under review

பெருமிழலைக் குறும்ப நாயனார்

From Tamil Wiki
Revision as of 23:04, 11 April 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பெருமிழலைக் குறும்ப நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

பெருமிழலைக் குறும்ப நாயனார் , சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

குறும்ப நாயனார் ஒரு சிற்றரசர். மிழலை நாட்டை, பெருமிழலை என்பதைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார். சிறந்த சிவபக்தராக விளங்கிய இவர், சிவனடியார்களைப் போற்றி ஆதரித்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

குறும்ப நாயனார், நம்பி ஆரூரரான சுந்தரர் மீது அன்பு கொண்டவராக இருந்தார். சுந்தரரது திருவடிகளைத் தொழுதும், அவர் நினைவை மனதால் போற்றியும், அவர் புகழை வாயினால் வாழ்த்தியும் வழிபட்டு வந்தார். சுந்தரரைப் போற்றிப் பணிதலே சிவபெருமானை அடைவதற்கான நெறியாகக் கொண்டு வாழ்ந்தார். சுந்தரரை மனதால் துதித்தும், சிவபெருமானின் ஐந்தெழுத்தை ஓதியும் எப்பொழுதும் சிவத்தில் திளைத்திருந்தார். இவ்வகை வழிபாட்டால் அஷ்டமா சித்திகள் கைவரப் பெற்றார்.

பெருமிழலைக் குறும்ப நாயனார், சிவபெருமான் அருளால் சுந்தரர் கயிலைக்கு எழுந்தருள இருப்பதைத் தனது ஞான சித்தியால் உணர்ந்தார். சுந்தரர் இல்லாமல் தான் மட்டும் புவியில் வாழ அவர் விரும்பவில்லை.   ‘சுந்தரர் கயிலையை அடையும் முன்னர், நானும் எனது யோக சக்தியால் கயிலையை அடைவேன்’ என்று மனதில் உறுதி பூண்டார். யோகத்தில் ஆழ்ந்தார்.

சுழுமுனையிலிருந்து ஜீவநாடியை எழுப்பி, சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை போன்ற சக்கரங்களைக் கடந்தார். பிரமரந்திரத்தில் நிலைத்து, கபாலத்தைத் திறந்து தன் உடலைத் துறந்தார். திருக்கயிலையை சுந்தரர் வந்தடைவதற்கு முன்பே சென்று சிவபெருமானின் திருவடியில் இணைந்தார்.

பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

பெருமிழலைக் குறும்ப நாயனாரின் சிவத்தொண்டு

தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக்

கொண்டு செல்ல வரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்து அடைவார்

வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்

புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்.

சுந்தரரைப் போற்றி வணங்கி அஷ்டமா சித்தி பெறுதல்

நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே

ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதன்பின்

மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு எழுத்தும்

கேளும் பொருளும் உணர்வும் ஆம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்.

பெருமிழலைக் குறும்ப நாயனா யோகத்தால் சிவபதம் பெற்றது

மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர்

நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து

கண்ணிர்கு அரிய மணி கழிய வாழ்வோர் போல வாழேன் என்று

எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார்.


நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற் கொண்டு

காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு

ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப

மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அணைந்தார்.

குரு பூஜை

பெருமிழலைக் குறும்ப நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆடி மாதம், சித்திரை  நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.