பொய்யடிமையில்லாத புலவர்கள்

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பொய்யடிமை இல்லாத புலவர்கள் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சேக்கிழார், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள் தவிர்த்து தொகையடியார்கள் ஒன்பதின்மரைப் பற்றி பாடியுள்ளார்.    ‘பொய்யடிமையில்லாத புலவர் புராணம்' என்பது அவற்றில் ஒன்று.

பொய்யடிமை இல்லாத புலவர்கள் - விளக்கம்

பொய்யடிமை இல்லாத புலவர்கள் நுண்ணிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்தும், செவ்விய நூல்கள் பலவற்றைக் கற்றும் மெய்யுணர்வின் பயன் இதுவே என்று புரிந்தவர்கள். கண்டத்தில் விஷத்தை உடைய சிவபெருமானின் திருவடியைச் சரண் புகுந்தவர்கள்.

சித்தத்தை சிவன் பால் வைத்து அர்ப்பணித்து வாழும் பெருமை மிக்கவர்களான இவர்கள், முக்காலமும் சிவனையே தொழுது, சிவநாமத்தையே உள்ளன்போடு எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். தவறாது வேத முறைப்படியிலான வேள்விகளைச் செய்து சிவனை வழிபட்டு வருவார்கள். உலகத்தின் தலைவரான சிவபெருமானை அன்றி, பிறரைப் புகழ்ந்து பாடாத சொல் திறம் மிக்கவர்கள். பெருமைக்குரியவர்கள்.

இத்தகைய பொய்யடிமையில்லாத புலவர்களுடைய திருவடிகள், தலையின்மேற் சூட்டிக் கொண்டு வணங்கத் தக்கவை.

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்

மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்

மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆள் ஆனார்

பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்


பொற்பு அமைந்த அரவு ஆரும் புரிசடையார் தமை அல்லால்

சொல் பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற

பெற்றியினில் மெய் அடிமை உடையார் ஆம் பெரும் புலவர்

மற்று அவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள்

குரு பூஜை

பொய்யடிமையில்லாத புலவர்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று நடைபெறுகிறது.

உசாத்துணை