெளியீடுகள், பல்சமய நூல்கள், சித்தாந்த சாத்திர நூல்கள், பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யப் பிரபந்தம், இந்தியப் பேரிதிகாசங்களான வால்மீகி ராமாயணம், மகாபாரதம் மற்றும் கம்பன், இளங்கோவடிகள், பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோரின் படைப்புகள், பல்வேறு பதிப்புகள், ஆய்வு நூல்களின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன

மதிப்பீடு

கவிஞரும் ஆசிரியருமான பல்லடம் மாணிக்கம், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட தனியார் நூலகத்தை அமைத்த முன்னோடித் தமிழார்வலர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

பல்லடம் மாணிக்கம் - வாழ்க்கை வரலாற்று நூல், கலைஞன் பதிப்பக வெளியீடு

ஆவணம்

கவிஞர் பல்லடம் மாணிக்கத்தின் வாழ்க்கை வரலாற்றை ஏ. கவிதா ஆவணப்படுத்தியுள்ளார். கலைஞன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.

நூல்

  • ஆயிரம் பூ (கவிதைத் தொகுப்பு)

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.