first review completed

திருக்கோவையார்

From Tamil Wiki
Revision as of 08:56, 29 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )

திருக்கோவையார் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை. திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் இந்நூல் அழைப்படுகிறது. சைவ சமய சாதகர்களால் ஆரணம் (வேதம்) எனவும் அழைக்கப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு

திருக்கோவையாரை இயற்றிய மாணிக்கவாசகர் மதுரையை அடுத்த திருவாதவூரில் பிறந்தவர். இவர் திருவாதவூரார் என்று முதலில் அழைக்கப்பட்டார். அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர். 'தென்னவன் பிரமராயன்’ என்ற விருது பெற்றவர். ஆளுடைய அடிகள், அழுது அடியடைந்த அன்பர் என்ற பெயர்களாலும் குறிக்கப்படுபவர். திருவாசகத்தை இயற்றியபின் இறைவன் மாணிக்கவாசகரிடம் , பாவை பாடிய வாயால் கோவை பாடும்படி வேண்ட, அவர் திருக்கோவையாரையும் பாடியதாகக் கூறப்படுகிறது.

பதிப்பு

திருக்கோவையார் 1841-இல் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர் புதுவை நயநப்ப முதலியார்.இந்தப் பதிப்பின் பிரதியே தமிழ் மின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

திருக்கோவையாரில் தலைவனும் தலைவியும் வெவ்வேறு இடங்களில் பிறந்து, ஒன்று கூடிக் காதலித்து மணக்கிறார்கள். ஒருவரை ஒருவர் காணுதல், காணும் சூழல், உள்ளம் கலத்தல், தோழன் தோழி உறவு, தலைவனுடன் தலைவி செல்லுதல் எனப் பல நிகழ்ச்சிகள் கதைபோற் சொல்லப்படுகின்றன. உள்ளத்து உணர்வுகளும் உளவியல் சார்ந்த செய்திகளும் தரப்படுகின்றன. சிற்றம்பலம் என்னும் தில்லையைப் போற்றுவதால் திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது.திருக்கோவையார் 400 பாடல்களைக் கொண்டது. கீழ்காணும் 25 அதிகாரங்களை கொண்டுள்ளது;

  1. இயற்கைப் புணர்ச்சி (18பாடல்கள்)
  2. பாங்கற் கூட்டம் (30 பாடல்கள்)
  3. இடந்தலைப் பாடு (1பாடல்)
  4. மதியுடம்படுத்தல் (10பாடல்கள்)
  5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் (2பாடல்கள்)
  6. முன்னுற வுணர்தல் (1பாடல்)
  7. குறையுற வுணர்தல் (4பாடல்கள்)
  8. நாண நாட்டம் (5பாடல்கள்)
  9. நடுங்க நாட்டம் (1பாடல்கள்)
  10. மடல் திறம் (9பாடல்கள்)
  11. குறை நயப்புக் கூறல் (8பாடல்கள்)
  12. சேட்படை (26பாடல்கள்)
  13. பகற்குறி (32பாடல்கள்)
  14. இரவுக் குறி (33பாடல்கள்)
  15. ஒருவழித் தணத்தல் (13பாடல்கள்)
  16. உடன் போக்கு (56பாடல்கள்)
  17. வரைவு முடுக்கம் (16பாடல்கள்)
  18. வரை பொருட் பிரிதல் (33பாடல்கள்)
  19. மணம் சிறப்புரைத்தல் (9பாடல்கள்)
  20. ஓதற் பிரிவு (4பாடல்கள்)
  21. காவற்பிரிவு (2பாடல்கள்)
  22. பகை தணி வினைப் பிரிவு (2பாடல்கள்)
  23. வேந்தற்கு உற்றுழிப் பிரிவு(16பாடல்கள்)
  24. பொருள் வயின் பிரிவு (20பாடல்கள்)
  25. பரத்தையிற் பிரிவு (49பாடல்கள்)

மொழியாக்கம்

திருக்கோவையார் முனைவர் T.N. ராமச்சந்திரனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

சிறப்புகள்

திருக்கோவையார் உலகியலுடன் இறையியலையும் இணைக்கும்தன்மை கொண்டது. சைவ சித்தாந்தக் கருத்துகள் பல இதில் விரவி வருகின்றன.

"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்"

(திருக்குறள், நால்வேத முடிவு, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரமும் (மூவர் தமிழும்), முனிவர்கள் மொழியும், திருக்கோவையாரும், திருவாசகமும், திருமந்திரமும் ஒரு வாசகமே (உணர்த்தும் உண்மைப் பொருள் ஒன்றே) என்று ஓர் வெண்பா கூறுகிறது.

பாடல் நடை

கருங்கண்ணி குறிப்பறியேன்

    மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லல்
 கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணிகு றிப்பறியேன்.
 பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாளெனைப் புல்லிக் கொண்டே
 பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளின்றென் பைங்கிளியே’.

காமனின் வெற்றிக்கொடி

திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளர்கின்றதே’.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.